நேர்ப்பின்னூட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சம், அதிர்ச்சி போன்ற நேர்ப்பின்னூட்டம் ஏற்பட்டதால் மிரட்சியடைந்து ஓடுகின்ற கால்நடை மந்தை
மந்தை மிரட்சியடைந்து ஓடுவதற்கான காரணத்தை நேர்ப்பின்னூட்டச் சுழல் வடிவில் உருவகிக்கும் படம்

நேர்ப்பின்னூட்டம் (Positive feedback) என்பது ஓர் அமைப்பில் சிறு சலனம் ஏற்படும் வேளையில் உண்டாகும் விளைவு அச்சலனத்தைப் பன்மடங்கு பெரிதாக்கிக் காட்டுகின்ற செயல்முறையைக் குறிக்கிறது.[1] "அகரம் ஆகாரத்தை அதிகரிக்கும்போது ஆகாரம் அகரத்தை மேலும் அதிகரிக்கும்" (A produces more of B which in turn produces more of A) என்னும் தத்துவச் சுழலாக நேர்ப்பின்னூட்டம் அமைகிறது.[2] அதற்கு மாறாக, எதிர்ப்பின்னூட்டம் ஏற்படும்போது ஓர் அமைப்பு குறைவடையவோ தாக்கப்படவோ செய்கிறது.[1][3]

கணிதத் துறையில் நேர்ப்பின்னூட்டம் என்பது பின்னூட்டம் என்னும் கொளுவியின்மீது நேர்த்தாக்கம் என்னும் கொளுவி சுற்றுவதைக் குறிக்கும்.[1][3] அதாவது, நேர்ப்பின்னூட்டத்தின் வழியாக உள்ளிடுகையின் அளவு அதிகரிக்கிறது.[4][5]

விளக்கம்[தொகு]

நேர்ப்பின்னூட்டம் நிகழும்போது ஓர் அமைப்பு தனது அசையாநிலையிலிருந்து அசையத்தொடங்குகிறது. கொளுவி ஈட்டு நேர்முறையாகவும் ஒன்றுக்கு மேலாகவும் அமைந்தால் பல்குவளர்ச்சி (exponential growth) ஏற்பட்டு, நடுநிலையிலிருந்து சலனம் உண்டாகி அசைவும் மாற்றமும் அதிகரிக்கும்[3] அமைப்பு அளவைகள் மிதமிஞ்சிய நிலைக்குப் போய், அமைப்பைச் சேதப்படுத்தவோ அழிக்கவோ செய்யக்கூடும்; அல்லது அமைப்பைப் பாதித்து அதை ஒரு புதிய நடுநிலைக்குக் கொணரக்கூடும். நேர்ப்பின்னூட்டத்தைக் கட்டுப்படுத்தும் கூறுகள் இவை: அமைப்பில் உள்ள குறிகள் வடிகட்டப்படுதல், மிதமாக்கப்படுதல், குறைக்கப்படுதல், அல்லது எதிர்ப்பின்னூட்டத்தால் நீக்கப்படுதல்/குறைக்கப்படுதல்.

சில எடுத்துக்காட்டுகள்[தொகு]

  • வேதியியல் எதிர்ச்செயல்களில் நேர்ப்பின்னூட்டம் அவ்வெதிர்ச்செயல்களின் வேகத்தைக் கூட்டக்கூடும்; சிலவேளைகளில் வெடித்துச் சிதறுறவும் செய்யலாம்.
  • பொருளாதார அமைப்புகளில் நேர்ப்பின்னூட்டம் அவ்வமைப்புகளை வளரச்செய்து, பின்னர் சிதைவுறச் செய்யக்கூடும்.
  • ஓர் ஒலிபெருக்கியிலிருந்து எழும் ஒலியை விரிக்கின்ற ஒலிப்பெட்டியிலிருந்து வரும் ஒலி மீண்டும் அந்த ஒலிபெருக்கியினால் விரிக்கப்பட்டு அச்செயல் சுழல்போல நிகழும்போது அங்கே நேர்ப்பின்னூட்டம் ஏற்படுகிறது. அப்போது ஒலிப்பெட்டியிலிருந்து காதைப் பிளப்பதுபோன்ற கீச்சுச் சத்தம் ஏற்படுவதும் ஊளை ஒலி ஏற்படுவதும் இதன் விளைவே.

உடலியங்கியலிலிருந்து நேர்ப்பின்னூட்ட எடுத்துக்காட்டுகள்[தொகு]

  • குழந்தையைப் பெற்றெடுக்கும் வேளையில், பேறுகாலம் நெருங்கிவரும்போது வலி ஏற்படுவதோடு தாயின் கருப்பை இறுகிச் சுருங்கத் தொடங்கும். அப்போது ஆக்சிடாசின் என்னும் நொதிப்பொருள் நரம்புத் தூண்டலை முன்மூளையில் உண்டாக்கவே, அதன் விளைவாக மேலதிக ஆக்சிடாசின் சுரக்கும். அது கருப்பைச் சுருக்கத்தை இன்னும் அதிகரிக்கும். இவ்வாறு குழந்தைப் பேறு நிகழும் செயலில் நேர்ப்பின்னூட்டம் நிகழ்வதைக் காணலாம்.[6](pp924-925)
  • இரத்தம் உறைகின்ற செயலிலும் நேர்ப்பின்னூட்டம் நிகழ்வதைப் பார்க்கலாம். காயம் ஏற்பட்ட உடல்பகுதியில் திசுக்கள் வேதிப்பொருள்களை வெளியேற்றி அவை குருதிச் சிறுதட்டுக்களைச் செயலாக்கும். இவ்வாறு செயலாக்கம் பெற்ற குருதிச் சிறுதட்டுக்கள் வேதிப்பொருள்களை வெளியேற்றி அவை மேலதிகக் குருதிச் சிறுதட்டுக்களைச் செயலாக்கத் தொடங்கும். இவ்வாறு விரைவில் இரத்தம் உறைந்துவிடுவதால் இரத்த ஒழுக்கு நின்றுவிடும். இது நேர்ப்பின்னூட்ட விளைவே.[6](pp392-394)
  • பாலூட்டும் செயலின்போது நேர்ப்பின்னூட்டம் நிகழ்கிறது. குழந்தை தாயின் முலைநுனியை வாயால் சுதப்பும் வேளையில் தாயின் உடலில் நரம்புசார் எதிர்ச்செயல் ஏற்பட்டு, தண்டுவடத்தின் வழியாக முன்மூளைப் பகுதியைச் சென்றடைகிறது. இச்செயல் கீழ்மூளையில் அமைந்துள்ள சளிச்சுரப்பியைத் தூண்டி அதனால் புரோலாக்டின் சுரந்து, அதன் விளைவாகப் பால் அதிகம் சுரக்கிறது.[6](p926)
  • பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலத்தில் எஸ்த்ரோஜென் அதிகரித்து, அதனால் கருமுட்டை வெளியேறுதல் நிகழ்வதில் நேர்ப்பின்னூட்டம் செயலாகிறது.[6](p907)

உடலியங்கியல் நிகழ்வுகளில் நேர்ப்பின்னூட்டம் நிறுத்தம் ஆதல்[தொகு]

நேர்ப்பின்னூட்டம் வழியாக மனித உடலில் நிகழும் செயல்பாடு நிறுத்தம் பெறுவதற்கான செயலும் உடலிலேயே நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக, குழந்தைப் பிறப்பு வேளையில் தாயின் கருப்பை சுருங்கி இறுகும் நேர்ப்பின்னூட்டம் குழந்தை பிறந்ததும் நின்றுவிடும். நேர்ப்பின்னூட்டம் வழியாக இரத்தம் உறைந்த பின்னர் சில வேதிப்பொருள்கள் இரத்த உறைவு நிறுத்தப்பட காரணிகளாகின்றன. அதுபோலவே, தாயின் முலைநுனியைச் சொதப்பிப் பாலுண்ணும் குழந்தை தாயின் மார்பகத்திலிருந்து வாயை அகற்றியதும் பால்சுரப்பது நின்றுவிடும். [6]

நேர்ப்பின்னூட்டம் செயல்படும் உளவியல் நிகழ்வுகள்[தொகு]

அறிவுத்திறன் மிக்க மாணவர்கள் தாம் ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய அறிவைப் பெறவேண்டும் என்று குறிக்கோள் வைத்து, அக்குறிக்கோளை அடைந்ததும் அதனால் ஏற்படும் நிறைவால் மகிழ்ந்து, மீண்டும் உயர்ந்த குறிக்கோளை முன்வைத்துச் செயல்பட்டு முன்னேறுவதில் நேர்ப்பின்னூட்டத் தத்துவம் துலங்குகிறது என்று வின்னர் என்னும் அறிஞர் விளக்குகிறார். அவர் இச்செயல்பாட்டை "வெற்றி வெறி" (rage to master) என்று அழைக்கிறார்.

சிறுவயதிலேயே பெரியவர்களுக்குரிய அறிவும் திறமையும் கொண்டோராய் விளங்கும் சிறுமுது அறிஞர் என்னும் நிகழ்வையும் நேர்ப்பின்னூட்டத்தின் வழி விளக்கலாம் என்று வாண்டெர்வெர்ட் என்னும் அறிஞர் கூறுகிறார். அக்கருத்தின்படி, செயல்பாட்டு நினைவுத்திறன் (working memory) சிந்தனை/செயல் வழியாக அதிகமதிகம் வெளிப்பட்டு, அது சிறுமூளைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சீரொழுக்காக முறைப்படுத்தப்படுகிறது. அது மறுபடியும் செயல்பாட்டு நினைவுத்திறனுக்கு ஊட்டம் தருகிறது. இவ்வாறு மீண்டும் மீண்டும் நிகழ்வதால் சில குழந்தைகள் அதிசயமான விதத்தில் தங்கள் வயதைப் பெரிதும் தாண்டிய அறிவும் திறமையும் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர்.

மொழியைக் கையாளுவதில் திறமை பெறுவதிலும் இத்தகைய நேர்ப்பின்னூட்டம் நிகழ்வதாக வாண்டெர்வெர்ட் கருதுகிறார்.

பொருளியலிலிருந்து எடுத்துக்காட்டுகள்[தொகு]

பொருளியியலில் நோபல் பரிசு பெற்ற அறிஞர் கன்னர் மிர்டால் (Gunnar Myrdal) என்பவர் பொருளாதார சமனின்மைக்கும் வறுமைக்கும் இடையே நேர்ப்பின்னூட்டம் இருப்பதைக் காட்டியுள்ளார். அதாவது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது ஏழைகளுக்கும் செல்வர்களுக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கிறது. அந்த அதிகரிப்பு வறுமையை வளர்க்கிறது. அதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வு மேலும் அதிகரிக்கிறது. இது ஒரு தீச்சுழல் போல (vicious cycle) செயல்படுகிறது.

கன்னர் மிர்டால் என்னும் அதே அறிஞர் ஐக்கிய அமெரிக்காவின் இனப்பிரச்சினையையும் நேர்ப்பின்னூட்டம் வழி விளக்கியுள்ளார். வெள்ளையர்கள் கருப்பர்களை அறிவிலும் நடத்தையிலும் தாழ்ந்தவர்களாகக் கருதுவதால் கருப்பர்கள் தாங்கள் உண்மையாகவே அப்படித்தான் இருப்பதாக நம்பத் தொடங்குகின்றனர். அதனால் அவர்கள் தம் தாழ்நிலையிலிருந்து மேலே எழ முடியாமற்போகிறது. அந்நிலையைச் சுட்டிக்காட்டி வெள்ளையர்கள் தங்கள் இனமே உயர்ந்தது என்னும் முற்சார்வுப் போக்கில் மீண்டும் உறுதிகொள்கின்றனர். இது ஒரு சுழல்செயலாக மாறிவிடுகிறது. ஒரு செயல் மற்றதற்குக் காரணமாகவும் விளைவாகவும் மாறுகிறது.

இதே தத்துவம் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்னும் வேறுபாடுகள் மாறாமல் வளர்ந்துகொண்டே போவதிலும் வெளிப்படுவதாக மிர்டால் காட்டுகிறார்.[7]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Ben Zuckerman and David Jefferson (1996). Human Population and the Environmental Crisis. Jones & Bartlett Learning. பக். 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780867209662. http://books.google.co.uk/books?id=a1gW4uV-q8EC&pg=PA42. 
  2. Keesing, R.M. (1981). Cultural anthropology: A contemporary perspective (2nd ed.) p.149. Sydney: Holt, Rinehard & Winston, Inc.
  3. 3.0 3.1 3.2 Bernard P. Zeigler, Herbert Praehofer, Tag Gon Kim Section (2000). Theory of Modeling and Simulation: Integrating Discrete Event and Continuous Complex Dynamic Systems. Academic Press. பக். 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780127784557. http://books.google.com/books?id=REzmYOQmHuQC&pg=PA55. "A positive feedback loop is one with a even number of negative influences [around the loop]." 
  4. S W Amos, R W Amos (2002). Newnes Dictionary of Electronics (4th ). Newnes. பக். 247. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780750656429. http://books.google.com/books?id=lROa-MpIrucC&pg=PA247. 
  5. Rudolf F. Graf (1999). Modern Dictionary of Electronics (7th ). Newnes. பக். 276. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780750698665. http://books.google.com/books?id=uah1PkxWeKYC&pg=PA276. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Guyton, Arthur C. (1991) Textbook of Medical Physiology. (8th ed). Philadelphia: W.B. Saunders. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7216-3994-1
  7. Berger, Sebastian. "Circular Cumulative Causation (CCC) à la Myrdal and Kapp — Political Institutionalism for Minimizing Social Costs" (PDF). பார்க்கப்பட்ட நாள் 26 November 2011.


மேல் ஆய்வுக்கு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்ப்பின்னூட்டம்&oldid=2745905" இலிருந்து மீள்விக்கப்பட்டது