உள்ளடக்கத்துக்குச் செல்

புரட்சிக்கவி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரட்சிக்கவி என்பது பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைநூல் எனலாம்.

கருத்தான மொழிமாற்றம்

[தொகு]

இது பில்கணீயம் என்ற வடமொழி இலக்கியத்தினைத் தழுவியிருப்பினும் பாவேந்தர் பல திருத்தங்கள் செய்து, மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்று பல ஆழமான கருத்துகளையும் புகுத்தியுள்ளார். வடமொழியில் கதைநாயகனான கவிஞன் அஞ்சும் தன்மலும் மக்களைக் கவர்ந்து, மன்னனை எதிர்த்துப் புரட்சிக்கு வித்திட்டுத் தானும் காதலில் வென்று, தன் மக்களுக்கும் குடியாட்சி பெற்றுத்தருகிறான் என்பது இதன் தனிச்சிறப்பு.

கதாபாத்திரங்கள்

[தொகு]

அமுதவல்லி: அழகிலும், பண்பிலும், அறிவிலும் சிறந்து விளங்கும் அரச குமாரி. தேவைபட்டால் நாட்டின் மன்னனையே எதிர்க்கும் அளவிற்கு திண்மை கொண்டவள்.

உதாரன்: அமுதவல்லிக்கு யாப்பும் பாடல் புனையும் திறனும் கற்பிக்க வரும் ஒரு சாதாரண கவிஞன், நாட்டில் குடியாட்சி பிறக்க வித்திடுகிறான்.மேலும், தனது புனிதமான காதலை அரசியிடம் கூறி, அதற்கு சாகும் வரை சென்று உரக்க போராடி வென்றவன்.ஆண் மகனுக்குரிய அழகு பெற்றவன். உதாரன் என்பது அவன் பெயர் ஆகும்.

அரசன்: அமுதவல்லியின் தந்தை.

அமைச்சர்: இவர்தான் எவ்வாறு கவிக்கும் அரசிளங்குமரிக்கும் இடையே காதல் மலராதவாறு பயிற்சி அளிக்க இயலும் என்று அறிவுறுத்துபவர்.மேலும் இரண்டு காதல் உள்ளங்களை பிரிக்கும் எல்லையாக இருப்பவர்.

மக்கள்: மன்னனின் அரசுக்கு கீழ்.

கதைக்கரு

[தொகு]

மிகவும் இளமையான தன் மகளும், பல கலைகளில் கைதேர்ந்தவளுமான தன் மகள் அமுதவல்லிக்கு கவிதை புனையும் கலையினைக் கற்றுத்தர விழைகிறான் அரசன். அமைச்சர் உதாரன் பெயரை முன்மொழிந்து அவன் அழகும், அறிவும், இளமையும் உள்ளவன் என்றுரைக்க, தன் மகள் ஒரு சாதாரண கவிஞரோடு எங்கு காதல்வயப்பட்டுவிடுவாளோ என்று அரசன் தயங்கியதால் அதற்கும் ஒரு உத்தியை உரைக்கிறார் அமைச்சர்.

அதன்படி, அந்நாட்களில் குருடனைக் காண்பதும் கூட அபசகுனம் என்பதால், உதாரன் ஒரு பிறவிக்குருடன் என்று அரசன் அமுதவல்லியிடம் கூறுகின்றான். இதுபோலவே உதாரனிடம் அமுதவல்லி ஒரு தொழுநோயாளி என்றும் கூற, இருவரிடையே திரையிட்டுப் பாடம் கற்பிக்கப்படுகிறது.

ஆனால், ஓர் இரவு அழகிய நிலவினைக் கண்டு உதாரன் தன்னை மறந்து பாடல் புனைய, பிறவிக்குருடன் எவ்வாறு திங்களைக் காண இயலும் என்று ஐயங்கொண்ட அமுதவல்லி திரையினை விலக்கி அங்கே அழகிய ஆண்மகன் இருப்பதைக்கண்டு காதல்வயப்படுகிறாள். உதாரனும், இவளைக்கண்டு வானின் தேவதைகளில் ஒருத்தி என வியக்க, இருவரும் காதல் கொள்கிறார்கள்.

இந்தக் காதல், மன்னனின் காதுகளை எட்ட அவன் அவ்விருவர் இணைந்திருக்கும் வேளையில் தானே உளவு பார்த்துக் கையும் களவுமாகப் பிடித்து உதாரனைக் குற்றவாளியாக்கி மரணதண்டனை விதிக்க, அமுதவல்லி தான் முன்பு உதாரனுக்களித்த வாக்கிற்கிணங்க அதனை எதிர்க்கிறாள். அதனால் வெகுண்ட மன்னன் இருவருக்கும் சேர்த்தே மரணதண்டனையை விதிக்கப் பணிக்கிறான்.

பின்னர், கொலைக்களத்தில், அமுதவல்லியும் உதாரனும் மக்களிடம் மொழிப்பற்றுடனும் நாட்டுப்பற்றுடனும் பேச, மக்கள் வெகுண்டெழ, கொலையாளர்கள் அஞ்சி ஓடினார்கள். மக்கள் அரசவை புகுந்து மன்னரின் முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு உதாரனும், அமுதவல்லியும் காதல் வயப்பட்ட நிலையில் கண்ட கனவான மக்களாட்சியும் மலர்கிறது.

கூறப்பட்ட கருத்துக்கள்

[தொகு]

சில ஆழமான பின்வரும் கருத்துக்களைக் கவிஞர் உதாரன் மற்றும் அமுதவல்லி வாயிலாக முன்வைக்கிறார்:

 1. காதல் என்பது எல்லோர்க்கும் பொதுவானது. அது அரச குமாரியாயிருந்தாலும் சரி, இல்லை ஏழைக்கவியாக இருந்தாலும் சரி.
 2. அரசன் என்பவன் மக்களின் சேவகன்.
 3. முடியாட்சி நீங்கி எங்கும் குடியாட்சி நிலை பெறுதல் வேண்டும்.

ஆழமான உணர்வுகள்

[தொகு]

பின்வரும் பல உணர்வுகளை உள்ளிருத்திக் கதை நகர்கிறது:

 1. வீரம்
 2. காதல்
 3. தமிழ் மீதான பற்று
 4. புரட்சி
 5. நாட்டுப்பற்று
 6. குடியாட்சி

இலக்கிய நயம்

[தொகு]

இப்புத்திலக்கியக் காப்பியத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பல்வேறு அணிகளும், பாக்களையும் எடுத்தாண்டுள்ளார். அவற்றுள் சில பின்வருமாறு:

 1. அகவல் (ஆசிரியப்பா)
 2. விருத்தம் (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், முதலியன)
 3. சிந்து
 4. நொண்டிச்சிந்து
 5. பஃறொடை வெண்பா
 6. கும்மி

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரட்சிக்கவி_(நூல்)&oldid=3828842" இலிருந்து மீள்விக்கப்பட்டது