போர்ட் விலா (Port Vila) என்பது வனுவாட்டுவின் தலைநகரமும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் எஃபாட்டே தீவில் அமைந்துள்ளது.
இந்நகரத்தின் மக்கள்தொகை 44,040 (2009 கணக்கெடுப்பு) ஆகும்.[1] இது 1999 கணக்கெடுப்பை (29,356) 50% அதிகமானதாகும். 2009 ஆம் ஆண்டில் போர்ட் விலாவின் மக்கள்தொகை நாட்டின் மக்கள்தொகையின் 18.8% ஆகவும், எஃபாட்டே தீவின் மக்கள்தொகையின் 66.9% ஆகவும் இருந்தது. இங்குள்ள பெரும்பாலானோர் மெலனீசியர்கள் ஆவர். இவர்களை விட சிறிய அளவில் பொலினீசிய, ஆசிய, ஆத்திரேலிய, ஐரோப்பிய நாட்டவரும் வசிக்கின்றனர்.
எஃபாட்டே தீவின் தெற்குக் கரையில் அமைந்துள்ள போர்ட் விலா, வனுவாட்டுவின் முக்கிய பொருளாதார, மற்றும் வணிக மையமாக விளங்குகின்றது.
2015 மார்ச் 13 இல் வனுவாட்டுவில் இடம்பெற்ற பேம் சூறாவளியினால் போர்ட் விலா பெரும் சேதத்துக்குள்ளானது.[2]
வனுவாட்டுவின் முக்கிய துறைமுகம் போர்ட் விலாவில் அமைந்துள்ளது. பவர்ஃபீல்டு பன்னாடு வானூர்தி நிலையமும் (VLI) இங்குள்ளது.[3]
பிசுலாமா மொழி இங்கு பெரும்பான்மையானோரால் பேசப்படுகிறது. அத்துடன், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளும் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளன. 90% மக்கள் கிறித்தவர்கள் ஆவர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பொது ஆட்சிமுறைத் திருச்சபையையும் (Presbyterian), ஏனையோர் கத்தோலிக்கரும், மெலனீசியத் திருச்சபையைச் சார்ந்தோரும் ஆவர்.[4]