பேச்சு:தேசியப் பூங்கா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலரும் தேசியப் பூங்கா என எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். அது தவறு. ஒற்று இன்றி, தேசிய பூங்கா என்பதே சரி. அத்துடன், தேசிய என்பது வடமொழிச் சொல். பொருத்தமான தமிழச்சொல் இதுவரை என் கைகளுக்கு அகப்படவில்லை. எனினும் என்னுடைய கட்டுரைகளில் நான் தேசிய வனம் எனப் பயன்படுத்தியிருப்பது இலங்கையில் அவ்விடங்களின் பெயரை இலங்கை அரசு தேசிய வனம் என்றுதான் குறித்துள்ளது. இதனால், குழப்பம் ஏற்படாதிருப்பதற்காக அப்பெயர்களை அப்படியே இடுகிறேன்.--பாஹிம் 02:40, 16 ஏப்ரல் 2011 (UTC)

கட்டுரைகளின் தலைப்புக்களை மாற்றும்போது பிற பயனர்களின் கருத்துக்களையும் அறிந்த பிறகே மாற்றுவது முறை. தயவு செய்து பயனர்கள் இனிமேல் அவரவர் விரும்பியபடி தலைப்புக்களை மாற்றாமல் இருப்பது நல்லது என்பது எனது கருத்து. "தேசிய பூங்கா" என்பதுதான் சரி என்பதன் அடிப்படை என்ன? "தேசியப் பூங்கா" என்று இருப்பதுதான் சரியானது. -- மயூரநாதன் 06:27, 16 ஏப்ரல் 2011 (UTC)
"பூங்கா" என்பதற்குப் பதிலாக "வனம்" என்று பயன்படுத்துவது கூடுதல் சரியாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. "வனம்" தமிழ்ச் சொல்லா? --மயூரநாதன் 06:32, 16 ஏப்ரல் 2011 (UTC)
"பூங்கா" என்பது "பூந்தோட்டம்" என்பதன் சுருக்கப்பெயராக அல்லது மாற்றுப்பெயராக பயன்படுவதாக உணர்கிறேன். இரண்டு சொல்லும் "பூ" எனும் வேர் சொல் வடிவமாக இருக்கின்றன. எனவே "வனம்" என்பதற்கு இணையான பொருளை "பூங்கா" தராது. "தேசிய" எனும் சொல்லும் வடமொழி வழக்கின் வழி வருவதாக உணர்கின்றேன். --HK Arun 06:41, 16 ஏப்ரல் 2011 (UTC)

தேசியம் என்பதற்கும் பூங்கா என்பதற்கும் என்ன தொடர்பில் ப் சேர்க்கப்பட முடியும் என்கிறீர்கள்? தமிழிலக்கணத்தில் அவ்வாறு கண்ட இடமெல்லாம் மெய்யெழுத்து ஒற்று சேர்க்கப்படலாகாது. சிலர் ஆதாரப்பூர்வமாக என்று எழுதுகின்றனர்.அங்கும் ப் வரலாகாது. அப்படியானால், இரத்தினபுரி என்பதை இரத்தினப்புரி என்றா எழுதுவது? அனுராதபுரம் என்பதை அனுராதப்புரம் என்பதா? மேலும், வனம் என்பதற்குப் பதிலாக கானகம் என்று பயன்படுத்துவது பொருத்தமென நினைக்கிறேன். மற்றப்படி, தேசிய பூங்கா எனும் போது ஏதோ பூந்தோட்டத்தைக் குறிப்பது போல் உணர்கிறேன். வனம் என்பது வடமொழி. கானகம் என்பது தமிழ்.--பாஹிம் 06:54, 16 ஏப்ரல் 2011 (UTC)

வருமொழி வடமொழி ஆயின் மட்டுமே அங்கு ஒற்று மிகாது. வருமொழி தமிழாயின் ஒற்று மிகும். இதுவே தமிழறிஞர்கள் (!) வகுத்துள்ள இலக்கண விதி. எனவே இங்கு தேசியப் பூங்கா என்பதே சரியானது.--Kanags \உரையாடுக 08:47, 16 ஏப்ரல் 2011 (UTC)

அப்படியானால், ஆய கலைகள் என்பதை ஏன் நீங்கள் ஆயக்கலைகள் என்று கூறுவதில்லை? இரத்தினபுரி என்பதை இரத்தினப்புரி என்று கூறாதது ஏன்? அனுராதபுரம் என்பதை அனுராதப்புரம் என்று கூறாதது ஏன்? மதுரைக்கு இன்னொரு பெயர் மதுராபுரி அல்லவா. அதை ஏன் மதுராப்புரி என்று கூறுவதில்லை? புரம் என்பது தமிழ்ச்சொல் தானே. இலங்கையில் National School என்பதை அரசாங்கமும் மக்களும் தேசிய பாடசாலை என்று கூறுகின்றன. ஏன் தேசியப்பாடசாலை என்பதில்லை? மொழிபெயர்ப்பு என்று கூறுவதற்குப் பதிலாக ஏன் மொழிப்பெயர்ப்பு என்று கூறுவதில்லை? மொழி என்பதும் பெயர்ப்பு என்பதும் இரண்டும் தூய தமிழ்ச் சொற்கள்.--பாஹிம் 09:27, 16 ஏப்ரல் 2011 (UTC)

பாகிம், நீங்கள் எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள் போல் தெரிகிறது:)--Kanags \உரையாடுக 09:53, 16 ஏப்ரல் 2011 (UTC)

கனகு, நான் குழப்பிக் கொள்ளவில்லை. நீங்கள் சொன்னபடி இலக்கணம் இருந்தால் மேற்கூறிய சொற்களுக்கு விளக்கம் கூறுங்கள். வருமொழி தமிழாயின் ஒற்று மிகும் என்கிறீர்கள். நான் கேட்ட உதாரணங்களை ஏன் விளக்க மறுக்கிறீர்கள்?--பாஹிம் 10:12, 16 ஏப்ரல் 2011 (UTC)

எது எப்படி இருப்பினும், முதல் மொழி வடமொழியாக இருந்து வருமொழி தமிழாக இருந்தால் அங்கு ஒற்று மிகும் என்பதே விதி. ஏனையவற்றிற்கு வெவ்வேறு விதிகள்/விலக்குகள் உண்டு. இது குறித்து ஒரு கையேடு தயாரிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:33, 16 ஏப்ரல் 2011 (UTC)
வருமொழி தமிழாயின் ஒற்று மிக வேண்டும் என்று விதிகளெலாம் ஒன்றுமில்லை. தேசியப் பூங்கா என்பதே சரி. தேசியம் என்பது பெயர்ச் சொல். தேசிய என்பது பெயரெச்சம். பெயரெச்சம் நிலைமொழியாகவும் வருமொழியில் க,ச,த,ப எனும் நான்கு வல்லெழுத்துகளும் வரும்பொழுது அவை முறையே க்,ச்,த்,ப் எனும் ஒற்று மிக்குப் புணரும்.
என்பதே நன்னூல் விதி. அதற்கேற்ப தேசிய- என்ற நிலைமொழியின் ஈற்றில் (ய்+அ=ய) அ (உயிரெழுத்து) வந்துள்ளது. மேலும் வருமொழி முதலில் -பூங்கா 'ப' வந்துள்ளது. எனவே விதிப்படி, தேசிய+பூங்கா=தேசிய+ப்+பூங்கா என்று ஒற்று மிகுந்து தேசியப் பூங்கா என்றாகியது.
மேலும் ஒரு குறிப்பு, பூங்காவுக்கு வேர்ச்சொல் தேடி அதைக் காரணமாகக் கொண்டு தேசியப் பூங்கா எனும் பெயரை மாற்றும் நோக்கம் எதுவும் வேண்டாம். தேசியம் என்பது வடமொழியாக இருப்பின் அதனைப் பயன்படுத்தக் கூடாதா என்ன?
மேலும் ஒரு குறிப்பு, இச்சொல்லைச் சொல்லிப் பார்க்கவும். தங்களது உதடுகள் ஒட்டாமல் இதனைக் கூற முடியாது. தேசிய_____பூங்கா என்று இரு சொற்களுக்கும் இடையில் ஒரு 3 நொடி இடைவெளி விட்டுக் கூறுவோமானால் ஒற்று தேவையில்லை. தேசியப் பூங்கா என்றுதானே கூறுகின்றோம்! எனவே இக்கட்டுரையின் தலைப்பு மாற்றத்தை முன்னடுநிலையாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.... (நான் பொறியியல் பயின்றுவரும் இக்காலகட்டத்திலும் தமிழிலக்கணத்தை மறவாதிருக்குமாறு பாடம் நடத்திய எனது 12ஆம் வகுப்புத் தமிழையாவிற்கு நன்றிகள் கோடி இவ்வேளையில்....)
--சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 10:47, 16 ஏப்ரல் 2011 (UTC)

கனகு, சூர்ய பிரகாசு, நான் கேட்ட உதாரணத்திற்குப் பதில் வரவில்லை. மதுராபுரி என்பதில் மதுரா என்பதும் புரி என்பதும் இரண்டும் தமிழ். வருமொழி ப இனம். அங்கு எது மிகுந்தது? மொழிபெயர்ப்பு என்பதில் மொழி என்பதும் பெயர்ப்பு என்பதும் இரண்டும் தமிழ். அங்கு ஏன் ப மிகவில்லை? எந்த அகரமுதலியாவது மொழிப்பெயர்ப்பு என்று கூறுகிறதா? எது எப்படியிருப்பினும் என்றெல்லாம் கூறி மழுப்ப வேண்டாம்.--பாஹிம் 10:44, 16 ஏப்ரல் 2011 (UTC)

இங்கு வடமொழி/தமிழ் கலந்த சொற்களுக்கு எப்படி ஒற்றுச் சேர்ப்பது என்பதே கேள்வி. அதற்கே மேற்படி பதில் தந்திருக்கிறேன். இரண்டு தமிழ்ச்சொற்கள் வந்தால் அதற்கு வேறு விதிகள் உள்ளன. அதற்கான விதிகளை அருண் கீழே வெளித்தொடுப்பு மூலம் தந்திருக்கிறார். மீண்டும்: தேசியம் என்பது வடமொழியாக இருக்குமிடத்து பூங்கா என்பது தமிழ்ச் சொல்லாக இருக்குமிடத்து (முதல் மொழி வடமொழியாக இருந்து வருமொழி தமிழாக இருப்பதால்) தேசியப் பூங்கா என்பதே சரி.--Kanags \உரையாடுக 11:15, 16 ஏப்ரல் 2011 (UTC)

ஒற்று மிகும் இடங்கள் [1], ஒற்றுமிகா இடங்கள் [2] பார்க்கவும். --HK Arun 10:54, 16 ஏப்ரல் 2011 (UTC)

உங்கள் கூற்று புரிகிறது பாகிம். இதே போல சில விளக்கங்களை நானும் பள்ளியில் கேட்டதுண்டு. அதற்குக் கிடைத்த பதிலை நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.
அதாவது, ஒவ்வொரு மொழிக்கும் இலக்கியம் முதலில் தோன்றியதா? இலக்கணம் முதலில் தோன்றியதா? என்ற வினாவை எங்கள் ஆசிரியர் எங்களிடம் முன்வைத்தார். நாங்கள் இலக்கணம் என்றோம். அவர் அதனை மறுத்து இலக்கியமே அதாவது (பேச்சு வடிவ, பாடல் வடிவ, நாடக வடிவ) இலக்கியமே முதலில் தோன்றிற்று என்றார். அதன் பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அவற்றை இயற்றக் கண்ட தொல்காப்பியர் போன்ற பெரியோர் அவற்றை வகைப்படுத்துகையில்தான் இலக்கணம் என்பது தோன்றிற்று. (இலக்கணம் முதலில் தோன்றியிருப்பின் அனைத்துமே ஓர் எல்லைக்குள் அடங்கியிருக்கும் அல்லவா?) ஆக, தோன்றிய சொற்களுக்கேற்ப, மக்கள் பயன்படுத்தும் வகைமைக்கேற்ப இலக்கணங்கள் வகுக்கப்பட்டனவேயன்றி இலக்கணத்திற்கேற்ப மக்கள் சொற்களைத் தோற்றுவிக்கவும் இல்லை பயன்படுத்தவும் இல்லை.
நீங்கள் கேட்டதற்குப் பதில், மொழி பெயர்ப்பு என்ற சொல்லைச் சொல்லிப் பார்க்கவும். நீங்கள் கூறும் மொழிப்↓ பெயர்ப்பு என்ற சொல்லில் மொழி என்ற சொல் முடிந்தவுடன் நாதம் குறைகிறது. இயல்பாகக் கூறுவதாக அமையவில்லை. அதில் உள்ள ப ஆனது ப1 அளவு தொனியைப் பெறுகிறது.(paddyயிலுள்ள ப) அதே, மொழிபெயர்ப்பு என்று சொல்லிப் பாருங்கள். நாதமும் குறையவில்லை, இடைவெளியும் ஏதுமில்லை. ஆனால் இங்கு ப-வின் ஒலிப்பு மாறுகிறது. (birdலுள்ள ப; அதையொத்தது) எனவே இலக்கணவிதிகளை ஒவ்வொன்றுக்கும் பொருத்திப் பார்ப்பது சரியான முறையன்று. அதேபோலத்தான் மதுரா புரியும். அவ்விரண்டு சொற்களும் வடசொற்கள். மதுரா என்பது வட இந்தியாவில் உள்ள ஓர் ஊர். புரி என்பது ஒரு பெரிய ஊரைக் குறிக்கும் சொல். அதன் ஒலிப்பு Madhuraa Bhuri (मथुरा भुरि) ஆகும். அதனை Madhuraap_Puri (मथुरा पुरि) என்று படிக்கும் போது வேண்டுமானால் நீங்கள் கூறுவதற்கேற்ப ஒற்று சேர்க்கலாமேயொழிய मथुरा भुरि என்று படிக்கும் போது இயல்பாகவே 'ப்' அவ்விடத்தில் வருவதில்லை.
உங்கள் ஐயம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும் வேண்டுமானாலும் விளக்க அணியமாக உள்ளேன் அடியேன்.
--சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 11:17, 16 ஏப்ரல் 2011 (UTC)

நான் வட இந்தியாவில் உள்ள மதுரா பற்றிக் கேட்கவில்லை. மதுரைக்கு இன்னொரு பெயர் மதுராபுரி. அதனைப் பற்றித்தான் கேட்கிறேன். மேலும் ஒரு உதாரணம் தருகிறேன். தூய பணி என்பதில் இரண்டும் தமிழ்ச் சொற்கள். நீங்கள் சொன்னது போல் ப வருமொழியின் முதலெழுத்து. ஏன் ஒற்று மிகவில்லை? வடமொழிச் சொல் பின்னர் சேர்ந்தது என்பதால் அதற்குத்தான் இலக்கணத்தைச் சேர்க்க வேண்டுமென்கிறீர்கள். அப்படியாயின், தூய சிந்தனை என்பதில் சிந்தனை என்பது வடமொழி. ஏன் ஒற்று மிகவில்லை? மேலும், நான் மொழிபெயர்ப்பு என்ற சொல் பற்றித்தான் கேட்கிறேன். நீங்கள் கூறும் விளக்கம் பொருந்தவில்லை. எல்லாரும் மொழிபெயர்ப்பு என்று கூறும்போது அங்கு இரு சொற்கள் சேர்ந்த சொல்லில் ஏன் ப ஒற்று வரவில்லை? --பாஹிம் 11:25, 16 ஏப்ரல் 2011 (UTC)

தூய பணி சரியானது. விதி: பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது[3].--Kanags \உரையாடுக 11:35, 16 ஏப்ரல் 2011 (UTC)
சரி. நான்தான் மொழிபெயர்ப்பு என்ற சொல்லைப் பற்றிய விளக்கம் கொடுத்துள்ளேனே! (பார்க்கவும்:மொழி பெயர்ப்பு என்ற சொல்லைச் சொல்லிப் பார்க்கவும். நீங்கள் கூறும் மொழிப்↓ பெயர்ப்பு என்ற சொல்லில் மொழி என்ற சொல் முடிந்தவுடன் நாதம் குறைகிறது. இயல்பாகக் கூறுவதாக அமையவில்லை. அதில் உள்ள ப ஆனது ப1 அளவு தொனியைப் பெறுகிறது.(paddyயிலுள்ள ப) அதே, மொழிபெயர்ப்பு என்று சொல்லிப் பாருங்கள். நாதமும் குறையவில்லை, இடைவெளியும் ஏதுமில்லை. ஆனால் இங்கு ப-வின் ஒலிப்பு மாறுகிறது. (birdலுள்ள ப; அதையொத்தது) எனவே இலக்கணவிதிகளை ஒவ்வொன்றுக்கும் பொருத்திப் பார்ப்பது சரியான முறையன்று.)
மேலும் நீங்கள் கூறும் தூயபணி, தூய சிந்தனை என்பனவும் அது போலவே! மக்களுக்கு வாயில் நுழையும்படியாகவும் எளிதாகவும் உள்ள சொற்களைப் பார்த்துத் தான் இலக்கணம் வரையறுக்கப்பட்டது. உங்களுக்கு தூயப் பணி என்று சொல்லும்போதுதான் எளிமையாக உள்ளதென்றால் அதற்கும் இலக்கணம் ஒத்துப் போகும்.
இன்னும் உங்களுக்கு என்ன தேவையென்று எனக்குப் புரியவில்லை பாகிம்! --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 11:38, 16 ஏப்ரல் 2011 (UTC)

கனகு, நீங்கள் தமிழும் வடமொழியும் கலந்த சொல்லுக்கு இலக்கணம் கூறுவதாகக் கூறுகிறீர்கள். நான் மேலே கூறிய தூய சிந்தனை என்பதில் தூய என்பது தமிழ், சிந்தனை என்பது வடமொழி. அவ்வாறே, சத்திய சோதனை என்பதில் சத்திய என்பது வடமொழி, சோதனை என்பது தமிழ். முதலாவது உதாரணத்தில் இரண்டாவது சொல்லும் இரண்டாவது உதாரணத்தில் முதலாவது சொல்லும் வடமொழி, அடுத்தது தமிழ். நீங்கள் சொல்வதுபோல் ஏன் ஒற்று மிகவில்லை? க, ச, த, ப மிகும் என வெறுமனே இலக்கணம் கூறும் நீங்கள் ஏன் மேற்படி உதாரணங்களை விளக்க மறுக்கிறீர்கள்?--பாஹிம் 11:40, 16 ஏப்ரல் 2011 (UTC)

சூர்ய பிரகாசு, நீங்கள் கூறுவது போன்று அச்சொல்லுக்கு ஒலியிலக்கணம் கூறி அதுதான் அங்கு ப ஒற்று மிகவில்லை என்பதற்கு ஆதாரம் உள்ளதா? கனகு, நீங்கள் தூய பணி என்பது சரி, அதில் ய என்பது பெயரெச்சம் என்று கூறி அதன் பின் ஒற்று மிகாது என்று கூறுகிறீர்கள். அப்படியாயின், தேசிய என்பதிலும் அதே ய தான் எச்சம். அங்கு ஏன் ஒற்று மிக வேண்டும்?--பாஹிம் 11:44, 16 ஏப்ரல் 2011 (UTC)

புரவகம்[தொகு]

"Park" என்பது தமிழில் பூங்கா என்றும் வனம் என்றும் மொழிபெயர்ப்புச் செய்யப்படுகிறது. வனம் என்பது வனம்சார் பகுதிகளுக்கு ஏற்புடையது, ஆனால் பூங்கா என்பது ஏற்புடையதல்ல. பூங்கா என்பது பூங்கள் அல்லது தாவரங்கள் சார்பான தோற்றத்தைத் தருகின்றன. மேலும், கடல்சார் பகுதிகளுக்கு "வனம்", "பூங்கா" எனக்குறிப்பிடுவது பொருத்தமற்றுக் காணப்படுகின்றன. "Park" என்பதற்கு மேலும் பொருத்தமுடைய சொல் அல்லது கடல், வனம் ஆகிய நிலைகளுக்கேற்ப பொழிபெயர்த்தல் அவசியம் எனக் கருதுகிறேன். முகநூல் "சொல்" குழுவில் பின்வரும் பின்னூட்டம் கிடைத்தது. அது ஏற்புடையதாகவுள்ளது.

புரவகம். புரத்தல் என்றால் பாதுகாத்தல், அழியாத நிலையில் வைத்திருத்தல் --AntanO 03:02, 19 மே 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேசியப்_பூங்கா&oldid=2599374" இலிருந்து மீள்விக்கப்பட்டது