பாத்திமா முஜிப் பில்கீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாத்திமா முஜிப் பில்கீசு
Fatima Mujib Bilqees

دانشمند فاطمہ مجیب بلقیس
பிறப்புபிப்ரவரி 10, 1936
இறப்புபிப்ரவரி 7, 2016 (வயது 79)
தேசியம்பாக்கித்தானியர்
பணிஒட்டுண்ணியியல் குடற்புழுவியல்

பாத்திமா முஜிப் பில்கீசு (ஆங்கிலம்:Fatima Mujib Bilqees; உருது: دانشمند فاطمہ مجیب بلقیس) பாக்கித்தானிய அறிவியலாளர், ஒட்டுண்ணியியல், குறிப்பாக குடற்புழுவியலில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.[1][2][3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பில்கீசு பிப்ரவரி 10, 1936-ல் பிறந்தார்.[1] இவர் 1966-ல் தொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஒட்டுண்ணியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். தனது உயர் முனைவர் பட்டம் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் கராச்சி பல்கலைக்கழகத்திலும் 1979-ல் பெற்றார். இவர் ஜெர்மனியின் உலக கலாச்சார குழுவின் பட்டயத்தினை பெற்றவர் ஆவார்.[1]

தொழில்[தொகு]

பில்கீசு உருது மொழியில் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் ஒரு அறிவியலாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் இந்த மொழியில் 75க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டார். இவர் ஆங்கில மொழியில் 500க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[1]

பில்கீசு 1985-ல் பாக்கித்தான் ஜர்னல் ஆப் பாராசிட்டாலஜியை நிறுவினார். இது இந்தத் துறையில் பன்னாட்டு ஆராய்ச்சிப் பணிகளை வெளியிடுகிறது. ஒட்டுண்ணிக் குழுக்களின் அனைத்து அம்சங்களையும் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், மற்றும் நூல்விவரங்களை உள்ளடக்கிய இந்த இதழ் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகிறது.[4]

ஹெல்மின்தாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் வாஷிங்டன் மற்றும் வளரும் உலகத்திற்கான அறிவியல் பெண்களுக்கான அமைப்பு போன்ற பல்வேறு கல்விச் சங்கங்களில் உறுப்பினராகவும் பில்கீசு இருந்தார்.[2] பாக்கித்தானின் விலங்கியல் சங்கத்தில் 'துணைத் தலைவராக (தெற்கு)' பணியாற்றினார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பில்கீசுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்.[1]

பில்கீசு பிப்ரவரி 7, 2016 அன்று தனது 79 வயதில் இறந்தார்.[1]

கவுரவம்[தொகு]

பில்கீசு 1000 புழுக்கள் வகையினைக் கண்டுபிடித்துள்ளார். இதில் 40 புதிய சிற்றினங்களுக்கு இவரின் பெயரிடப்பட்டுள்ளன.[1][3] பலுசிஸ்தான் பல்கலைக்கழகம், பெண்களுக்கான ஜின்னா பல்கலைக்கழகம், பெடரல் உருது பல்கலைக்கழகம் மற்றும் சிந்து பல்கலைக்கழகம் உள்ளிட்ட பலவற்றில் முனைவர் பட்ட ஆய்வுத் திட்டங்களை மேற்பார்வையிட்டதால், பல பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆசிரியர்களை உருவாக்கியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு.[1]

விருதுகள்[தொகு]

பில்கீசு தனது கல்விப் பணிக்காகப் பின்வரும் முக்கிய விருதுகளைப் பெற்றார்:[1]

  • பாக்கித்தானின் விலங்கியல் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது. ஒட்டுண்ணியியல் துறையில் இவரது வாழ்நாள் ஆராய்ச்சி பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக வழங்கப்பட்டது
  • கராச்சி பல்கலைக்கழகத்தால் தாவர நெமட்டாலஜியில் அறிவியல் பங்களிப்புக்கான கேடயம்
  • கராச்சி பல்கலைக்கழகத்தின் நிஷான்-இ-அஸ்மத்-இ-இல்ம்
  • விலங்கியல் துறையில் அவரது ஆராய்ச்சிப் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக பாக்கித்தான் அறிவியல் அகாதமியின் தங்கப் பதக்கம்
  • பாக்கித்தான் ஜனாதிபதியிடமிருந்து பெண் விஞ்ஞானி விருது.

மேற்கோள்கள்[தொகு]