நீர்மட்டம் (கப்பல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமைக்கோட்டுக் குறிகளும் கப்பலின் உடற் பகுதியில் உள்ள கோடுகளும்

கப்பல் தொடர்பில் நீர்மட்டம் என்பது, கருத்துரு அளவில் அல்லது உண்மையில் கப்பலின் உடற்பகுதியை நீரின் மேற்பரப்பு சந்திக்கும் கோட்டைக் குறிக்கும். குறிப்பாக, பாதுகாப்பான மிதப்புக்காக குறித்த நீர் வகை, வெப்பநிலை ஆகியவற்றில், சட்டரீதியாக ஏற்றக்கூடிய சுமை ஏற்றப்படும்போதான மிதப்புயரக் குறியீட்டையும் இச்சொல் குறிக்கும்.[1] அவ்வேளைகளில் இது, பன்னாட்டுச் சுமைக்கோடு, பிளிம்சோல் கோடு போன்ற பெயர்களாலும் குறிக்கப்படும். வெப்பநிலை நீர்மட்டத்தைப் பாதிக்கும். ஏனெனில், சூடான நீர், குளிர்ந்த நீரிலும் அடர்த்தி குறைவு என்பதால், சூடான நீர் குறைவான மிதப்புத் தன்மையைக் கொடுக்கிறது. இதுபோலவே நன்னீர், கடல்நீரிலும் அடர்த்தி குறைவு என்பதால் நன்னீர் குறைவான மிதப்புத்தன்மையைக் கொடுக்கிறது. பாய்ப்படகுகளில், படகு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது நீர்மட்ட நீளம் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் அடையக்கூடும். இது படகின் வேகத்தைப் பாதிக்கும்.

நோக்கம்[தொகு]

கப்பல் போதிய அளவு எச்சமட்டத்தைக் (நீர்மட்டத்துக்கும் கப்பலின் முதன்மைத் தளத்துக்கும் இடையிலான தூரம்) கொண்டிருப்பதை உறுதி செய்வதே சுமைக்கோட்டின் நோக்கமாகும். வணிகக் கப்பல்களில் எச்சமட்டம், தொடர்ச்சியான மேல்தளத்திலிருந்து நீர்மட்டத்துக்கான தூரம் ஆகும். இது கப்பலுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சமட்டச் சான்றிதழில் குறிப்பிட்டிருப்பதைக் காட்டிலும் குறைவாக இருக்கக்கூடாது. சில விதிவிலக்கான சூழல்களைத் தவிர[2] எல்லா வணிகக் கப்பல்களிலும் அவற்றின் இரண்டு பக்கங்களிலும் சுமைக்கோட்டுச் சின்னம் வரையப்பட்டிருக்கும். நிறப்பூச்சு அழிந்து போனாலும் தெரியக்கூடியவகையில் இந்தச் சின்னம் நிரந்தரக் குறியாக இருத்தல் வேண்டும். கப்பலில் அளவுக்கு மீறிய சுமை ஏற்றப்பட்டுள்ளதா என எவரும் அறிந்துகொள்வதற்கு சுமைக்கோடு உதவுகிறது. வகைப்பாட்டுச் சங்கம் கப்பலொன்றில் சுமைக்கோட்டுக்கான சரியான இடத்தைக் கணிப்பதுடன் அதை உறுதிப்படுத்துகிறது. இது தொடர்பான சான்றிதழ்களையும் இச்சங்கமே வழங்குகிறது.1870ல் சாமுவேல் பிளிம்சால் என்பார் இக்குறியீட்டு முறையைக் கண்டுபிடித்தார்.

வரலாறு[தொகு]

முதல் அதிகாரபூர்வ சுமையேற்ற விதிகள் கிமு 2,500ல் கிரீட் இராச்சியத்தில் உருவான கடல்சார் சட்டங்களுடன் தொடங்கியதாக நம்பப்படுகிறது. அக்காலத்தில் கப்பல்கள் சுமையேற்றம், பராமரிப்பு ஆகிய சோதனைகளுக்கு உள்ளாகவேண்டிய தேவை இருந்தது. உரோமர் காலத்திலும் இத்தகைய விதிகள் இருந்தன. மத்திய காலத்தில், வெனிசுக் குடியரசு,[3] செனோவா நகரம், அன்சியாட்டிக் குழு ஆகியவை கப்பல்களில் சுமைக் கோடுகள் பொறிக்கப்பட வேண்டும் என விதித்தன. வெனிசில் குறுக்குக்கோட்டு அடையாளமும்,[4] செனோவாவில் மூன்று கிடைக்கோடுகளைக் கொண்ட அடையாளமும் பயன்பட்டன.

19ம் நூற்றாண்டின் சுமையேற்றம் தொடர்பான பரிந்துரைகள் 1835ல் பிரித்தானிய மற்றும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கான லொயிடின் பதிவு நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டது. இப்பரிந்துரைகள் கப்பல் உரிமையாளர்கள், கப்பலோட்டுவோர், உறுதிகொடுப்போர் ஆகியோரின் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து உருவானது. லாயிடின் விதி என அறியப்பட்ட இது 1880 வரை பரவலாகப் புழக்கத்தில் இருந்தது.

அளவுமீறிய சுமை ஏற்றப்பட்டதன் காரணமாகப் பல கப்பல்கள் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1860ல் ய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாமுவேல் பிளிம்சால் இந்த விடயத்தில் கவனம் செலுத்தினார்.[5] இதன் காரணமாக 1872ல் கடற்பயணத்துக்குதவாத கப்பல்கள் தொடர்பான அரச ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. 1876ல் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய இராச்சிய வணிகக் கப்பல்கள் சட்டம் சுமைக்கோட்டுக் குறியீட்டைக் கட்டாயமாக்கியது. ஆனாலும், இக்குறியின் அமைவிடம் சட்டத்தின் மூலம் 1894 வரை தீர்மானிக்கப்படவில்லை. 1906ல் பிரித்தானியத் துறைமுகங்களுக்கு வரும் வெளிநாட்டுக் கப்பல்களில் சுமைக்கோட்டைக் கட்டாயமாக்கிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1930 சுமைக்கோட்டு ஒப்பந்தப்படி பொதுவான பன்னாட்டு சுமைக் கோட்டு விதிகள் உருவாக்கப்பட்டன.

1966ல் 1930ன் விதிகளை மீளாய்வு செய்து சுமைக்கோடு தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தம் இலண்டனில் உருவாக்கப்பட்டது. இது பின்னர் 1971, 1975, 1979, 1983, 1995, 2003 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது எனினும் இவையெதுவும் பயன்பாட்டுக்கு வரவில்லை.[6]

நியம சுமைக்கோட்டுக் குறியீடுகள்[தொகு]

தொடக்ககால "பிளிம்சால் குறி" ஒரு வட்டத்தையும் அதற்குக் குறுக்காக வரையப்பட்ட ஒரு கிடைக் கோட்டையும் கொண்டிருந்தது. காலப்போக்கில் மேலும்பல குறிகள் இத்துடன் சேர்க்கப்பட்டன. வெவ்வேறு நீர் அடர்த்திகளுக்கும், கடல் நிலைமைகளுக்குமான குறிகள் இவற்றுள் அடங்கும். கப்பலின் சுமைக்கோட்டை ஆய்வு செய்த வகைப்பாட்டுச் சங்கத்தின் பெயரின் முதல் எழுத்துக்கள் குறியீட்டின் அருகில் காணப்படும். CN கனரினாவையும், AB அமெரிக்கக் கடல்வணிகப் பணியகத்தையும் குறிக்கும். இதேபோல LR லாயிட் ரிஜிஸ்ட்டர், GL ஜெர்மனிசர் லாயிட், BV பியூரோ வெரித்தாஸ், IR இந்தியக் கடல்வணிகப் பதிவு, ஆகியவற்றைக் குறிக்கும். இவ்வெழுத்துக்கள் 115 மிமீ உயரமும், 75 மிமீ அகலமும் கொண்டிருக்கவேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Notes on Cargo Work: Kemp and Young: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85309-040-8
  2. Statutory Instruments 1998 No. 2241 The Merchant Shipping (Load Line) Regulations 1998 Sections 5(1) and 5(3)
  3. C. Ernest Fayle (November 2005). A Short History of the World's Shipping Industry. Routledge. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-38163-5. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013. At Venice, an official mark was placed on the outside of the hull, and the ship was inspected before she sailed. If the mark was found to be more than a specified depth below the water-line, the excess cargo was removed by the authorities and the owners heavily fined....Thus, we have here a foreshadowing not only of Plimsoll's Mark but of the classification of shipping.
  4. Boisson, Philippe (1999). Safety at Sea: Policies, Regulations & International Law. Paris: Bureau Veritas. pp. 45–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-86413-020-8. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013. The very first regulations appeared in Venice in 1255. They made it illegal to exceed the draught, marked on each ship by a cross. Similar provisions were to be found in Cagliari and Pisa at the same period, and also in Barcelona, in the decree issued by Iago de Aragon in 1258, and in the maritime statutes of Marseilles in 1284. The most elaborate regulations appeared in the 14th-century Genoese statutes.
  5. See Nicolette Jones, The Plimsoll Sensation. The Great Campaign to Save Lives at Sea, London, Little, Brown, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-316-72612-5.
  6. "Précis of IMO web site. History of the Load Line". Archived from the original on 2015-05-11. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்மட்டம்_(கப்பல்)&oldid=3560875" இலிருந்து மீள்விக்கப்பட்டது