பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால்
பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் | |
---|---|
20ஆம் நூற்றாண்டு ஓவியமொன்றில் 32–33-அகவையில் பெத்ரோ ஆல்வாரெசு காப்ரால். அவர் காலத்திய முகப்படங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.[1] | |
பிறப்பு | 1467 அல்லது 1468 பெல்மோன்ட், போர்த்துகல் |
இறப்பு | 1520 (அகவை 52–53) சான்டரெம், போர்த்துக்கல் |
மற்ற பெயர்கள் |
|
பணி | போர்த்துகல் இராச்சியத்தின் கப்பற்படைத் தொகுதி ஆணையர் |
சமயம் | உரோமன் கத்திலிக்கம் |
வாழ்க்கைத் துணை | இசபெல் டி காஸ்த்ரோ |
பிள்ளைகள் |
|
பெத்ரோ ஆல்வாரெசு காப்ரால் (Pedro Álvares Cabral,1467 அல்லது 1468 – ஏறத்தாழ 1520) போர்துகேய பெருமகன், படைத்துறை ஆணைத்தலைவர், கடலோடி மற்றும் தேடலாய்வாளர் ஆவார். இவரே பிரேசிலைக் கண்டுபிடித்ததாகக் கருதப்படுகிறார். தென் அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையை முதன்முதலில் முழுமையாக தேடலாய்ந்த பெத்ரோ இதனை போர்த்துக்கல்லிற்கு உரிமை கோரினார். காப்ராலின் இளமையைப் பற்றி சரியானத் தரவுகள் கிடைக்காதபோதும் இவர் ஓர் சிறிய கோமகன் குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும் நல்ல கல்வியைப் பெற்றவர் என்றும் அறியப்படுகிறது. 1500இல் வாஸ்கோ ட காமாவின் கண்டுபிடிப்பை அடுத்து இந்தியாவிற்கு செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பயணத்தின் நோக்கமாக மதிப்புள்ள நறுமணப் பொருட்களுடன் திரும்புவதும் இந்தியாவுடன் வணிகத் தொடர்பை நிலைநிறுத்துவதுமாக இருந்தது. அராபியர், துருக்கியர்கள் மற்றும் இத்தாலியர்களின் ஏகபோக உரிமைக்கு மாற்றாக இந்த ஏற்பாட்டை போர்த்துக்கல் கருதியது. 1497இலேயே, வாஸ்கோ ட காமாவின் கடற்பயணத்தின்போதே, தென்அத்திலாந்திக்குப் பெருங்கடலின் மேற்கே நிலப்பரப்பின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதும் காப்ரால் தான் முதன்முதலாக நான்கு கண்டங்களையும் தொட்ட முதல் கப்பற் தலைவராக கருதப்படுகிறார். இவரது தேடல் பயணம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்காக்கள், மற்றும் ஆசியாவை இணைத்தது.[2][3][4][5][6]
13 கப்பல்களைக் கொண்ட இவரது கப்பற்தொகுதி மேற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் நீண்ட தொலைவு சென்று, காப்ரால் பெரிய தீவு என எண்ணிய நிலப்பரப்பில் கால் பதித்தனர். டோர்டெசிலாசு உடன்பாட்டின்படி இது போர்த்துக்கல்லின் அரைக்கோளத்தில் இருந்ததால் இந்த நிலப்பரப்பை போர்த்துக்கல்லின் முடியாட்சிக்கு உரியதாக கோரினார். இந்த கடற்கரையை ஆராய்ந்த பின்னர் பரந்த நிலப்பரப்பு ஓர் கண்டமாக இருக்கலாமென கருதிய காப்ரால் ஒரு கப்பலை போர்த்துக்கலிற்கு திருப்பி அனுப்பி மன்னருக்கு புதிய நிலப்பரப்பினைக் குறித்து தெரியப்படுத்தினார். இந்த கண்டம் தான் தென் அமெரிக்கா மற்றும் அவர் உரிமை கோரிய நிலப்பரப்புதான் பிரேசில். இந்த நிலப்பரப்பினை ஆராய்ந்த பிறகு தங்கள் தேவைகளை நிரப்பிக்கொண்டு இந்தியாவை அடைய கிழக்கு நோக்கி கப்பற்தொகுதி பயணித்தது.
தென் அத்திலாந்திக்கு பெருங்கடலில் ஏற்பட்ட சுறாவளியால் பல கப்பல்கள் சேதமடைந்தன; மீதமிருந்த ஆறு கப்பல்களுடன் கோழிக்கோடு செல்லும் வழியில் மொசாம்பிக் கடற்பகுதியை எட்டியது. போர்த்துக்கல்லின் இந்த முயற்சி தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என எண்ணிய அராபிய வணிகர்கள் இந்துக்களையும் இசுலாமியரையும் தூண்டி இக்கப்பற்தொகுதியை தாக்கினர். போர்த்துக்கேய கப்பற்தொகுதிக்கு பலத்த சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டது. இதனால் கோபமுற்ற காப்ரால் அராபிய கப்பற்தொகுதி கொள்ளையிட்டும் எரித்தும் பழி தீர்த்துக் கொண்டார். எதிர்பாராது தாக்குதல் நடத்திய கோழிக்கோடு நகர அரசின் மீதும் தாக்குதல் நடத்தினார். கோழிக்கோட்டிலிருந்து கொச்சி சென்று அதன் மன்னருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார். கொச்சியிலிருந்து நறுமணப் பொருட்களுடன் ஐரோப்பா திரும்பினார். கப்பல்களையும் நபர்களையும் இழந்து வந்தபோதும் காப்ராலின் பயணம் வெற்றி அடைந்ததாகவே போர்த்துக்கல் கருதியது. நறுமணப் பொருட்களின் விற்பனையால் கிடைத்த கூடுதலான இலாபம் போர்த்துக்கல் மன்னரின் நிதி நிலைமையை வலுப்படுத்தியது. மேலும் அமெரிக்காக்களிலிருந்து தூரக்கிழக்கு வரையிலான போர்த்துக்கல் பேரரசு நிறுவப்பட அடிக்கலாக அமைந்தது.[7]
காப்ரால் பிற்காலத்தில் மன்னருடன் ஏற்பட்ட பிணக்கினால் ஓய்வான தனி வாழ்க்கை வாழலானார். இவரது சாதனைகளும் 300 ஆண்டுகளுக்கு மேலாக அறியப்படாமல் போயின. 19வது நூற்றாண்டில் பிரேசில் விடுதலை பெற்ற பிறகே இவரைக் குறித்த குறிப்புகள் தேடி அறியப்பட்டன. பிற்கால கடல் தேடலாய்வாளர்களால் இவரது புகழ் மங்கினாலும் கண்டுபிடிப்புக் காலத்தின் முக்கிய நபராகக் கருதப்படுகிறார்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Bueno 1998, ப. 35.
- ↑ [1] Foundations of the Portuguese Empire, 1415-1580, Bailey Wallys Diffie and George D. Winius - Page 187, University of Minnesota Press, 1977
- ↑ [2] பரணிடப்பட்டது 2014-10-31 at the வந்தவழி இயந்திரம் The Coming of the Portuguese by Paul Lunde, London University’s School of Oriental and African Studies, in Saudi Aramco World - July/August 2005 Volume 56, Number 4,
- ↑ Lima, Susana (2012). Grandes Exploradores Portugueses. Alfragide - Portugal: Publicações D. Quixote. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9722050540.
- ↑ [3] பரணிடப்பட்டது 2019-01-06 at the வந்தவழி இயந்திரம்Pedro Álvares Cabral, Duarte Nuno G. J. Pinto da Rocha in Navegações Portuguesas, Instituto Camões, 2002-2004 (in portuguese)
- ↑ Revista da Faculdade de Letras, Edições 23-24 (in portuguese and italian). Vol. Edições 23-24. Lisbon: Faculdade. 1998. p. 203.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Diffie & Winius 1977, ப. 39, 46, 93, 113, 191