பி. அக்ராகரம் முனியப்பன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி.அக்ராகரம் முனியப்பன் சுவாமி
சுவாமி
அக்ராகரம் முனியப்பன் கோவில்

பி. அக்ராகரம் முனியப்பன் கோவில் (B.Agraharam Muniyappan Saami Kovil) தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் அக்ரகாரத்தில் அமைந்துள்ளது.[1] தருமபுரியில் இருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் ஒகேனக்கல் அல்லது பென்னாகரம் செல்லும் சாலையில் பி. அக்ராகரம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் பிளியனூர் அக்ரகாரம் என வழங்கப்பட்டு, தற்போது பி. அக்ரகாரம் என அழைக்கப்படுகிறது.

கோவில் வரலாறு[தொகு]

முனியப்ப சுவாமிக்கு இங்கு கோவில் அமைந்ததின் பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக இக்கிராமத்து மக்களில் சிலர் சுமார் 12 மைல் தொலைவில் உள்ள கும்பரசன் கோட்டை என்ற மலைப்பகுதியில் இருந்து மூங்கிலை வெட்டி எடுத்து வந்தனர். ஒரு நாள் காட்டின் உள்ளே தனியாக சென்று மரம் வெட்டிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென உடல்நல பாதிப்புக்கு உள்ளாகி சுருண்டு விழுந்தார். அந்த நொடி அங்கு வந்த ஒருவர் பாதிக்கப்பட்டவரை தூக்கி தன்னோடு குதிரையில் அமர்த்தியவாறு காட்டு எல்லையை கடந்து வந்து ஊருக்குள் இறக்கி விட்டுச் சென்றார். பாதிக்கப்பட்டவர் ஊர் எல்லையை அடைந்தவுடன் இயல்பான நிலைக்கு வந்தார்.அதன் பின் அந்த நிகழ்வை கிராம மக்களிடம் தெரிவித்தார். குதிரையில் வந்தவர் காவல் தெய்வமான முனியப்ப சுவாமி என்பதை உணர்ந்தனர். ஊர் மக்கள் அதை தொடர்ந்து பி.அக்ரகாரத்தில் ஒரு கோவில் எழுப்பி வழிபட்டு வருகிறார்கள்.

மூலவர்[தொகு]

தீய சக்திகளை விரட்டி நல்ல சக்திகளை அருளுவதாக நம்பப்படும் எளிய தெய்வமான முனியப்பன் கோவிலின் மூலவராவார். ஏரிக்கரையின் ஓரத்தில் ஆறு அடி உயரம் உள்ள மேடையில் 25 அடி உயரமும், 12 அடி அகலத்திலும் அமர்ந்த நிலையில் இவர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். சுதை வடிவிலான மூலவர் திருமேனியின் இரு புறமும் குதிரை, சிப்பாய் மற்றும் குதிரை வீரன் சிலைகள் அமைந்துள்ளன.

சிறப்பம்சம்[தொகு]

அமாவாசை நாட்களில் 108 போற்றிகள் சொல்லி சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. அன்று இரவு 7.00 மணிக்கு தொடங்கி 11.00 மணி வரையில் 12 விதமான அபிசேகங்கள் முனியப்ப சுவாமிக்கு நடைபெறுகின்றன. அப்போது சுவாமியின் மடியில் தேங்கும் அபிசேகக தீர்த்தம் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. அதை உட்கொண்டாலோ தலை மீது தெளித்துக்கொண்டாலோ சர்வ ஐசுவரியங்களும் கிட்டும் என்று மக்கள் நம்புகின்றனர்.

விழாக்கள்[தொகு]

செவ்வாய் மற்றும் ஆடிப்பெருக்கு, தைப்பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இத்தல முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை நடைபெறும் விழா மிகப் பிரசித்திப்பெற்றதாகும். இலட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு திருவிழாவில் பங்குகொள்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.[2]

விழாவில் தருமபுரி, கிருட்டிணகிரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். முனியப்பனுக்கு மார்கழி 1- ஆம் தேதியில் இருந்து விரதம் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டும், அலகு குத்திக் கொண்டும் ஊர்வலமாக கோவிலிக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பென்னாகரம் அருகே முனியப்பன் கோவில் திருவிழா https://www.maalaimalar.com/news/district/muniappan-temple-festival-near-pennagaram-553956?infinitescroll=1". மாலை மலர். https://www.maalaimalar.com/news/district/muniappan-temple-festival-near-pennagaram-553956?infinitescroll=1. பார்த்த நாள்: 14 April 2023. 
  2. "பி. அக்ரகாரத்தில் முனியப்பன் கோயில் திருவிழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2021/dec/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-3763901.html. பார்த்த நாள்: 14 April 2023. 
  3. தினத்தந்தி (2022-12-28). "பென்னாகரம் அருகே பி.அக்ரகாரத்தில் முனியப்பன் கோவில் திருவிழா". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.