பொறுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொறுமை (Patience) என்பது துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். மற்றவர் இகழும் போதும், நீண்ட தாமதங்கள் ஏற்படும் போதும், பிரச்சனைகள் ஏற்படும் போதும், தொடர்துன்பங்கள் வரும் போதும், சில அசாதரண சூழ்நிலைகளிலும் அமைதியாக இருக்கும் குணம் ஆகும். இந்த குணம் பல்வேறு உடல் நோய்களில் இருந்தும், மன நோய்களில் இருந்தும் பாதுகாப்பதாக கருதப்படுகிறது.

அறிவியல் பார்வை[தொகு]

பரிணாம உளவியலிலும் அறிவாற்றல் நரம்பு அறிவியலிலும் பொறுமையைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மனிதனும் விலங்குகளும் கொண்டிருக்கும் முடிவு செய்யும் திறமையைப் பற்றி ஆராய்ந்த போது, சிறிது நேரம் காத்திருந்தால் சிறிய நன்மை அடையலாம் என்றும், நீண்ட காலம் காத்திருந்தால் பெரிய நன்மைகளை அடையலாம் என்றும் இரண்டு விருப்பத் தேர்வைக் கொடுக்கும் போது, சிறிது நேரம் காத்திருந்து சிறிய நன்மை என்பதையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள். இதை ஆன்மிகத்தில் சிற்றின்பம் என்றும் பேரின்பம் என்றும் விளக்குகிறார்கள். தாமதமாகும் இணைய தளங்களைக் காட்டிலும், விரைவில் ஏற்றப்படும் இணைய தளங்களையே பயனர்கள் விரும்புவதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

நூல்களில் குறிப்புகள்[தொகு]

திருக்குறள்[தொகு]

திருக்குறளில், பொறையுடைமை என்ற அதிகாரத்தில் பொறுமையின் பெருமைகளை திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.

எடுத்துக்காட்டாக:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
குறள் விளக்கம்:
தன்னைத் தோண்டுபவரை பொறுத்துத் தாங்கிக் கொள்ளும் நிலம்போல, தம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் முதன்மையான அறமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறுமை&oldid=3762566" இலிருந்து மீள்விக்கப்பட்டது