பீர்பால்
பீர்பால் | |
---|---|
அமைச்சர், அக்பரின் சர்தார் | |
பீர்பால் | |
முகலாய அமைச்சர் | |
பின்னையவர் | |
பிறப்பு | மகேசு தாசு பிரம்மபத் 1528 சிதி, மத்தியப் பிரதேசம் |
இறப்பு | 16 பெப்ரவரி 1586 (அகவை 57-58) கரக்கார் கடவை, சுவாத் மாவட்டம், காபூல் மாகாணம் (இன்றைய கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான்) |
தொழில் | பேரரசர் அக்பரின் முக்கிய ஆலோசகர் |
பீர்பால் (Birbal, 1528 – 16 பெப்ரவரி 1586[1]), அல்லது ராஜா பீர்பால் எனப்படுபவர், முகலாய பேரரசர் அக்பரின் அவையில் ஆலோசகராகவும் மந்திரியாகவும் பணியாற்றியவர் ஆவார். இவர் தனது அறிவை மையமாகக் கொண்டிருக்கும் நாட்டுப்புறக் கதைகள் மூலம் இந்திய துணைக் கண்டத்தில் பெரும்பாலும் அறியப்படுகிறாா். அக்பர் அவையில் பீர்பால் ஒரு கவிஞராகவும் நியமிக்கப்பட்டார். அவர் பேரரசருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். அக்பரின் அவையில் நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்ட மிக முக்கியமான குழுவில் உறுப்பினராக இருந்தார். அக்பரால் நிறுவப்பட்ட மதம் தீன்-இ இலாஹியைப் பின்பற்றும் ஒரே இந்துவாக பீர்பால் இருந்தார். 1586 ஆம் ஆண்டில், வடமேற்கு இந்திய துணைக் கண்டத்தில் நிலவிய அமைதியின்மையை தடுக்க ஒரு இராணுவத்தை பீர்பால் வழிநடத்தினார். அதனால், அங்குள்ள கிளர்ச்சிக் பழங்குடியினரால் இவர் கொல்லப்பட்டார்.
அக்பரின் ஆட்சியின் முடிவில், அக்பருடனான அவரது தொடர்புகளை உள்ளடக்கிய உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் வெளிவந்தன. இக் கதைகள் பீர்பாலை மிகவும் புத்திசாலி மற்றும் நகைச்சுவையானவர் என்று சித்தரிக்கின்றன. கதைகள் இந்தியாவில் பிரபலமடைந்ததால், அவர் இந்திய துணைக் கண்டம் முழுவதும் ஒரு புகழ்பெற்ற நபராக மாறினார். இந்த கதைகள் அவரை போட்டி நீதிமன்ற உறுப்பினர்களையும் சில சமயங்களில் அக்பரையும் கூட மிஞ்சுபவையாக உள்ளன. மேலும், இந்த கதைகள் பீர்பாலின் தந்திரத்தையும், நகைச்சுவை பதில்களையும் கொண்டதாக இருப்பதால், அக்பரை கவர்ந்திழுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நாட்டுப்புற கதைகளின் அடிப்படையில் நாடகங்கள், படங்கள் மற்றும் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இவற்றுள் சில குழந்தைகள் விரும்பும் படத்துடன் கூடிய கதைப் புத்தகங்கள் மற்றும் பள்ளி பாடநூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
இளமைப்பருவம்
[தொகு]இந்தியாவிலுள்ள மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் ஒரு இந்து கயஸ்தா பிராமண குடும்பத்தில்,1528 ஆம் ஆண்டில் மூன்றாவது மகனாக பீர்பால் மகேஷ் தாஸ் என்ற இயற்பெயருடன் பிறந்தார்;[2] நாட்டுப்புறக் கதைகளின்படி, இது யமுனா நதிக்கரையில் உள்ள டிக்கவான்பூரில் இருந்தது.[3].[4] இவரது தந்தை கங்கா தாஸ் மற்றும் தாய் அனாபா டேவிடோ ஆவர். இவர், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளில் கல்வி கற்றார். பீர்பால் ப்ராஜ் மொழியில் இசை மற்றும் கவிதைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தாா். ரேவாவின் (மத்தியப் பிரதேசம்) ராஜா ராம் சந்திராவின் ராஜ்புத் நீதிமன்றத்தில் "பிரம்மா கவி" என்ற பெயரில் பணியாற்றினார். முகலாயப் பேரரசர் அக்பரின் ஏகாதிபத்திய நீதிமன்றத்தில் நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர் அவர் மோசமான பொருளாதார நிலையில் இருந்தார் என்ற கருத்துக்கு மாறாக, மரியாதைக்குரிய மற்றும் பணக்கார குடும்பத்தின் மகளை மணந்தபோது பீர்பலின் பொருளாதார மற்றும் சமூக நிலை மேம்பட்டது.
அக்பருடன் பீர்பாலின் நிலைப்பாடு மற்றும் தொடர்பு
[தொகு]பீர்பால் ஒரு மத ஆலோசகராகவும், இராணுவ நபராகவும், பேரரசரின் நெருங்கிய நண்பராகவும் பணியாற்றினார். 1572 ஆம் ஆண்டில், அக்பரின் சகோதரர் ஹக்கீம் மிர்சாவின் தாக்குதலுக்கு எதிராக ஹுசைன் குலி கானுக்கு உதவ அனுப்பப்பட்ட ஒரு பெரிய இராணுவத்தில் அவர் ஒருவராக இருந்தார், இது அவரது முதல் இராணுவப் பாத்திரமாகும். பின்னர் அவர் தனது குஜராத் பிரச்சாரங்களின் போது பேரரசருடன் சென்றார். இராணுவ பின்னணி இல்லாத போதிலும், அவர் அடிக்கடி அக்பருடன் போாில் பங்கேற்றார், பொருளாதார விஷயங்களில் ஆலோசகராக இருந்த தோடா்மால் போன்ற தலைமைத்துவ பதவிகளுக்கும் அவர் நியமிக்கப்பட்டார்.[5][6] அக்பா் தீன் இலாஹி எனும் ஒரு மதத்தைத் துவங்கினார், இது இந்து மற்றும் முஸ்லீம் நம்பிக்கைகளின் கலவையாக இருந்தது. ஐயினி-ஐ-அக்பரி இல்,தீன்-இ இலாஹியில் அக்பர் தவிர மற்றவர்களில் இந்துவான பீர்பால் ஒருவரே இருப்பதைக் குறிப்பிடுகிறது.
அபுல்-ஃபாசல் இப்னு முபாரக் மற்றும் அப்துல் காதிர் படாயுனி ஆகியோர் அக்பரின் அவையில், இருந்த அறிஞர்கள் ஆவர். அபுல் ஃபசல் பீர்பாலை பற்றிக் குறிப்பிடுகையில், அவரை இருபத்தைந்து கெளரவ பட்டங்கள் மற்றும் இரண்டாயிரம் தளபதியின் தரவரிசை என்று பட்டியலிட்டார். படாயுனி பீர்பால் ஒரு இந்து என்பதால் அவநம்பிக்கை கொண்டார். மேலும், பீர்பால் ஒரு இந்து இசைக்கலைஞராக, எப்படி அரசரின் ஆதரவைப் பெற்று, "நம்பிக்கைக்குரியவர்" ஆனார் என்கிற காழ்ப்புணர்ச்சி படாயுனிக்கு இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அவர் பீர்பாலின் திறமையை ஒப்புக் கொண்டார். அக்பரின் பிற மரபுவழி முஸ்லீம் ஆலோசகர்கள் பீர்பலை விரும்பவில்லை என்று அறியப்படுகிறது.
கொல்கத்தாவின் விக்டோரியா ஹாலில் உள்ள அக்பரி நாவோ ரத்னா என்ற ஓவியம் அக்பருக்கு அடுத்தபடியாக பீர்பால் உள்ளதைக் காட்டுகிறது. சக்கரவர்த்தி ஆரம்பத்தில் அவரை மகிழ்விப்பதற்காக பீர்பாலை தன்னருகில் வைத்துக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில், அவரை முக்கியமான பணிகளில் அனுப்பினார். அரண்மனை வளாகத்திற்குள் ஃபதேபூர் சிக்ரியில் இரண்டு மாடி வீட்டை பீர்பால் பெற்றதாகக் கூறப்படுகிறது. [6] இது, அக்பரின் சொந்த அறைகளுக்கு அருகில் கட்டப்பட்டது. என்றும், அக்பர் தனது பக்கத்திலேயே பீர்பாலை வைத்திருந்து அனுபவித்ததாக கூறப்படுகிறது. அரண்மனை வளாகத்திற்குள் வசிக்கும் ஒரே பிரபுவாக பீர்பால் விளங்கினார். மேலும், அந்த அரண்மனையின் ஏழு வாயில்களில் ஒன்று "பீர்பாலின் வாயில்" என்று அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bīrbal | Indian courtier". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
- ↑ Gayatri Rahasya: Or, An Exposition of the Gayatri
- ↑ Meenakshi Khanna, ed. (2007). "Section 1: Kingship and Court Mixing the Classic with the Folk". Cultural History of Medieval India. Berghahn Books. pp. 24–44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87358-30-5.
- ↑ Neela Subramaniam. Birbal Stories (32 pp). Sura Books. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-301-1. பார்க்கப்பட்ட நாள் 30 June 2013.
- ↑ S.R. Sharma (1 January 1999). Mughal Empire in India: A Systematic Study Including Source Material. Atlantic Publishers & Dist. p. 787. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-819-2. பார்க்கப்பட்ட நாள் 29 June 2013.
- ↑ G. George Bruce Malleson (2001). Akbar and the Rise of the Mughal Empire. Cosmo Publications. pp. 131, 160, 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7755-178-5. பார்க்கப்பட்ட நாள் 29 June 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- Meenakshi Khanna, ed. (2007). "Section 1: Kingship and Court Mixing the Classic with the Folk". Cultural History of Medieval India. Berghahn Books. pp. 24–44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87358-30-5.
- Neela Subramaniam. Birbal Stories (32 pp). Sura Books. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-301-1. Retrieved 30 June 2013.