பேச்சு:மிதிவெடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எனக்குத் தெரிந்தவரை கட்டுரையில் சில தவறுகளுள்ளன. அல்லது மற்றவர்களுக்கு எளிமையாக விளங்கும்வண்ணம் எழுதப் புறப்பட்டதால் அப்படித் தோன்றலாம். ஆனால் கலைக்களஞ்சியத்தில் கதை சொல்லிக் கொண்டிருக்க முடியாதல்லவா?

1.கண்ணிவெடி என்பதற்கான வரைவிலக்கணம் இன்னும் தெளிவாக்கப்பட வேண்டும். நிலத்தினடியில் புதைக்கப்படுபவை மட்டுமே கண்ணிவெடிகளல்ல. புதைக்கப்படாமல் பயன்படுத்தப்படும் கண்ணிவெடிகள் பலவுள்ளன. உடனடி உதாரணம் கிளைமோர். இதைவிடவும் இடறுகம்பியுடன் இணைத்துப் பயன்படுத்தும் கண்ணிவெடிகள் என்று பலவுள்ளன. தமிழில் 'கண்ணி' என்ற சொல்லுக்கான பொருள்தான் நேரடியாகக் கண்ணிவெடி என்பதை விளக்கவும் பொருந்தும். எதிரிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கோடு அவனுக்குத் தெரியாமல் வைக்கப்படும் பொறிவெடிகளைக் கண்ணிவெடிகள் எனலாம். (நடைமுறையில் புறா, கானாங்கோழி, கெளதாரி, முயல், காட்டுக்கோழி போன்றவற்றுக்கு வைக்கும் பொறியை 'கண்ணி' என்றே சொல்வதுண்டு).

2. TNT, RDX, PETN என்பன மூல வெடிமருந்துகளின் பெயர்கள். எந்தக் கண்டிவெடியிலும் (ஏன் எந்த வெடிபொருட்களிலும் என்றுகூடச் சொல்லலாம்) இவை தூய்மையான நிலையில் (அதாவது கலப்பின்றி தனியே) பயன்படுத்தப்படுவதில்லை. பொதுவாக TNT உடன் ஏனைய ஏதோவோர் உயர்சக்தி வெடிமருந்தை குறிப்பிட்ட வீதத்தில் கலந்து பயன்படுத்துவார்கள். HMX, Tetryl போன்றவையும் உயர்சக்தி வாய்ந்த மூல வெடிமருந்துகளே. இக்கட்டுரையில் தனியே மூன்று பெயர்களை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது, அம்மருந்துகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்ற தோற்றப்பாட்டைத் தருகிறது. அம்மருந்துகள் தனித்துப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதோடு இவற்றையும் விட வேறும் பல வெடிமருந்துகள் கண்ணிவெடிகளிற் பயன்படுத்தப்படுகின்றன. எ.கா: பாகிஸ்தான் தயாரிப்பு துருப்பெதிர்ப்புக் கண்ணிவெடியில் tetrytol எனும் வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறது. இது Tetryl, TNT ஆகிய வெடிமருந்துகளின் கலவையாகும். அதுபோல் சீனத்தயாரிப்பு மிதிவெடியில் CB2 (Composition B - 2) எனப்படும் RDX, TNT (3:2) என்பன கலக்கப்பட்ட வடிவம் பயன்படுத்தப்படுகிறது.

3.fragmented mines என்பதை 'சிதறுண்ட கண்ணிவெடி' என்று தமிழாக்கம் செய்வது சரியாகத் தெரியவில்லை. சிதறுதுண்டுகளைக் கொண்ட கண்ணிவெடி என்ற கருத்து வரக்கூடியதாக ஒருவடிவத்தைப் பயன்படுத்த வேண்டும். சாதாரண மிதிவெடிகளில் சிதறுதுண்டுகள் இருப்பதில்லை, தனியே வெடிமருந்து மட்டுமே இருக்கும். அம்மருந்து வெடிக்கும் அதிர்வினால் அம்மிதிவெடியை மிதித்த கால் சிதைக்கப்படும். சிதறுதுண்டுகளைக் கொண்ட கண்ணிவெடிகள் அனைத்தையும் fragmented mines என்றே அழைப்பர். கிளைமோர்க் கண்ணிவெடி ஓர் எடுத்துக்காட்டு. இக்கண்ணிவெடிகள் வெடிக்கும்போது அதிலுள்ள சிதறுதுண்டுகள் பறந்துசென்று இலக்கைத் தாக்கிச் சேதத்தை விளைவிக்கும். அதேபோல் ஏற்கனவே கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மேலெழுந்து வெடிக்கும் கண்ணிவெடிகளையும் குறிப்பிடலாம்.

4.கண்ணிவெடிகள் உலோகக் கலனில் அடைக்கப்பட்டிருக்கும் என்று சொல்வதும் தவறு. குறிப்பாக மிதிவெடிகள் (மனிதர்கள் மிதிக்கும்போது வெடிப்பவை) உலோகத்தால் செய்யப்படுபவையல்ல. அவற்றின் உடல் பிளாஸ்ரிக்கினால் செய்யப்படுகின்றன. தற்காலத்தில் பயன்பாட்டிலிருக்கும் எந்தவொரு மிதிவெடியும் உலோக உடலைக் கொண்டதன்று. சில ஊர்தியெதிர்ப்புக் கண்ணிவெடிகள் உலோக உடலைக் கொண்டுள்ளன. ஆனால் பிளாஸ்ரிக்கினாலான உடலைக்கொண்ட ஊர்தியெதிர்ப்புக் கண்ணிவெடிகளுமுள்ளன. நிலத்தின்கீழ் புதைக்கப்படும் கண்ணிவெடிகளுக்கு இயன்றளவு உலோகங்களைக் குறைக்க பல உற்பத்தியாளர்கள் கவனமெடுப்பதைக் குறிப்பிட வேண்டும். உலோக உணர் கருவிகளினால் கண்டுபிடிக்கப்படும் சாத்தியத்தைக் குறைப்பதே அதன் முக்கிய நோக்கமாகும்.

5.ஊர்தியெதிர்ப்புக் கண்ணிவெடியில் பத்துக் கிலோ வெடிமருந்து உள்ளதென்பது உண்மை. உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படும் ஊர்தியெதிர்ப்புக் கண்ணிவெடியாக அமெரிக்கத் தயாரிப்பு M 15 ஐச் சொல்லலாம். இதில் பத்து கிலோ வெடிமருந்து (RDX, TNT கலவை) உள்ளது. சிறிலங்கா இராணுவம் இதை மட்டுமே பயன்படுத்துகிறது. ஆனால் அது வெடித்தால் அடுக்குமாடிக் கட்டடம் தூள்தூளாக நொருங்குமென்பது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட கூற்று. ஓர் ஊர்தியைக்கூட அது முற்றாகச் சிதைக்காது. இவ்வளவு ஏன், ஊர்தியில் பயணிக்கும் எல்லோரையும் கொல்லுவதோ காயப்படுத்துவதோகூட நிச்சயமற்றது.

  • மேற்கண்ட குறிப்புகள் கட்டுரையை மேலும் செம்மைப்படுத்தும் நோக்கோடு மட்டுமே எழுதப்பட்டவை.

--வசந்தன் 15:15, 15 பெப்ரவரி 2009 (UTC)

வசந்தன், கட்டுரையை முதலில் சீராக்குவதற்கு கட்டுரைப் பக்கத்தில் இருந்தவற்றைப் பேச்சுப் பக்கதிற்கு நகர்த்துகிறேன். பின்னர் மிதிவெடி அபாயக் கல்வி கட்டுரையில் இருந்ததை இங்கு நகர்த்திக் கொள்கிறேன்.

மிதிவெடிகள் நிலத்தில் ஒரு சில செண்டிமீட்டர் ஆழத்திலோ அல்லது நிலத்திலோ அல்லது நிலத்தின் மேலோ வைத்திருக்கப்படும் வெடிபொருட்களாகும். வெடித்தலானது வாகனங்கள் அல்லது மனிதர்களால் அல்லது மிருகங்களாலோ ஏற்படுத்தப் படுகின்றது. இவை பெரும்பாலும் நாட்டின் எல்லைப் புறங்களிலும் யுத்தம் நடைபெறும் இடங்களில் பெருமளவில் பயன் படுத்தப்படுகின்றன. இதைக் கண்ணிவெடிகள் என்றும் அழைப்பதுண்டு.

மிதிவெடி வகைகள்[தொகு]

பொதுவான வகைகள்[தொகு]

பூமிக்கடியில் புதைக்கப்பட்டு மேலே நடமாடும் உயிரினங்களாலோ, ஊர்திகளாலோ தூண்டப்பட்டு சேதம் விளைவிக்கக்கூடிய இவை பொதுவாக இருவகைப்படும்.

 1. மனிதர்களுக்கு எதிரான வெடிகள் (antipersonnel mines) (மனிதக்கண்ணிகள்)
 2. ஊர்திகளுக்கு எதிரான (anti tank mines) வெடிகள். (ஊர்திக்கண்ணிகள்)

இவை ஒரு சிறிய உலோகக கலனில் (கிட்டத்தட்ட பள்ளிச் சிறுவர்களின் மதிய உணவுப் பாத்திரம் அளவில்) இருக்கும். உள்ளே அழுத்தத்தினால் வெடிக்கக்கூடிய வெடிமருந்துகள் திணிக்கப்பட்டிருக்கும். மூன்று வித வேதிப்பொருள்கள் இவற்றில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன; டிஎன்டி, ஆர்டிஎக்ஸ், பிஇஈடிஎன் என்பன இவை. மேலே ஒரு சுருள்வில்லும், காலடி அழுத்த ஒரு உலோகத்தகடும் பொதிக்கப்பட்டிருக்கும்.

மனிதர்களுக்கு எதிரான வெடிகள்[தொகு]

மனிதக்கண்ணிகள் பெரும்பாலும் பூமிக்கு வெகு அருகிலேயே புதைக்கப்படும் 10 கிராமிலிருது இருநூற்றம்பது கிராம் வரை வெடிமருந்து உடைய அளவில் சிறியதான இவை இரண்டு கிலோ எடை அழுத்தத்தாலேயே வெடிக்கக் கூடியவை.

ஊர்திகளுக்கு எதிரான (anti tank mines) வெடிகள்[தொகு]

ஊர்திக்கண்ணிகள் சற்று ஆழத்தில் புதைக்கப்படும். சில சமயங்களில் இவற்றில் பத்து கிலோ வரை வெடிமருந்துகள் திணிக்கப்படும் - வெடித்தால் ஒரு பெரிய அடுக்குமாடிக் கட்டிடமே தூள்தூளாகக் கூடும், இவற்றின் மேல் நடக்கும் மனிதர்களாலோ கால்நடைகளாலோ இவை தூண்டப்படுவதில்லை. இவற்றை வெடிக்கவைக்க குறைந்தது 100 கிலோ எடை அழுத்தம் தேவை.

சேத வகைகள்[தொகு]

மிதிவெடி சேதம் ஏற்படுத்தும் நிலைக்கேற்ப அதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

 1. ஒற்றைப் புதை மிதிவெடிகள் (single ballast mines)
 2. சிதறுண்ட மிதிவெடிகள் (fragmented mines)

ஒற்றைப் புதை மிதிவெடிகள்[தொகு]

ஒற்றைக் கண்ணிவெடிகள் பெரும்பாலும் சாதாரணமானவை, இவை குறைந்த அழுத்த்தால் அங்கேயே வெடித்து, மேலே அழுத்தும் பொருளுக்குச் சேதம் விளைவிக்கக் கூடியவை.

சிதறுண்ட மிதிவெடிகள்[தொகு]

சிதறுண்ட கண்ணிவெடிகள்தான் மிகவும் சிக்கலானவையும் அபாயகரமானவையும். இவற்றின் மேலே செல்லும் உயிரியால் அல்லது வாகனத்தால் இவற்றின் இழுவிசை தூண்டப்படுகின்றது, ஒன்றுக்கு மேற்பட்ட வெடிகள் இந்த இழுவிசையால் இவை செயல்திறன் பெருகின்றன. கிட்டத்தட்ட 50 மீட்டர் சுற்றளவில் பல வெடிகள் ஒரே சமயத்தில் வெடிக்கக் கூடும். இவற்றில் சில வெடிப்பதற்கு முன்னால் தரையிலிருந்து மேலெழும்பும், கிட்டத்தட்ட ஒரு 5 வயது சிறுவனின் தலையுயரத்திற்கு வந்து வெடிக்கும். தரைக்கு மேல் வெடிப்பதால் இவற்றின் சேத அளவு மிகவும் அதிகம்.

வெடி மருந்துகள்[தொகு]

இவற்றுக்கான வெடிமருந்துகள் எளிதில் கிடைக்கின்றன.பாறைப் பகுதிகளில் கிணறு தோண்டப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளால் இவற்றைத் தயாரிக்க முடியும். இவற்றைச் சிறு குழிதோண்டி கையாலேயே புதைக்கலாம் அல்லது சிறிய உழவுக்கருவிகளால் தரையில் பதிக்கலாம். சில கடுமையான போர்க்களங்களில் வானத்திலிருந்து எய்து தரையில் பதிக்கவும் செய்கின்றார்கள். பெரும்பாலான நேரங்களில் இவற்றை போர்வீரர்களும், கெரில்லா போராளிகளும் தாங்கள் போகும் வழிகளில் எதிரிகள் பின்தொடராமல் இருக்க மனம்போனபடி பதித்துச் செல்லுகின்றனர்.

இராணுவக் காரணங்கள்[தொகு]

இராணுவரீதியாக யுத்தம் ஒன்றில் எதிரியைக் கொல்வதைவிடக் காயப் படுத்துவதானது கூடுதாலான மனரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இராணுவ வல்லுனர்களின் கருத்தாகும். அதாவது ஒர் யுத்தம் ஒன்றில் ஒருவர் இறந்தால் பெரும்பாலும் அவ்வாறே இறந்த உடலை கைவிட்டு யுத்தம் ஒன்றிலேயே கவனம் செலுத்துவர் மாறாக காயமடைந்தால் அவரைக் களத்திலிருந்து முதலுதவிகளை வழங்க இருவர் அவரைத் தூக்கிக் கொண்டும் ஒரு முதலுதவியாளருமாக நால்வரை யுத்தக் களத்திலிருந்து அப்புறப் படுத்தப் படுவதோடு இவர் முன்னேறும் படைப்பகுதியூடாக தமது வலியைத் தாங்க முடியாதவாறு ஆ ஊ எனக் கத்துவதாலும் யுத்தத்தில் ஈடுபடுபவர்களின் மனநிலை பாதிப்படைகின்றது. மிதிவெடியில் சிக்கும் ஒருவர் கொல்லப்படுவதில்லையாயினும் அவர் நிரந்தரமாக யுத்தகளத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார் என்பதால் காலைச் சிதைப்பதே ஒருவரைக் கொல்வதற்கு ஒப்பானது எனக் கருதப்படுகிறது. இது மாத்திரன்றி இவை எப்போது தூங்குவதில்லை. முன்னணிக் காவலரணில் இவை வெடிக்கும் போது ஏற்படும் ஒலியானது காவலரணிலிருப்பவரை விழிப்படையச் செய்கின்றது.

மிதிவெடிகளை அகற்றுதல்[தொகு]

மிதிவெடிகள் சமாதான காலத்தில் மீள் குடியேற்றம், விவசாய நடவடிக்கைகள், அபிவிருத்தி வேலைகளிற்கு இடையூறாகவுள்ளது. இலங்கையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வேட்டையாடுதல், விறகுபொறுக்குதல், விவசாய நடவடிக்கைகளின், கால்நடைகளை மேய்த்தல் போன்ற வாழ்வாதார நடவடிக்கையின் போது கால்களை இழந்துள்ளனர்.

இலங்கையில் பாவிக்கப்பட்டவை[தொகு]

தனி நபரிற்கு எதிரானவை[தொகு]

இவை பெரும்பாலும் 3-7kg இருந்து மேலதிக நிறை பிரயோகிக்கப்பட்டால் வெடித்தலை உண்டு பண்ணும்.

இலங்கையில் பாவிக்கப்பட்டவை[தொகு]

 • இலங்கை இராணுவத்தால் பாவிக்கப்பட்டவை
 • விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டுப் பாவிக்கப்பட்ட
  • ஜொனி
  • ரங்கன் (ஜொனி 99)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மிதிவெடி&oldid=2916688" இருந்து மீள்விக்கப்பட்டது