புளியம்கொம்பை கல்வெட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலிமான் கோம்பை வீரக்கல்

புலிமான் கோம்பை - சங்ககால நடுகற்கள் கி-மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் மிக பழமையானதாக அசோகரின் பிராமி கல்வெட்டு கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்கற்களிலேயே மிகவும் பழமையானவை இந்த நடுகற்கள் தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். தமிழர்கள் மொழியறிவு, எழுத்தறிவு பெற்றவர்கள் என்றும் கல்வெட்டுகளில் எழுத்து குறிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்றும் புலிமான்கோம்பை கல்வெட்டுகள் நிரூபித்துள்ளன.

கல்வெட்டுகளின் செய்திகள்[தொகு]

  1. கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்.
  2. ..அன் ஊர் அதன் ..(ன்)அன் கல்
  3. வேள் ஊர் அவ்வன் பதவன்

ஆகோள்[தொகு]

ஆகோள் பற்றிய புளியம்கொம்பைக் கல்வெட்டு

சங்க இலக்கியங்களில் வெட்சித் திணை, கரந்தைத் திணை போன்ற திணைகள் ஆநிரை கவர்தல், ஆநீரை மீட்டல் போன்ற போர் முறைகளைக் கூறுகின்றன. இந்த இரண்டு போர்களிலும் வீர மரணம் அடைந்தவர்களைப் போற்றும் வகையில் நடுகற்கள் நடப்பட்டன. அவற்றுள் ஆகோள் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதிலும் அது காணப்படுவதால் இதில் குறிப்பிடப்படும் வீரன் கூடலூரில் நடந்த வெட்சிப்போரிலோ கரந்தைப்போரிலோ இறந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

அமைவிடம்[தொகு]

தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் புலிமான்கோம்பை எனும் சிற்றூர் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இங்கு 2006 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட கள ஆய்வில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மூன்று நடுகற்கள் கிடைத்தன.[1][2]

நடுகற்கள்[தொகு]

நடுகற்கள் என்பவை ஊரைக் காக்கவோ நாட்டைக் காக்கவோ உயிரிழந்த வீரர்களுக்கு எடுக்கப்பெறும் நினைவுக் கற்களாகும். இது சங்ககாலம் தொட்டே வழக்கிலிருந்து வந்துள்ளது. வீரக்ககல் என்று அழைக்கப்பட்டும் இவை ஆங்கிலத்தில் ஈரோ இசுடோன் என்று அழைக்கப் பெறுகின்றன.

சிறப்புகள்[தொகு]

  • சங்க இலக்கியங்களில் நடுகற்கள் பற்றிய செய்திகள் விரவி வருகின்றன. அவற்றில் “எழுத்துடை” நடுகல் என்றக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. இந்நடுகற்கள் கண்டுபிடிக்கப் பெறும் வரை சங்க இலக்கியங்கள் கூறும் எழுத்து ஓவியத்தைக் குறிப்பதாகவே கருதப்பட்டது.
  • 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்நடுகற்கள் தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவின. குறிப்பாக சங்க காலத்தைச் சேர்ந்த தமிழ் பிராமி எனும் பிராகிருத மொழி கலப்பின்றி எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களின் ஆதி வடிவமான எழுத்துக்கள் மூன்று நடுகற்களில் இருந்தன. மூன்று அடி உயரமும் ஒன்று முதல் ஒன்றரை அடி அகலமும் உள்ள இந்த நடுகற்கள், சங்க காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகளில் மேல் செய்யப்படும் ஈமச் சின்னங்களின் ஒரு பகுதி என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
  • சங்க இலக்கியச் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய உதவின.
  • சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஆகோள் அதாவது நிரை கவர்தல் அல்லது கால்நடைகளைக் கவர்ந்து செல்லுதலைப் பற்றி கூறும் முதல் நடுகல் இதுவேயாகும்.
  • பிராகிருத மொழிக் கலப்பின்றி முழுவதும் தமிழ்ச் சொற்களே கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுவே சங்ககாலத்தைச் சேர்ந்த முதல் நடுகல்லாகும். இந்நடுகல் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இருளப்பட்டி நடுகல்லே காலத்தால் முற்பட்ட நடுக்கல்லாக கருதப்பட்டு வந்தது.

காலம்[தொகு]

எழுத்தமைதியின் அடிப்படையில் இரு கல்வெட்டுக்களின் காலம் பொ.ஆ.மு. 4ஆம் நூற்றாண்டு எனவும் மற்றொரு கல்வெட்டின் காலம் பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டெனவும் கணிக்கப்பெற்றுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. 2022-07-23 அன்று பார்க்கப்பட்டது.
  2. Nov 26, M. T. Saju / Updated:; 2019; Ist, 12:13. "Stone with Tamil Brahmi script lies forgotten". The Times of India (ஆங்கிலம்). 2022-07-23 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: extra punctuation (link)
  3. Subramanian, T. S. (2014-03-29). "Hero-stone discovered in Tamil Nadu". The Hindu (ஆங்கிலம்). 2022-07-23 அன்று பார்க்கப்பட்டது.