உள்ளடக்கத்துக்குச் செல்

தொல்காப்பியம் மொழிமரபுச் செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியம் மூன்று அதிகாரங்கள் கொண்டது. அதில் முதலாவதாக எழுத்ததிகாரம் அமைந்துள்ளது. இதில் ஒன்பது இயல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இரண்டாவதாக உள்ள இயல் மொழிமரபு. இந்த இயலில் 49 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

இங்கே மொழி என்றால் சொல்லென்று பொருள். பேசப்படுவது மொழி. அதற்கு எழுத்து வடிவமும் உருவாக்கிக்கொண்டுள்ளோம். பேசும்போது எழுத்து எழுத்தாகப் பேசுவதில்லை. சொல் சொல்லாக இணைத்துத்தான் பேசுகிறோம். எனவே மொழிவது சொல்லாகிறது.எனவே இங்கு மொழி என்பது மொழியப்படும் சொல்லைக் குறிக்கும்.

மரபு என்பது இங்கு முன்னோரைப் பின்பற்றும் வழக்கத்தைக் குறிக்கும்.

முதலாவது இயலில் முதலெழுத்துகள் விளக்கப்பட்டன. இந்த இரண்டாது இயலில் சார்பெழுத்துகள், மொழிமுதல் எழுத்துகள், மொழியிறுதி எழுத்துகள் விளக்கப்படுகின்றன.

செய்திகள்

[தொகு]

மொழி வகைப்பாடு (3 நிலை)

[தொகு]
ஓரெழுத்தொருமொழி - இரண்டு மாத்திரையின் மிகாதவை
ஆ, பூ, கா, து, நொ போன்று தனியெழுத்து நிலையில் பொருள் தரும் சொற்களை ஓரெழுத்தொருமொழி என்றனர்.
"இவற்றில் 'கா' காட்டைக் குறிக்கும்போது பெயர்ச்சொல்.
காப்பாற்று என்னும் பொருள் தரும்போது வினைச்சொல்.
'உண்கா கொற்றா' என்பதில் உள்ள கா இடைச்சொல்.
குறில் உயிரெழுத்து ஐந்தில் எதுவும் தனிதொழி ஆகாது.
(உயிர்மெய் குறிலில் து, நொ இரண்டு எழுத்து தனிமொழி ஆகும்)
ஈரெழுத்தொருமொழி - இரண்டு மாத்திரையின் மிகாதவை
மண், மணி
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி - இரண்டு மாத்திரையின் மிக்கவை
மலர், தேன்

சார்பெழுத்துகள்

[தொகு]

குற்றியலுகரம்

[தொகு]
மொழியில் மாத்திரை குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும்.
அவை வல்லின எழுத்தின்மேல் ஏறி ஊர்ந்துவரும்.
மொழியின் இறுதியில் வரும் - நாகு, வரகு
மொழியின் இடையில் வரும் - செக்குக்கணை, சுக்குக்கோடு (சுக்குப்பொடி என்னும்போது வரும் 'கு' குற்றியலுகரம் அன்று)

குற்றியலிகரம்

[தொகு]
குற்றியலுகரத்தில் முடியும் சொல்லை அடுத்து 'யா' எழுத்தில் தொடங்கும் சொல் வந்தால் நிலைமொழியில் உள்ள குற்றியலுகரமானது குற்றியலிகரமாக மாறும்.
வரகியாது (வரகு+யாது)
'யா' என்னும் உரையசைக்கிளவி முன்
கேண்மியா (கேளும்<கேண்ம்+யா)
இதில் வியப்பு
கதவியாது (கதவு+யாது)
பேரியாறு (பெரிய<பேர்+யாறு)

ஆய்தம்

[தொகு]
  1. மொழியிடை ஆய்தம் - எஃகு, கஃசு (தொடி எடையில் நான்கில் ஒருபங்கு - நிறுத்தலளவைப் பெயர்)
  2. புணரியல் ஆய்தம் - கஃறீது (கல்+தீது), மஃடீது (மண்+தீது)
  3. உருநோக்கு ஆய்தம் - மண் கஃறென்றது (மண் கல் போல் கெட்டியாயிற்று)
  4. இசைநாக்கு ஆய்தம் - அருவி கஃறென்றது (அருவி 'கல்' என ஒலித்தது)
  • அஃகல் - இது முற்றாய்தம்.

உயிரளபெடை

[தொகு]
பாடலில் இசை குன்றும் மொழியில் இசையைக் கூட்டித் தருவதற்காக ஒத்த குறிலெழுத்து உடனிற்கும். இதற்கு உயிரளபெடை என்று பெயர்.
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செதகண்
தாஅம் இதற்பட் டது. - திருக்குறள் 1176
'ஐ' எழுத்து 'ஐஇ' என இகரம் பெற்று அளபெடுக்கும்.
'ஔ' எழுத்து 'ஔஉ' என உகரம் பெற்று அளபெடுக்கும்.

மகரக்குறுக்கம்

[தொகு]
  • போன்ம் - செய்யுள் இறுதிப் போலி இறுதியில் ஈரொற்று.
  • போன்ம் - என்பதில் உள்ள 'ம்' தன் அரை மாத்திரையில் குறுகும்.

ஈரொற்றுப் பெறுதல்

[தொகு]
  • வேய்க்குறை, வேய்ங்குறை எனப் புணர்ச்சியில் ஈரொற்று பெறும். (சிதை, தலை, புறம் என்பன போன்றவற்றிலும் இரண்டு ஒற்று வரும்)
  • வேர்க்குறை, வேர்ங்குறை எனப் புணர்ச்சியில் ஈரொற்று பெறும். (சிதை, தலை, புறம் என்பன போன்றவற்றிலும் இரண்டு ஒற்று வரும்)
  • வீழ்க்குறை, வீழ்ங்குறை எனப் புணர்ச்சியில் ஈரொற்று பெறும். (சிதை, தலை, புறம் என்பன போன்றவற்றிலும் இரண்டு ஒற்று வரும்)

எழுத்துப்போலி

[தொகு]
  1. 'ஐ' என்பதை 'அஇ' என்று எழுதுவர்.
  2. 'ஔ' என்பதை 'அஉ' என்று எழுதுவர்.

ஐகாரக் குறுக்கம்

[தொகு]

'ஐ' என்பதை 'அய்' என்று எழுதுவர். இப்படி எழுதுவது எழுத்துப்போலி.

'ஐயர்' என எழுதும்போது 'ஐ' எழுத்துக்கு இரண்டு மாத்திரை.
'அய்யர்' என எழுதும்போது ஒன்றரை மாத்திரை. [1]

ஔகாரக் குறுக்கம்

[தொகு]

'ஔ' என்பதை 'அவ்' என்று எழுதுவர். இப்படி எழுதுவது எழுத்துப்போலி.

'ஔவை' என எழுதும்போது 'ஔ' எழுத்துக்கு இரண்டு மாத்திரை.
'அவ்வை' என எழுதும்போது ஒன்றரை மாத்திரை. [2]

மகரக்குறுக்கம்

[தொகு]
'போலும்' என்னும் சொல் செய்யுளில் 'போன்ம்' என வரும். இவ்வாறு வரும்போது 'ம்' எழுத்துக்குக் கால்மாத்திரை.

மகரமாக மயங்காத னகர-இறுதி அஃறிணைப் பெயர்கள்

[தொகு]

1.உகின், 2.செகின், 3.விழன், 4.பயின், 5.அழன், 6.புழன், 7.குயின், 8.கடான், 9.வயான் ஆகியவை அந்த 9 சொற்கள் என்று இளம்பூரணர் எடுத்துக்காட்டுகிறார். இவற்றில் உகின் என்னும் சொல்லை விட்டுவிட்டு *எகின் என்னும் சொல்லைச் சேர்த்துக் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.

மொழிமுதல் எழுத்துகள்

[தொகு]
22 எழுத்துகள் 94 நிலைகளில் மொழியப்படும் சொல்லுக்கு முதலெழுத்தாக வரும். இவற்றை மொழிமுதல் எழுத்துக்கள் எனக் கொள்கிறோம்.

மொழியிறுதி எழுத்துகள்

[தொகு]
உயிரெழுத்து 12, ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள ஆகிய 11 எழுத்துகளின் மெய்யெழுத்துகள், ஆக 23 எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும் மொழியிறுதி எழுத்துக்கள்.

குறிப்புச் செய்திகள்

[தொகு]
  • 'க்' என்பதைக் 'க' என அகரம் கூட்டிச் சொல்லவேண்டும்.
  • மகரம், மகாரம், மஃகான் என்றும் வரும்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. நன்னூல் வகைப்பாடு வேறுபடுகிறது
  2. நன்னூல் வகைப்பாடு வேறுபடுகிறது

வெளிப் பார்வை

[தொகு]