பிரேமா கரந்த்
பிரேமா கரந்த் | |
---|---|
பிறப்பு | 15 ஆகத்து 1936 பத்ராவதி, மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 29 அக்டோபர் 2007 பெங்களூர், இந்தியா | (அகவை 71)
பணி | நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர் |
வாழ்க்கைத் துணை | பி. வி. கராந்த் (1958–2002) |
பிரேமா கரந்த் (Prema Karanth) (15 ஆகத்து 1936 - 29 அக்டோபர் 2007) இவர் ஓர் இந்திய நாடக ஆளுமையும், கன்னடத் திரைப்படத்தின் முதல் பெண் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். [1] பி.வி.கராந்தின் மனைவியான இவர், தான் நடத்திய குழந்தைகள் நாடகங்களுக்காக அறியப்பட்டார். எம்.கே. இந்திராவின் புதினத்தை அடிப்படையாகக் கொண்ட 'பனியம்மா' (1983) என்றத் திரைப்படத்தை இயக்கியபோது கன்னடத் திரைப்படத்துறையில் முதல் பெண் இயக்குநரானார் .
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]பிரேமா கரந்த் 1936 இல் கருநாடக மாநிலத்தின் சிவமோகா மாவட்டம் பத்ராவதியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது தந்தையான தேவோஜி ராவை தனது இளம் வயதிலேலே இழந்தார். இவரது தாயார் கமலாம்மாவுக்கும் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர், அவரைத் தொடக்கூட அனுமதிக்கப்படவில்லை. [2] பிரேமா தனது ஆரம்ப வாழ்க்கையை கோலார் மாவட்டத்தில் உள்ள சிட்லகட்டாவில் கழித்தார். மேலும் தனது தாயார் இறந்த பிறகு, இவர் தனது தாத்தா பாட்டிகளால் வளர்க்கப்பட்டார். பள்ளிப்படிப்பை முடித்ததும், புனித தெரசா பள்ளியில் ஆசிரியராக சேர பெங்களூருக்கு வந்தார். இவர் தட்டச்சு கற்றுக் கொண்டார். மேலும், ஆரம்ப பள்ளிகளில் கற்பிக்கத் தொடங்கினார். பிரேமா தான் பணிபுரிந்த பள்ளிகளில் சிறிய நேர மேடை நாடகங்களையும் நடத்தத் தொடங்கினார். தான் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் பி.வி.கராந்தை ஒரு நண்பரின் வீட்டில் சந்தித்தபோது மனம் மாறினார். 1958 ஆம் ஆண்டில், இவர்கள் ஆர்ய சமாஜ சடங்குகளின் கீழ் திருமணம் செய்துகொண்டு வாரணாசிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு பிரேமா தனது கல்வியைத் தொடர பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பி.வி.கராந்த் பின்னர் தேசிய நாடகப் பள்ளியில் சேர தில்லிக்குச் சென்றார். பிரேமா அவருடன் சென்று அரவிந்தோ ஆசிரமத்தில் ஆசிரியராக சேர்ந்தார். கல்வியில் நாடகத்தை பரிசோதிக்கத் தொடங்கிய இவர், நாடகங்களைப் பயன்படுத்தி வரலாறு, கணிதம் போன்ற பாடங்களைக் கூட கற்பிக்கத் தொடங்கினார். தனது கணவரின் தூண்டுதலின் பேரில், இவரும் தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு இவர் நாடகங்களைப் பயின்றார். மேலும், அதில் பட்டப்படிப்பையும் முடித்தார். பட்டம் பெற்ற பிறகு, இவர் தேசிய நாடகப் பள்ளியுடன் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்..
தொழில்
[தொகு]பிரேமா கரந்த் ஒரு நாடக ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். முக்கியமாக குழந்தைகளுக்கான ஹெட்டயனா, தைத்யா, பண்டா பண்டா குணவந்தா மற்றும் ஜெயண்ட் மாமா போன்ற நாடகங்களை இயக்கியுள்ளார். இவரது நாடகங்கள் முக்கியமாக கன்னடத்திலோ அல்லது கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பிற இந்திய மொழிகளிலோ எழுதப்பட்டவை. [2] இவர் பெனகா மக்கால கேந்திரா என்று அழைக்கப்படும் குழந்தைகள் தொகுப்பைத் தொடங்கினார். இது அலிலு ராமாயணம் போன்ற நாடகங்களை அரங்கேற்றுவதைத் தவிர, குழந்தைகளுக்கு மைம், ஆடை வடிவமைப்பு மற்றும் முட்டுகள் பயன்பாடு ஆகியவற்றைக் கற்பிப்பதில் ஈடுபட்டிருந்தது. இந்த நிறுவனம் அதன் முதல் நாடகத்தை அலிபாபா என்ற தலைப்பில் 1979 இல் அரங்கேற்றியது. இதில் இவர் ஒரு பிரபலமான ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்தார். மேலும் ஹயவதானா, ஓடிபஸ், ஓதெல்லோ மற்றும் கிங் லியர் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு ஆடைகளை வடிவமைத்துள்ளார்.
திரைப்படங்களில்
[தொகு]ஜி.வி. ஐயரின் திரைப்படமான ஹம்சகீத்தின் ஆடை வடிவமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டபோது திரைப்பட உலகத்துடன் பிரேமாவின் தொடர்பு தொடங்கியது. [3] 1977 ஆம் ஆண்டில் குத்ரே மோட்டே படத்திற்கான கலை இயக்குநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் கலை இயக்கத்துடன் மட்டுமே தொடர்பு கொண்டிருந்த பிரேமா, திரைப்படத் தயாரிப்பிலும் முயற்சித்தார். தனது முதல் இயக்குனர் முயற்சி கன்னட புதினத்தை அடிப்படையாகக் கொண்ட பனியம்மா ஆகும், மேலும் இந்த படம் இவருக்கு விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுத் தந்தது. இளம் வயதில் விதவையாக இருக்கும் ஒரு பெண்ணின் கதையையும், ஆண் ஆதிக்கம் செலுத்தும் சமுதாயத்தில் அதனுடன் இணைந்திருக்கும் களங்கத்தை சமாளிக்க அவளது போராட்டங்களையும் தைரியத்தையும் பற்றிய படமாகும். [4]
மேற்கோள்கள்
[தொகு]- Dissanayake, Wimal (2004). Indian Popular Cinema: A Narrative of Cultural Change. Trentham Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85856-329-1.
- Audrey Foster, Gwendolyn (1995). Women Film Directors: An International Bio-Critical Dictionary. Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-28972-7.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Theatre personality Prema Karanth dead". The Hindu (Chennai, India). 2007-10-30. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Theatre-personality-Prema-Karanth-dead/article14866412.ece. பார்த்த நாள்: 2007-11-01.
- ↑ 2.0 2.1 "Committed to theatre". Online Edition of The Hindu, dated 2002-12-02. பார்க்கப்பட்ட நாள் 2001-11-01.
- ↑ Wimal Dissanayake (2004), p83
- ↑ Gwendolyn Audrey Foster (1995), p206