பகாவுல்லா
பகாவுல்லா Bahá'u'lláh | |
---|---|
பஹாவுல்லா ஆலயம் | |
பிறப்பு | மிர்சா உசைன்-அலி நூரி நவம்பர் 12, 1817 தெகுரான், பாரசீகம் (இன்றைய ஈரான்) |
இறப்பு | மே 29, 1892 ஏக்கோ, உதுமானியப் பேரரசு (இன்றைய இசுரேல்) | (அகவை 74)
கல்லறை | 32°56′36″N 35°05′32″E / 32.94333°N 35.09222°E |
அறியப்படுவது | பகாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் |
பின்வந்தவர் | அப்துல்-பாகா |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
|
பகாவுல்லா (Bahá'u'lláh, ba-haa-ol-laa அரபு மொழி: بهاء الله) "கடவுளின் புகழ்", நவம்பர் 12, 1817 – மே 29, 1892), பஹாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். இவர் பாரசீக நாட்டின் தெஹரான் நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் மிர்சா உசேய்ன் அலி. பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார். 1863 ஆம் ஆண்டு இவர் பாப் என்பவரால் கூறப்பட்ட இறைவனின் அவதாரம் தாமே என அறிவித்தார். பஹாவுல்லா பல சமய நூல்களையும் எழுதினார்.
இவர் பாலஸ்தீனத்தில் (தற்போது இஸ்ரேலில் பாஹ்ஜி என்ற இடத்தில் மறைந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மிர்சா உசேய்ன் அலி 1817 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை பாரசீகத்தின் ஷா மன்னரின் அரசவையில் ஓர் அமைச்சராகப் பணியாற்றியவர். பஹாவுல்லா குழந்தைப் பருவம் முதற்கொண்டே அறிவிலும் விவேகத்திலுமம் பெரிதும் வேறுபட்டவராகவும், நீதிக்கு பாடுபடுபவராகவும் புகழ்பெற்றிருந்தார். இவர் ‘பா’ப் அவர்களை ஒரு கடவுளின் அவதாரம் என ஏற்றுக்கொண்டு அச்சமயத்தின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் பெரிதும் பாடுபட்டார். இவருடைய மனைவியின் பெயர் ஆசிய்யா ஃகானும். இத்தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுள் உயரிரோடிருந்த மூவரின் பெயர்கள் – அப்து’ல்-பஹா, பாஹிய்யா ஃகானும் மற்றும் மிர்சா மிஃடி என்பவையாகும். இந்த மூவரும் பின்னாளில் தங்களின் தந்தையின் நிழலில் பஹாய் சமயத்திற்காகப் பல அரிய சாதனைகள் புரிந்தனர்.
கைது
[தொகு]‘பா’ப் அவர்களின் இறப்புக்கு அரசாங்கமே காரணம் என நம்பிய ‘பா’ப் அவர்களின் புத்தி பேதலித்த மூன்று சீடர்கள் மன்னரைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டனர். ஆனால் இத்திட்டம் நிறைவேறாததோடு, அந்த மூவரும் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். ‘பா’ப் அவர்களின் சீடர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகவும் பிரதானமாகவும் விளங்கிய பஹாவுல்லா அவர்களே இக்கூட்டத்தினருக்குத் தலைவர் என அரசாங்கம் தீர்மானித்து அவரைக் கைதும் செய்தது.
கைது செய்யப்பட்ட பஹாவுல்லா தெகரான் நகரின் பாதாளச் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டார். உள்ளே போவதற்கும் வெளியே வருவதற்கும் ஒரே வழியைக் கொண்டது இச்சிறை. அது சன்னல்களோ காற்றுப் புக வேறு வழிகளோ இல்லாத ஒரு பயங்கரமான சிறையாகும். இதற்குள் அடைக்கப்படும் பலர் இதற்குள்ளேயே இறந்துபோவது வழக்காம். பயங்கர துர்நாற்றம் நிறைந்த இச்சிறையில் பஹாவுல்லா 20 மற்றும் 50 கிலோகிராம் எடையுடைய சங்கிலிகளால் பிணைக்ப்பட்டு பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டார். “சியாச் சால்” என அழைக்கப்பட்ட இச்சிறையில்தான் தாம் கடவுளின் அவதாரம் எனும் அறிவிப்பு கனவில் ஒரு தேவகன்னியின் உருவில் அவருக்குக் கொடுக்கப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு ரஷ்ய தூதரின் தலையீட்டினால் பஹாவுல்லா குற்றமற்றவர் எனத் தீர்மானிக்கப்பட்டு, ஒரு நிபந்தனையோடு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அந்த நிபந்தனையானது, பஹாவுல்லா பாரசீக நாட்டை விட்டு நாடுகடத்தப்பட வேண்டும் என்பதாகும்.
நாடு கடத்தப்படல்
[தொகு]பெரும் பனியிலும் கடும் குளிரிலும், கர்ப்பினியாகவிருந்த தமது மனைவியோடும் தமது பிள்ளைகளோடும் பிற மக்களோடும் காடு மலைகளைக் கடந்து இராக் நாட்டின் பாக்தாத் நகருக்கு பஹாவுல்லா நாடுகடத்தப்பட்டார். இராக் நாடு அப்போது ஒட்டமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. 1853 ஆம் ஆண்டு பாக்தாத் நகரை வந்தடைந்த பஹாவுல்லா, அந்த நகரில் 1863 வரை வசித்தார். இங்கும் பொறாமைக்காரர்களாலும், எதிரிகளாலும் பல இன்னல்களுக்கு ஆளாகி, பஹாவுல்லா இரண்டு வருடம் வனவாசம் சென்றார். வனவாசத்திற்குப் பிறகு திரும்பி வந்த பஹாவுல்லா அவர்கள் அங்கு வாழ்ந்த ‘பா’ப் அவர்களைப் பின்பற்றிய சமூகத்தினரை மேம்பாடு காணச் செய்வதில் ஈடுபட்டார்.
இவரின் புகழ் வெகுவேகமாக எங்கெங்கும் பரவியது. இதன் காரணமாக அங்கு பாரசீகத்தின் தூதராக பணியாற்றியவரின் பொறாமைக்கும் ஆளானார். அத்தூதரின் தூண்டுகோலின் காரணமாக துருக்கிய மன்னரின் ஆணைப்படி இஸ்தான்புல் நகருக்கு வரும்படி பஹாவுல்லா ஆணையிடப்பட்டார். இந்த ஆணையின் முதல் படியாக, ஏப்ரல் 21ம் நாள் அவர் டைகிரிஸ் நதிக் கரையிலுள்ள ரித்வான் தோட்டம் எனும் பூங்காவிற்கு முதலில் சென்று 12 நாட்கள் தங்கினார். அவரின் குடும்பத்தினர் அவர் சென்ற ஒன்பதாம் நாள் அவரோடு சென்று சேர்ந்தனர். பிறகு 12வது நாள் அவரும் அவர்தம் குடும்பத்தினரும் சில நண்பர்களும் ரித்வான் தோட்டத்தை விட்டு கொன்ஸ்டான்டினோப்பல் (இஸ்தான்புல்) நகரை நோக்கிப் பிரயாணத்தைத் துவங்கினர்.
ரித்வான் தோட்டத்தில் பஹாவுல்லா சென்றடைந்த முதல் நாளன்று ‘பா’ப் அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட கடவுளின் தூதர் தாமே என அங்கிருந்தோருக்கு பஹாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். முகமது முன்னறிவித்த மஹ்தி மற்றும் தூதரும் தாமே என அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு தினம் (ஏப்ரல் 21) உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் ‘ரித்வான் முதல்’ நாள் என ஒரு மாபெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. இந்த ரித்வான் தோட்டத்தை விட்டு பஹாவுல்லா தமது குடும்பத்தினருடனும் வேறு பல நம்பிக்கையாளர்களுடனும் இஸ்தான்புல் நகரை நோக்கி பயணத்தைத் தொடங்கினார்.
சில மாதங்களே இஸ்தான்புல் நகரில் இருந்தார். ஆனால் அவரை அங்கும் இருக்கவிடாமல் துருக்கி அரசாங்கம் அவரை அந்நாளில் ஏட்ரியாநோப்பல் என வழங்கப்பட்ட எடிர்னே நகருக்குப் போகும்படி ஆணையிட்டது. அங்கும் அவரது எதிரிகளால் பஹாவுல்லா மறுபடியும் பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டார். இதன் பின்னணியில் செயல்பட்ட அவருடைய எதிரிகளின் செயல்களினால் அரசாங்கம் மீண்டும் பஹாவுல்லாவை நாடுகடத்த முடிவு செய்தனர். இம்முறை அவரை பாலஸ்தீனத்தின் ஆக்கா நகருக்கு நாடுகடத்த முடிவு செய்யப்பட்டது. ஏட்ரியாநோப்பல் நகரில் வசித்த காலத்தில் பஹாவுல்லா செய்த மகத்தான காரியம், தமது தூதுப்பணியை, தாம்தான் இறைவனின் அவதாரம் என்பதை நிருபங்கள் மூலம் உலக அரசர்களுக்கும், அதிபர்களுக்கும், சமயத்தலைவர்களுக்கும் தெரிவித்ததே ஆகும். ஆக்கா நகரம் ஒட்டமான் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட ஓர் ஊராகும். இந்த இடம் ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் குற்றவாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடமாகும். பஹாவுல்லா அவர்களும் அவருடன் இருந்தவர்களும் குற்றவாளிகளாகவே இங்கு அனுப்பப்பட்டனர். ஆக்கா நகர சிறைவாசத்தைப் பற்றி கூறுகையில் தமது வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் இந்த ஆக்கா நகரத்தின் சிறையில் அனுபவித்த துன்பத்திற்கு ஈடாகாது என பஹாவுல்லா கூறுகின்றார். ஆக்கா நகரத்தின் மீது பறக்கும் எந்தப் பறவையும் அந்த நகரின் கொடிய துர்நாற்றக் காற்று பட்டவுடன் அப்படியே செத்து விழும் என்பது அக்காலத்து வழக்கு. இங்கு பஹாவுல்லா படிப்படியாக ஆக்கா நகரத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் மக்களின் நன்மதிப்பை பெற்றார்.
சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவரும் அவரது குடும்பத்தினரும் மற்றவர்களும் சிறையிலிருந்து வெளியேறி சிறிது சிறிதாக ஆங்காங்கு ஆக்கா நகரில் குடியேறினர். பஹாவுல்லா அவர்கள் சிறைக்குப் பக்கத்திலிருந்த ஒரு வீட்டிற்கு முதலில் குடிபெயர்ந்து இறுதியாக பாஹ்ஜி எனப்படும் இடத்தில் ஒரு மாளிகைக்குக் குடிபெயர்ந்து மீதமிருந்த தமது இறுதிக்காலத்தை அங்கேயே கழித்தார். இந்த மாளிகையும் அதனை ஒட்டியுள்ள பஹாவுல்லா அவர்களின் கல்லறையும் இன்று பஹாய்களின் புனிதத் ஸ்தலங்களாக விளங்குகின்றன.
வெளி இணைப்புகள்
[தொகு]- பஹாவுல்லாவின் வரலாறு
- பஹாவுல்லா (bahai.org) பரணிடப்பட்டது 2004-10-10 at the வந்தவழி இயந்திரம்
- http://bci.org/prsamy/ பரணிடப்பட்டது 2008-12-01 at the வந்தவழி இயந்திரம்