நூற்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூத்திரம் என நன்னூல் குறிப்பிடுவதை நூற்பா என வழங்குகின்றனர். [1]

சூத்திரம் விளக்கம்[தொகு]

சூத்திரம் எவ்வாறு இருக்கும் என நன்னூல் விளக்குகிறது. [2]

 • சில எழுத்துக்களால் அமைந்து சுருக்கமாக இருக்கவேண்டும்.
 • சுருக்கத்தில் பல்வகைப் பொருளும் செறிவாக இனிமையாக விளக்கப்பட்டிருக்க வேண்டும்
 • கண்ணாடி பொருளைக் காட்டுவது போலப் பொருளைக் காட்டுவதாக இருக்கவேண்டும்.
 • திட்பமும், நுட்பமும் கொண்டிருக்கவேண்டும்

சூத்திரநிலை[தொகு]

ஒரு சூத்திரம் ஏனைய சூத்திரங்களோடு எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கவேண்டும் என்பதையும் நன்னூல் விளக்குகிறது. [3]

 • முன்னும், பின்னும் தொடர்புடையதாக ஆற்றில் தண்ணீர் ஒழுகுவது போலத் தழுவிக்கொண்டு நடக்கும்.
 • முன்னும் பின்னும் தொலைவிலுள்ள இரையை அரிமா(சிங்கம்) பார்ப்பது போல, முன்னும் பின்னும் தொலைவில் உள்ள நூற்பாக்களை நோக்கி முரண்பாடு இல்லாமல் சொல்லும்.
 • தவளை தத்திப் பாய்வது போல சில நூற்பாக்களை இடைவிட்டுத் தவ்விப் பாய்ந்து அமர்ந்து பொருள் கொள்ள வைக்கும்.
 • பருந்து வானத்திலிருந்து வீழ்ந்து இரையைக் கவ்வுவது போல எங்கிருந்தோ பாய்ந்து கருத்தைச் சொல்வதும் உண்டு.

சூத்திரத்தைக் குறிக்கும் காரணப் பெயர்கள் [4][தொகு]

 • பிண்டம் – கருப்பொருளாக அமைவது
 • தொகை – தொகுத்துக் கூறுவது
 • வகை – பிரித்து வகைப்படுத்திக் கூறுவது
 • குறி –குறிக்கோளைப் பற்றி வழுவாமல் செல்வது.
 • செய்கை – தான் நாட்டும் செயலைக் கூறுவது
 • கொண்டியல் – பிறர் கூறியனவற்றை தானும் அப்படியே ஏற்றுக்கொண்டு அவர் நூற்பாவையே தானும் கூறுதல்.
 • புறனடை – தொகுப்புலை போல முடிவுரையில் கூறுதல்

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. சூத்திரம் என்பதையும் தமிழ்ச்சொல்லாகக் கொள்ளலாம்.
  • கோத்து இருப்பது கோத்திரம்,
  • ஆர்த்து வருவது ஆத்திரம்
  • ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது – என முண்டிக்கொண்டு மூர்த்து வருவது மூத்திரம்.
  • இவற்றைப் போலச் சூழ்ந்து, சூழ்த்து வருவது சூழ்த்திரம் > சூத்திரம்
 2. சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்
  செவ்வன் ஆடியின் செறித்து இனிது விளக்கித்
  திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம் – நன்னூல் நூற்பா 18
 3. ஆற்றொழுக்கு, அரிமா நோக்கு, தவளைப் பாய்த்து, பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை – நன்னூல் நூற்பா 19
 4. நன்னூல் நூற்பா 20
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூற்பா&oldid=1206882" இலிருந்து மீள்விக்கப்பட்டது