உள்ளடக்கத்துக்குச் செல்

பிலாவடி கருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிலாவடிக் கருப்புசாமி என்பவர் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் பேரையூர் வட்டங்களுக்கு இடையே, அமைந்துள்ள சதுரகிரி மலையில்[1] சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலின் காவல் தெய்வம் ஆவார்.[2] சுந்தரமகாலிங்கத்தை வணங்கச் செல்பவர்கள் முதலில் பலா மரத்தின் அடியில் குடிகொண்டுள்ள கருப்பசாமியை வணங்கி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது நம்பிக்கை.[3]

தைலக்கிணறு

[தொகு]

சதுரகிரியில் தைலக் கிணறு ஒன்று உள்ளது. சித்தர்கள் இங்கு இரசவாதம் செய்வதற்காகத் தயாரித்த மூலிகைக் குழம்பின் மிச்சத்தை இந்தத் தைலக்கிணற்றில் கொட்டிய பின்னர், கிணற்றிற்கு காவலாக கருப்பசாமி என்னும் காவல் தெய்வத்தை நியமித்ததாகவும், இந்தக் தெய்வம், இக்கிணற்றை பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைத்து வைத்துப் பாதுகாத்து வருவதாகவும் செவிவழிக் கதைகள் இங்கு வலம் வருகின்றன. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் இயற்றிய போகர் ஜெனன சாகரம் என்னும் நூலில் இந்தத் தைலக் கிணற்றின் அமைப்பு குறித்து விவரிக்கும் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.

காதமற் கப்பலாக
வாச்சரியம் பெரியதாகப் பாறையொன்று”
“ஆமென்ற பாறையிலே குழிதானுண்டுமதில்
நல்லதொரு தயிலமெல்லா மூடினேனே
மூனேன் கருப்பனையங் காவல்வைத்து

விளக்கம்: கப்பல் போன்று காணப்படும் பெரிய பாறையில் இங்கு உள்ளது. இந்தப் பெரிய பாறையில் உள்ள குழியில் மிகவும் அரிதான தைலத்தைக் கொட்டி மூடினேன். இந்தக் குழிக்குக் கருப்பனைக் காவலாக வைத்துள்ளேன் என்று இப்பாடலில் போகர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.[4]

பிலாவடி கருப்பசாமி சன்னதி

[தொகு]

தைலக்கிணற்றை ஒட்டி ஒரு பலா மரத்தின் கீழே பிலாவடி கருப்பசாமி சன்னதி அமைந்துள்ளது. எனவே இவர் பிலாவடிக் கருப்பு (பலா மரத்தடிக் கருப்பு) என்று அழைக்கப்படுகிறார். பாறையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் இரு கைகளுடன் நின்ற கோலத்தில் கருப்பசாமியின் சிற்பம் அமைந்துள்ளது. இடுப்பில் கங்கு வைத்து இறுக்கிக் கட்டிய கச்சையுடன், அகலத் திறந்த விழிகள், முறுக்கு மீசையுடன் காணப்படும் இச்சிற்பத்தின் இரண்டு கைகளுள் வலது கை ஓங்கிய வலது கை வீச்சரிவாளை ஏந்தியவாறும், இடது கை கதை மற்றும் சங்கு ஏந்தியவாறும் காட்டப்பட்டுள்ளன.[5] இந்த பலா மரத்தில் ஒரு பலாக்காய் விழுந்தால் தான் அடுத்த காய் காய்க்குமாம்.

தல வரலாறு

[தொகு]

சுந்தர மகாலிங்கமான சிவன் சதுரகிரியில் இருந்து சிறப்பு பெறுவதற்கு காரணம் இந்த பிலாவடி கருப்பு தான் என்கிறார்கள். காவல் தெய்வமான பிலாவடி கருப்பு காவல் செய்யும் பசுக்களின் பாலை சிவன் தினமும் தெரியாமல் குடித்துவிடுவாராம். ஒரு நேரம் கருப்பசாமியிடம் சிவன் சிக்கிக்கொண்டு பிரம்படி பட்டாராம். பின்னர் பிலாவடி கருப்புக்கு சிவன் தரிசனம் தந்ததனால் பிலாவடிக் கருப்புசாமி சதுரகிரியில் சிறப்பு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.[6]

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலாவடி_கருப்பு&oldid=3590195" இலிருந்து மீள்விக்கப்பட்டது