உள்ளடக்கத்துக்குச் செல்

நியூசு இண்டர்நேசனல் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியூசு இண்டர்நேசனல் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் என்பது நியூசு இண்டர்நேசனல் நிறுவனத்தால் நடத்தப்படும் நியூசு ஆப் த வேர்ல்ட் எனும் சிறுபக்க செய்தித்தாளுக்காக (டேப்லாய்ட்) அந்நிறுவனத்தில் வேலைசெய்த சிலர் செய்தி சேகரிப்பிற்காக தனிநபர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டது தொடர்பானதாகும். இந்த விவகாரம் ஐக்கிய இராச்சியத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. நியூசு இண்டர்நேசனல் நியூசு கார்ப்பரேசனின் துணை நிறுவனமாகும்.

ஆரம்பத்தில் தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் சினிமா, தொலைக்காட்சி நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், பிரித்தானிய அரச குடும்பத்தினர்களை மட்டுமே ஒட்டுக்கேட்டதாக நம்பப்பட்டது. ஆனால் சூலை 2011ல் மேலும் பலர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதில் 2002ல் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி மில்லி டவ்லர் வாய்சு மெயில், ஆப்கன், இராக் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரின் தொலைபேசிகள், 7/7 இலண்டன் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தனர். வணிக நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க விளம்பரங்களை நிறுத்தினர்[1]. அதனைத் தொடர்ந்து 168 ஆண்டுகால நியூசு ஆப் த வேர்ல்ட் பத்திரிக்கை தனது பதிப்பை சூலை 10, 2011 அன்று நிறுத்தியது[1].

இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு முக்கிய நபர்கள் தங்களது பதவிகளைவிட்டு விலகினர். சிலர் கைது செய்யப்பட்டனர். நியூசு இண்டர்நேசனல் முதன்மை செயல் அதிகாரி ரெபக்கா புரூக்ஸ், நியூசு கார்ப்பரேசன் முதன்மை அதிகாரி லெசு ஹின்டன், ஆகியோர் பதவி விலகினர். நியூசு ஆப் த வேர்ல்ட் முன்னாள் ஆசிரியர் ஆண்டி கூல்சன், செயலாக்க ஆசிரியர் நீல் வாலிசு மற்றும் ரெபக்கா புரூக்ஸ் ஆகியோர் பின்னர் கைது செய்யப்பட்டனர். ஆண்டி கூல்சன் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஊடக ஆலோசகராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசு கார்ப்பரேசனின் தலைவர் ரூப்பர்ட் மர்டாக் அவரது மகன் ஜேம்சு மர்டாக் ஆகியோர் நாடாளுமன்ற கமிட்டி முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சூலை 20, 2011 அன்று இங்கிலாந்து நாடாளுமன்றம் விசேச கூட்டு கூட்டத்தை கூட்டியது. அதில் அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் எதிர்க்கட்சித் தலைவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "BBC News – Phone hacking scandal: Timeline". Bbc.co.uk. 2011-07-12. பார்க்கப்பட்ட நாள் 2011-07-16.

வெளியிணைப்புகள்

[தொகு]