நாராயண பிரம்மேந்திரர்
நாராயண பிரம்மேந்திரர் என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள காட்டுப்புத்தூரில் சமாதியடைந்த சித்தராவார். இவர் பழனி செல்வதற்காக திருச்சியிலிருந்து புறப்பட்டு கரூர் மார்கமாக செல்லும் போது காட்டுப்புத்தூருக்கு வந்து தங்கினார். இவர் தனது 120வது வயதில் காட்டுப்புத்தூரில் சமாதியடைந்தார். இவருடைய சமாதி நாராயண பிரம்மேந்திரர் மடம் என அழைக்கப்படுகிறது. இவருடைய வரலாறு நாராயண பிரம்மேந்திரர் சரிதம் என்ற நூலில் பதிவாகியுள்ளது. பிரம்மேந்திர கீதம் என்ற நூலில் பிரம்மேந்திரரின் வாழ்க்கை வரலாறு பாடல் வடிவில் பதியப்பட்டுள்ளது.

பிறப்பும் இளமையும்
[தொகு]நாராயண பிரம்மேந்திரர் ஆந்திர மாநிலத்திலுள்ள வேட்கூர் எனுமிடத்தில் 1791-ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் வேங்கடாசல ரெட்டி ஆவார். கல்வியைக் கற்றப்பிறகு இலக்குமி என்பவரை திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்று இல்லறத்தில் வாழ்ந்தார். இரு குழந்தைகளையும் வளர்த்து திருமணம் செய்து வைத்தார்.
துறவரம்
[தொகு]நாராயண பிரம்மேந்திரரின் கனவில் வந்த அம்பிகை துறவரம் மேற்கொள்ளச் சொல்ல, அவர் துறவரம் மேற்கொண்டார். அவருடைய உறவினர்கள் அவரைத் தேடி சித்தூரில் இருப்பதை அறிந்து சென்றனர். நாராயண பிரம்மேந்திரர் தன்னுடைய நிலையை விளக்கிச் சொல்ல அவரை உறவினர்கள் விட்டுவிட்டனர். சித்தூரிலிருந்து திருப்பதி செல்ல முனைந்தார்.
தமிழக வருகை
[தொகு]சித்தூரிலிருந்து திருப்பதி செல்ல நினைத்தார். திருப்பதி ஏழுமலையான் மேல் நூறு விருத்தங்களைப் பாடினார். ஆனால் திருப்பதி செல்ல வேண்டாமென அம்பிகை கனவில் தோன்றி கூறினாள். அதனால் தென்பகுதியான தமிழகத்திற்கு நாராயணர் வந்தார். இங்கு சிலரிடம் துறவிகளுக்கான இடத்தினைப் பற்றி கேட்டார். அவர்கள் பழனியைப் பற்றிக் கூற பழனிக்கு செல்ல உத்தேசித்தார்.
காட்டுப்புத்தூர் வருகை
[தொகு]பழனி செல்வதற்காக திருச்சியிலிருந்து புறப்பட்டு கரூர் மார்கமாக செல்லும் போது, காட்டுப்புத்தூரில் அப்போதிருந்த ஜமிந்தார் துறவிகளைக்கு அன்னதானமும், அரைக்காசும் கொடுப்பதைக் கேட்டு அறிந்து கொண்டார். அவருடன் வந்த சில துறவிகளுடன் நாராயணர் காட்டுப்புத்தூருக்கு வந்தார். காட்டுப்புத்தூரில் சந்திரசேகரப் பிள்ளை,செவ்வைத்தியலிங்கம் பிள்ளை,சஞ்சீவி உபாத்தியாயர் ஆகியோர் நாராயணரின் அருமையை உணர்ந்து காட்டுப்புத்தூரிலேயே தங்கிடும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதனால் பழனி செல்வதை மறந்து காட்டுப்புத்தூரில் தங்கினார்.
உணவு மற்றும் வாழ்முறை
[தொகு]ஆரம்ப காலங்களில் காவிரித் தீரத்திற்குத் தனிமையாகச் சென்று, ஒரு பிடி ஆற்றுமணலையும், ஒரு கை ஜலத்தையும் மட்டுமே உணவாக அருந்தி வந்தார். 15 வருடங்களுக்குப் பிறகு, வேகவைத்த துவரம்பருப்புடன் கொஞ்சம் சர்க்கரை, நெய் சேர்த்து எலுமிச்சம்பழ அளவு மட்டும் சாப்பிட்டார். இந்தத் தொண்டை அமிருதம் அம்மாள் (கோட்டையம்மாள்) என்பவர் இறுதிவரை செய்து வந்தார்.
உடை
[தொகு]இவர் வெளியே செல்லும்போது கறுப்புக் கம்பளிப் போர்வையையும், இதர வேளைகளில் கௌபீனதாரியாகவும் (கோவணம்) இருந்தார். அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஆவிடைப் பிள்ளையார் கோவிலுக்கு வடக்கே ஒரு பஜனை மடத்தை நிறுவினார்.
சமாதி
[தொகு]நாராயண பிரம்மேந்திரர் காட்டுப்புத்தூரில் அறுபத்து மூன்று வருடங்கள் வாழ்ந்தார். பின்பு கிபி 1912 (கலியுகம் 5012 விரோதிகிருது வருடம்) கேட்டை நட்சத்திரமான, மாசி மாதம் 28ம் தேதி சமாதியடைந்தார். அவருடைய சமாதியில் சிவலிங்கம் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சமாதியை மடமாக மாற்றி எண்ணற்ற சாதுக்களும், துறவிகளும் வருகின்ற இடமாக மாற்றினர். இது காட்டுப்புத்தூர் நாராயண பிரம்மேந்திர மடாலயம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இவருடைய குரு பூசை மாசிமாதம் கேட்டை நட்சத்திரத்தன்று கொண்டாடப் படுகிறது. கடந்த 2012-இல் நாராயண பிரம்மேந்திரரின் 100வது குருபூசை விழா கொண்டாடப்பட்டது.
சிலை திருட்டு
[தொகு]காட்டுப்புத்தூர் மக்களால் 1920 ஆம் ஆண்டு இரண்டு அடியில் நாராயண பிரம்மேந்திரரின் சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது. 12 பிப்ரவரி 2018-இல் அச்சிலை திருடப்பட்டது.[1] இச்சிலையானது 98 ஆண்டுகள் பழமையானதாகும்.
நூல்கள்
[தொகு]ஸ்ரீ நாராயண பிரமேந்திர சுவாமிகள் சரித்திரம்
[தொகு]காட்டுப்புத்தூர் ஸ்ரீ நாராயண பிரமேந்திர சுவாமிகள் சரித்திரம் நூல் 1924 ஆம் ஆண்டு சங்குவாலி அச்சுக்கூடம், இரங்கூனில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் பெ. லோ. திருவேங்கடசாமி முதலியார் ஆவார். வெங்கடசாமி சுவாமிகள், அமிருதம்மாள், பழனிசாமி ஆகியோர் இந்நூலைத் தொகுத்து அச்சிட்டு வெளியிட்ட மடாலய பரிபாலகர்கள் ஆவார்.
இந்நூல் முகவுரை & இன்னுரை, பாடல்கள், சரித்திரப் பகுதி, அனுபந்தம், புவனேஸ்வரி அகவல் ஆகியவற்றை கொண்டுள்ளது.
அற்புதச் சம்பவங்கள்
[தொகு]நாராயண பிரமேந்திர சுவாமிகளின் சரித்திர நூலின் இறுதிப் பகுதியான அனுபந்தம் என்பதில், காட்டுப்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் நேரில் கண்டு வியந்த பல அற்புதச் சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:
- சுண்ணாம்புக்கல் கழிவு - சுவாமிகள் ஆரம்ப காலத்தில் உணவாக ஒரு பிடி மணலையும், ஒரு கை தண்ணீரையும் மட்டுமே உட்கொண்டு வந்தார். "மனிதன் மணலைத் தின்றால் செரிக்குமா, இது என்ன விந்தை?" என்று ஊர் மக்கள் உற்று கவனித்தபோது, அவர் உடலிலிருந்து வெளியேறிய கழிவுகள், நீரில் இட்ட சுண்ணாம்புக்கல் வெந்து நீறாவது போல சாம்பல் நிறக் கழிவுகளாக மாறியிருந்ததைக் கண்டு பிரமித்தனர்
- மதுரைச் சாதுவின் வாதனை தீர்த்தல் - சுவாமிகளைப் போலவே தானும் சித்து வேலை செய்ய நினைத்த மதுரையைச் சேர்ந்த ஒரு சாது, சுவாமிகளைப் பின்பற்றி மணலையும் ஜலத்தையும் உட்கொண்டார். ஆனால், அந்த மணல் செரிக்காமல் அவரது வயிற்றில் சிக்கிக் கொண்டு, உயிருக்கே ஆபத்தான நிலையை ஏற்படுத்தியது. இதையறிந்த சுவாமிகள், அவருக்கு விளக்கெண்ணெய் கொடுத்து, அவரது வயிற்று வாதனையை முற்றிலும் நீக்கிச் சுகமடையச் செய்தார்.
- கல்மாரி மழையிலிருந்து குடிசை தப்பிய அற்புதம் - 1904-ம் ஆண்டு (தமிழ் குரோதி வருடம், வைகாசி மாதம்) ஒரு நாள் மாலை காட்டுப்புத்தூரில் பயங்கரமான கல்மாரி மழை (ஆலங்கட்டி மழை) பெய்தது. மாடி வீடுகள் இடிந்து விழுந்தன; மரங்கள் வேரோடு சாய்ந்தன; பறவைகளும் விலங்குகளும் மடிந்தன. அந்த ஓலைக்குடிசையைச் சுற்றி மட்டும் விழுந்த கற்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கற்கோட்டை போல அரணாக அமைந்திருந்ததைக் கண்டு ஊரே வியந்தது.
ஸ்ரீ நாராயண பிரம்மேந்திர கீதம்
[தொகு]ஸ்ரீ நாராயண பிரம்மேந்திர கீதம் என்பது கம்பராசன் இராமராசன் என்பவரால் எழுதப்பட்டு 1952 இல் வெளிவந்த நூல் ஆகும். பரமத்தி வேலூர் இல் கருணாநிதி அச்சகத்தால் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது. நூன்முகம், சிறப்புப்பாயிரங்கள், அம்மையளித்த ஆசிமொழிகள், வாழ்க்கை வரலாறு, பிரம்மேந்திர கீதம் மற்றும் பிற்சேர்க்கை ஆகிய பகுதிகளைக் கொண்டது.
காவியத்தின் நான்கு படலங்கள்
[தொகு]பிரம்மேந்திர கீதம் சுவாமிகளின் ஆன்மீகப் பயணத்தை நான்கு முக்கியப் பகுதிகளாக விவரிக்கிறது.
- தோற்றப்படலம்: வேட்கூர் கிராமத்தில் நாராயண ரெட்டியாராகப் பிறந்து, இல்லற வாழ்வில் கடமைகளை ஆற்றிய பகுதி
- துறவுப்படலம்: கனவில் பராசக்தி ஐந்து முறை தோன்றி உபதேசித்து, உலகப் பற்றுகளை அறுத்துத் துறவறம் பூணச் செய்த உன்னத நிலை
- யாத்திரைப்படலம்: சித்தூரில் தவம் இயற்றி, பின்னர் தென்திசை நோக்கிப் பயணித்து, காவிரித் தீரத்துச் சிறப்பால் காட்டுப்புத்தூரைத் தன் இருப்பிடமாகக் கொண்ட வரலாறு
- சமாதிப்படலம்: காட்டுப்புத்தூரில் 63 ஆண்டுகள் யோக நிலையில் வாழ்ந்து, தனது 120-வது வயதில் நிர்விகற்ப சமாதி அடைந்த இறுதிப் பகுதி.
கருவி நூல்
[தொகு]பிரம்மேந்திரகீதம்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ தொட்டியம் அருகே மடாலயத்தில் துறவி சிலை திருட்டு - தினமணி 13th February 2018