பகுரைனின் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பகுரைனின் பொருளாதாரம்(ஆங்கிலம்:Economy of Bahrain) என்பது எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெரிதும் சார்ந்துள்ளது. பகுரைன் நாணயம் உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மதிப்புள்ள நாணய அலகு ஆகும்.[1] 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, பகுரைன் வங்கி மற்றும் சுற்றுலாத் துறைகளில் அதிக முதலீடு செய்துள்ளது.[2] நாட்டின் தலைநகரான மனாமா பல பெரிய நிதி கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. பகுரைனின் நிதித் துறை மிகவும் வெற்றிகரமாக உள்ளது. 2008 ஆம் ஆண்டில், லண்டன் நகரத்தின் உலகளாவிய நிதி மையங்களின் அட்டவணையின்படி பகுரைன் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நிதி மையமாக பெயரிடப்பட்டுள்ளது.[3][4] பகுரைனின் வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறை, குறிப்பாக இசுலாமிய வங்கி, எண்ணெய் தேவை காரணமாக உந்தப்படும் மற்ற பகுதிகளின் ஏற்றம் மூலம் பயனடைந்துள்ளது.[5] பெட்ரோலிய உற்பத்தி என்பது பகுரைனின் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் ஒன்றாகும். இது ஏற்றுமதி வருவாயில் 60 சதவீதமும், அரசாங்க வருவாயில் 70 சதவீதமும் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதமும் கொண்டுள்ளது.[6] அலுமினியம் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் இரண்டாவது பொருளாகும். அதைத் தொடர்ந்து நிதி மற்றும் கட்டுமானப் பொருட்களும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2011 பொருளாதார சுதந்திர அட்டவணையின்படி, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் பகுரைன் சுதந்திரமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது [1] மற்றும் இது உலகின் பத்தாவது சுதந்திரமான பொருளாதார நாடகும். பிரேசர் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு மாற்று அட்டவணையானது, பகுரைனை மற்ற 7 நாடுகளுடன் 44 வது இடத்தில் வைத்திருக்கிறது. பகுரைன் உலக வங்கியால் உயர் வருமான பொருளாதார நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது .

பொருளாதாரம் கண்ணோட்டம்[தொகு]

பகுரைனின் பொருளாதாரத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆதிக்கம் செலுத்துகின்றன. எண்ணெய் பகுரைன் வருவாயில் 85% ஐக் கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10%.[7] எண்ணெய் வளம் கொண்ட பாரசீக வளைகுடாவிலுள்ள அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது பகுரைன் ஒப்பீட்டளவில் மோசமாக உள்ளது; அதன் எண்ணெய் "கிட்டத்தட்ட வறண்டுவிட்டது", மேலும் இது சர்வதேச வங்கி மற்றும் சுற்றுலாவையே சார்ந்துள்ளது.[2] பகுரைனின் வேலையின்மை விகிதம் மிக அதிக அளவில் உள்ளது.[8] சராசரி தினசரி வருமானம் $12.8 அமெரிக்க டாலராக இருக்கிறது. பகுரைனில் தீவிர வறுமை ஒன்றும் இல்லையென்றாலும் 11 சதவீத குடிமக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர்.[9]

பகுரைனில் பல பெரிய நிதி நிறுவனங்கள் உள்ளன, அவை வளைகுடாவின் வணிக மூலதனம் என்று அழைக்கப்படுகின்றன. மிகவும் வளர்ந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுடன், பாரசீக வளைகுடாவில் வணிகத்துடன் கூடிய பன்னாட்டு நிறுவனங்கள் பகுரைனில் உள்ளது. ஏற்றுமதியில் பெரும் பங்கு இறக்குமதி செய்யப்பட்ட கச்சாவிலிருந்து தயாரிக்கப்படும் பெட்ரோலிய பொருட்களைக் கொண்டுள்ளது. பகுரைனில் கணிசமான அலுமினிய உற்பத்தியும் உள்ளது. கட்டுமானமும் பல பெரிய தொழில்துறை திட்டங்களில் தொடர்கிறது. இளைஞர்களிடையே வேலையின்மை, மற்றும் எண்ணெய் மற்றும் நிலத்தடி நீர்வளம் இரண்டுமே குறைந்து வருவது ஆகியவை பகுரைனின் நீண்டகால பொருளாதார சிக்கல்களாகும்.

முதலீடு[தொகு]

பகுரைனில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை மூலதனம் 2008 ஆம் ஆண்டில் உலக வங்கியால் 21,176 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. [2] பகுரைன் பொதுவாக ஒரு தனித்துவமான பொருளாதாரத்தை உருவாக்க திறந்திருக்கும் ஒரு நாடு ஆகும். மேலும் இது வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளை உருவாக்க திறந்திருக்கும் ஒரு நாடாகும்.

எண்ணெய்[தொகு]

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மட்டுமே பகுரைனில் குறிப்பிடத்தக்க இயற்கை வளங்கள் ஆகும். இவை குறைந்த இருப்புக்கள் இருப்பதால், கடந்த பத்தாண்டுகளில் பகுரைன் தனது பொருளாதாரத்தை பன்முகப்படுத்த பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. பகுரைன் அதன் எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு சுமார் 40,000 பீப்பாய்கள் (6,400 மீ³) என்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பெட்ரோலிய இருப்பு 10 முதல் 15 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகுரைன் பெட்ரோலிய நிறுவனம் சுத்திகரிப்பு நிலையம் 1935 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. ஒரு நாளைக்கு சுமார் 250,000 பீப்பாய்கள் (40,000 மீ³) சேமிக்கும் கொள்ளவைக் கொண்டுள்ளது. இது பாரசீக வளைகுடாவில் முதன்மையானது. சவூதி அரேபியாவிற்கு குழாய் வழியாக சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு பெரும்பாலான கச்சாவை வழங்குகிறது. சவூதி அரேபியாவின் அபு சாபா கடல் எண்ணெய் வயலில் இருந்து நிகர உற்பத்தியில் ஒரு பெரிய பகுதியையும் வருவாயையும் பகுரைன் பெறுகிறது.

வரி[தொகு]

வரிவிதிப்பு மற்றும் இறக்குமதி சட்டங்கள் பகுரைன் மற்றும் வெளிநாட்டுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும் சமமாக பொருந்தும், மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளூர் நிறுவனங்களுக்கு பொருந்தும் தேவைகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க வேண்டும். நீர்க்கரிமங்கள் மற்றும் அதனுடன் கிடைக்கும் பிற பொருட்களின் விற்பனையிலிருந்து வரும் வருமானத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு 46 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. பகுரைனில் தனிநபர் வருமான வரி இல்லை.

குறிப்புகள்[தொகு]