நீல் கெய்மென்
நீல் கெய்மென் | |
---|---|
பிறப்பு | நீல் கெய்மென் 10 நவம்பர் 1960 போர்ட்செஸ்டர், ஹாம்ஷையர், இங்கிலாந்து |
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
காலம் | 1980கள்– தற்காலம் |
வகை | கனவுருப்புனைவு, திகில், அறிபுனை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தி சேண்ட்மான், கோரலைன், அமெரிக்கன் காட்ஸ், ஸ்டார்டஸ்ட், தி கிரேவ்யார்ட் புக் |
இணையதளம் | |
http://www.neilgaiman.com/ |
நீல் கெய்மென் (Neil Gaiman, பி. நவம்பர் 10, 1960) ஒரு பிரிட்டானிய எழுத்தாளர். அறிபுனை மற்றும் கனவுருப்புனைவு பாணிகளில் புதினங்கள், சிறுகதைகள், படக்கதைகள், ஒலி நாடகங்கள், படப்புதினங்கள், திரைக்கதைகள் எழுதியுள்ளார். தி சேண்ட்மான், கோரலைன், அமெரிக்கன் காட்ஸ், ஸ்டார்டஸ்ட், தி கிரேவ்யார்ட் புக் போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். இவரது படைப்புகள் பலமுறை ஹுகோ, நெபுலா, பிராம் ஸ்டோக்கர் போன்ற விருதுகளை வென்றுள்ளன. இவை தவிர நியூபெரி பதக்கம், கார்னகி இலக்கியப் பதக்கம் போன்ற உயரிய இலக்கிய பதக்கங்களையும் வென்றுள்ளார். பெரும் எண்ணிக்கையில் தீவிர வாசகர்களைப் பெற்றுள்ள இவர் இலக்கிய உலகின் ”ராக்கிசை நட்சத்திரம்” என்று வர்ணிக்கப்பட்டுள்ளார்.
1980களில் பத்திரிக்கையாளராக தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய கெய்மென் எழுதிய முதல் புத்தகம் டுயூரன் டுயூரன் இசைக்குழுவின் வரலாறாகும். 1987ல் பத்திரிக்கையாளர் பணியிலிருந்து விலகி, படக்கதைகளையும் படப்புதினங்களையும் எழுதத் தொடங்கினார். இவரது படைப்புத்திறனால் கவரப்பட்ட டீசீ காமிக்ஸ் நிறுவனம் இவரை வேலைக்கு அமர்த்தியது. 1990களில் தி சேண்மேன் படக்கதை வரிசையும் டீசீ காமிக்சின் பாத்திரங்களைக் கொண்டு பிற படக்கதைகளையும் எழுதினார். 1990ல் கனவுருப்புனைவு எழுத்தாளர் டெர்ரி பிராட்ச்செட்டுடன் சேர்ந்து எழுதிய குட் ஓமன்ஸ் புதினத்தின் மூலம் கெய்கெனின் புதின எழுத்துப்பணி தொடங்கியது. அனான்சி பாய்ஸ், அமெரிக்கன் காட்ஸ் ஆகியவை இவருடைய புகழ்பெற்ற புதினங்கள். 1995ல் தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை எழுதத் தொடங்கிய கெய்மென் பல அறிபுனை தொலைக்காட்சித் தொடர்களுக்கும், கனவுருப்புனைவு திரைப்படங்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார். கெய்மெனின் கோரலைன், ஸ்டார்டஸ்ட் போன்ற புத்தகங்கள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.