உள்ளடக்கத்துக்குச் செல்

பிறப்பிடத் தேவாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறப்பிடத் தேவாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் பெத்லகேம், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்31°42′15.50″N 35°12′27.50″E / 31.7043056°N 35.2076389°E / 31.7043056; 35.2076389
சமயம்கிறிஸ்தவம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு327

பிறப்பிடத் தேவாலயம் (Church of the Nativity) உலகிலுள்ள பழைமையானதும் தொடர்ந்து செயற்பாட்டிலுள்ளதுமான தேவாலயங்களில் ஒன்றாகும். பாலத்தீன ஆட்சிப் பகுதியில் உள்ள பெத்லேகேமில் அமைந்துள்ள இத்தேவாலயம் இயேசு பிறந்த இடமாகக் கருதப்படும் தளத்தில் குகையின் மேல் கட்டப்பட்டுள்ளது. இது கிறித்தவர்களுக்கு மிகப் புனித இடமாக உள்ளது.[1]

வரலாறு

[தொகு]

பெத்லகேம் ஊருக்கு வெளியே ஒரு குகைப் பகுதியில் மரியா இயேசுவை ஈன்றெடுத்தார் என்னும் செய்தியை கி.பி. 2-3 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மறைச்சான்றாளர் யுஸ்தீன், ஒரிஜென் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

காண்ஸ்டண்டைன் மன்னரின் தாய் ஹெலன் அரசி இயேசு பிறந்த இடத்தில் ஒரு கோவில் கட்டி எழுப்ப ஏற்பாடு செய்தார். அவ்வாறே 327-333 ஆண்டுக் காலத்தில் முதல் கோவில் கட்டப்பட்டது.

அக்கோவில் 529இல் நிகழ்ந்த சமாரியர் கலகத்தின்போது அழிந்தது. அதே இடத்தில் பெரிய அளவில் புதிய கோவில் ஒன்றினை முதலாம் ஜஸ்டீனியன் பேரரசர் 565இல் கட்டி எழுப்பினார். அக்கோவில் இன்றுவரை நிலைத்துள்ளது.

கோவில் ஆட்சி முறை

[தொகு]

இயேசு பிறந்த இடத்தில் எழுகின்ற கோவில் எல்லாக் கிறித்தவர்களுக்கும் முதன்மை வாய்ந்தது. இன்று இக்கோவிலின் ஆட்சி உரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிரேக்க மரபுவழி திருச்சபை, மற்றும் ஆர்மீனிய திருத்தூதர் சபை என்னும் மூன்று அமைப்புகளின் கையில் உள்ளது. இங்கு கிருத்துமஸ் நாள், ஜனவரி 7 ( கிரேக்க மரபுவழி திருச்சபை முறைப்படி ), மற்றும் ஜனவரி 17 ( ஆர்மீனிய திருத்தூதர் சபை முறைப்படி) கொண்டாடப்படுகிறது.

குகை கோவில் பீடம்

[தொகு]

இங்குள்ள குகை கோவில் பீடமானது, குழந்தை இயேசு பிறந்தவுடன் அவரை கிடத்திய இடமாக நம்பப்படுகிறது. இது தரைமட்டத்திற்கு கீழ் உள்ளது. இதற்க்கு இரண்டு படிகட்டுக்கள் உள்ளன. இவ்விடம், வெள்ளை பளிங்கு கற்க்களால் ஆனது. குழந்தை இயேசுவை கிடத்திய இடத்தை குறிப்பிட, 14 முனைகள் கொண்ட, வெள்ளியினால் ஆன நட்சத்திர வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் "இங்கு, இயேசு, கன்னி மரியாவிற்க்கு பிறந்தார் -1717" என லத்தீன் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 14 முனைகள், இயேசுவின் மரபுவழியில் உள்ள மூன்று விதமான 14 மரபுவழியை குறிக்கிறது. இந்த நட்சத்திரத்தை சுற்றி 15 வெள்ளி விளக்குகள் உள்ளன. இவற்றில் 6 - கிரேக்க மரபுவழி திருச்சபையையும், 5 - ஆர்மீனிய திருத்தூதர் சபையையும், 4 - உரோமன் கத்தோலிக்க திருச்சபையையும் குறிக்கின்றன. இதன் நடுவே உள்ள வட்டமான குழியினூடே உள்ள பாறையின் மீது குழந்தை இயேசுவை கிடத்தியதாக நம்பப்படுகிறது. இவற்றிற்க்கு மேல் ஒரு உயர் பீடம் உள்ளது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்

[தொகு]
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
பிறப்பிடத் தேவாலயம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்

பிறப்பிடத் தேவாலயம்
UNESCO regionமேற்காசியா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2012 (36th தொடர்)

வரலாற்றுச் சிறப்பும் சமய முதன்மையும் கொண்ட இக்கோவில் ஓர் உலகப் பாரம்பரியக் களம் என்று யுனெசுக்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தீன ஆட்சிப் பகுதியின் முதல் உலகப் பாரம்பரியக் களமாக இக்கோவில் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். பழுதுபார்க்கும் பணியும் புதுப்பித்தல் பணியும் அக்கோவிலுக்கு உடனடியாகத் தேவைப்படுகின்றன என்பது இம்முடிவுக்கு அடித்தளமாயிற்று.

2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் யுனெசுக்கோ நிறுவனம் பாலத்தீனத்தை நாடுகள் பட்டியலில் சேர்த்தது. அதுகுறித்து இசுரயேல் எதிர்ப்புத் தெரிவித்ததால் சர்ச்சை எழுந்தது.

அதன் பின்னணியில் யுனெசுக்கோ நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களக் குழு 2012ஆம் ஆண்டு சூன் மாதம் 29ஆம் நாள் கூட்டத்தில், 36ஆம் அமர்வின்போது இயேசு பிறந்த இடக் கோவில் உலகப் பாரம்பரியக் களம் என்று அறிவித்தது.

இந்த முடிவு அரசியல் உள்ளர்த்தம் கொண்டது என்று இசுரயேலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் கூறின. ஆனால், பாலத்தீன ஆட்சிப் பகுதி யுனெசுக்கோ நிறுவனத்தின் முடிவை வரவேற்றுள்ளது.[2]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறப்பிடத்_தேவாலயம்&oldid=3221412" இலிருந்து மீள்விக்கப்பட்டது