நிறைவு (துடுப்பாட்டம்)
துடுப்பாட்டத்தில் நிறைவு (Over) என்பது வீச்சுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் அளவாகும். ஒரு நிறைவு என்பது தொடர்ச்சியான ஆறு பந்து வீச்சுகளை உள்ளடக்கியது. வழக்கமாக ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே ஒரு நிறைவு முழுவதும் பந்து வீசுவார். எனினும், அந்த நிறைவின் இடையே பந்துவீச்சாளர் காயமடைந்து பந்து வீச முடியாமல் போகுமிடத்து அவ்வணியின் வேறு ஒருவர் பந்து வீச அனுமதிக்கப்படுவார்.
வெற்று நிறைவு (maiden over) என்பது துடுப்பாடும் அணி எந்த ஓட்டங்களும் எடுக்காமல் முடியும் நிறைவையும் இழப்பு வெற்று (wicket maiden) என்பது இழப்புடன் முடியும் வெற்று நிறைவையும் குறிக்கும்.
கண்ணோட்டம்
[தொகு]பொதுவாக ஒரு நிறைவில் முறையான ஆறு வீச்சுகள் மட்டுமே கணக்கிடப்படும். அதில் அகல வீச்சு (wide) அல்லது பிழை வீச்சு (no ball) போன்ற முறையற்ற வீச்சுகள் கணக்கிடப்படாது. எனவே அதற்கு பதில் கூடுதலாக மற்றொரு முறை பந்து வீச வேண்டும்.[1]
வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டத்தில் நிறைவுகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு இருக்கும். மேலும் அதில் எந்தவொரு பந்துவீச்சாளரும் மொத்த நிறைவில் 20 விழுக்காடுக்கு அதிகமாக பந்துவீச இயலாது. எனவே 50 நிறைவுகள் கொண்ட துடுப்பாட்டத்தில் ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சமாக 10 நிறைவுகளுக்கு மட்டுமே பந்துவீச இயலும்.
தேர்வுத் துடுப்பாட்டத்தில் நிறைவுகள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு எந்த வரையறையும் இல்லை. எனினும் ஒரு நாளில் மொத்தம் 90 நிறைவுகள் வரை பந்துவீச வேண்டும்.
ஒருநாள் மற்றும் இருபது20 வகை துடுப்பாட்டங்கள் சமனில் முடியும்போது வெற்றியாளரை தீர்மானிக்க சிறப்பு நிறைவு என்ற முறை பயன்படுத்தப்படும். ஒருவேளை அதுவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட கூடுதலான நான்குகள் அடித்த அணி வெற்றி பெறும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Law 17 – The over". MCC. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.