பொருட்களின் நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொருட்களின் நிலை மாற்றங்கள் தொடர்பான பெயர்களை இப்படம் காட்டுகிறது.

பொருட்களின் நிலை என்பது ஒரு பொருள் காணப்படக்கூடிய பல்வேறு நிலைகளுள் ஒன்றைக் குறிக்கும். பொதுவாக இயற்பியலின்படி பொருட்கள் மூன்று நிலைகளில் இருக்கக்கூடும். அவை, திண்மம், நீர்மம், வளிமம் என்பன. திண்ம நிலையில் ஒரு பொருளின் கனவளவும், வடிவமும் மாறாமல் இருக்கும். நீர்ம நிலையில் கனவளவு மாறாமல் இருந்தாலும், வடிவம் அதைக் கொண்டிருக்கும் கொள்கலனின் வடிவத்தை எடுக்கும். வளிம நிலையில் பொருட்களுக்கு நிலையான கனவளவோ அல்லது வடிவமோ கிடையாது. கிடைக்கக்கூடிய இடம் முழுதும் இது பரந்து காணப்படும்.

அண்மைக் காலத்தில், பொருளொன்றின் நிலைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் மூலக்கூறுகளுக்கு இடையிலான தொடர்புகளின் அடிப்படையில் விளக்கப்படுகின்றன. இதன்படி திண்மம் என்பது மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி அவற்றை நிலையாக வைத்திருக்கும் ஒரு நிலை ஆகும். நீர்ம நிலையில் மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி அவற்றுக்கு இடையிலான தூரத்தை மாறாமல் வைத்திருந்தாலும், அவற்றை ஒரு நிலையான தொடர்பில் வைத்திருப்பதில்லை. வளிம நிலையில் மூலக்கூறுகளுக்கு இடையில் உள்ள கவர்ச்சி தனித்தனி மூலக்கூறுகளின் இயக்கத்தில் குறைவான தாக்கத்தையே கொண்டிருக்கும். மிக உயர்ந்த வெப்பநிலைகளில் உயர் அயனாக்கம் அடையும் வளிமங்களின் மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி விசைகளும் தள்ளுவிசைகளும் தனித்துவமான இயல்புகளை உருவாக்குகின்றன. இதனால், இந்நிலை பொருளின் நான்காம் நிலை எனக் கொள்ளப்படுகின்றது. இது பிளாசுமா நிலை எனப்படும்.

பொருளின் நான்கு நிலைகள்[தொகு]

திண்மம்[தொகு]

திண்மம் என்பது பொருட்களின் நான்கு நிலைகளுள் ஒன்றாகும். அமைப்புரீதியான உறுதித்தன்மை மற்றும் வடிவம் மற்றும் கனஅளவு ஆகியவற்றில் மாற்றங்களுக்கு எளிதில் உட்படாத் தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றுள்ள நிலையாகும். ஒரு திரவத்தைப் போல கொள்கலனின் வடிவத்தைப் பெறக்கூடிய திரவத்தன்மையோ அல்லது ஒரு வாயுவைப் போல தனக்களிக்கப்பட்ட கன அளவு முழுமையையும் நிரப்பிக்கொள்ளும் விதத்தில் விரிவடையும் தன்மையோ திண்மத்திற்கு இல்லை. திண்மத்தில் உள்ள அணுக்களானது ஒன்றோடு ஒன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஒழுங்கான படிக வடிவமுடைய திண்மங்களில் ஒழுங்கான வடிவியல் மாதிரிகளைப் போன்றும் படிக வடிவமற்ற திண்மங்களில் ஒழுங்கற்ற விதத்திலும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருட்களின்_நிலை&oldid=2293714" இருந்து மீள்விக்கப்பட்டது