உள்ளடக்கத்துக்குச் செல்

குற்றியலுகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.

இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.

குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்

(குறுகிய ஓசையுடைய உகரம்)

எ.கா:

நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

பந்து என்னும் சொல்லில் கடைசியாக உள்ள து என்னும் எழுத்து அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் பந் எழுத்துகளைத் தொடர்ந்து இறுதியில் வல்லின மெய்யோடு (த்) சேர்ந்த உகரம் (து)வந்துள்ளது. இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

இதே போல பருப்பு, சிறப்பு, நேற்று, வேட்டு, பேச்சு, கொடுக்கு, மத்து போன்றசொற்களில் கடைசியில் வரும் உகரம் ஏறிய வல்லின மெய்கள் குற்றியலுகரம் ஆகும்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்.

குற்றியலுகரத்தின் வகைகள்

[தொகு]

குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை

  1. நெடிற்றொடர்க் குற்றியலுகரம் [1]
  2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
  3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
  4. வன்தாெடர்க் குற்றியலுகரம்
  5. மென்தாெடர்க் குற்றியலுகரம்
  6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

இவை அனைத்தும் மொழியின்(சொல்லின்) இறுதியில் வரும் குற்றியலுகரங்கள்.

இவற்றுடன்

என்பனவும் கருதத் தக்கவை.

நெடிற்றொடர்க் குற்றியலுகரம்

[தொகு]

தமிழ் இலக்கணத்தில் நெடிற்றொடர்க் குற்றியலுகரம் என்பது குற்றியலுகரத்தின் ஒரு வகையாகும்.

உதாரணம்:-

பாகு, வீசு, காடு, காது, கோபு, ஆறு

மேற்கண்ட இரண்டெழுத்துச் சொற்களில் நெட்டெழுத்தைத் தொடர்ந்து வந்த வல்லின மெய்யின் மீது ஏறி நிற்கும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கிறது. இதற்கு "நெடிற்றொடர்க் குற்றியலுகரம்" என்று பெயர்.

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

[தொகு]

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் என்பது குற்றியலுகர வகைகளுள் ஒன்று. எஃகு, கஃசு, அஃது போன்ற சொற்களில் வல்லின மெய்களை ஊர்ந்து வந்த உகரம் ஆய்த எழுத்தைத் தொடர்ந்து ஈற்றில் குறைந்து ஒலிப்பதால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வருவது ஆய்தத் தொடர்க் குற்றியலுகரமாகும்.

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

[தொகு]

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்பது குற்rருபு, பாலாறு போன்ற சொற்களில் வல்லின மெய்களை ஊர்ந்து வந்த உகரம்(கு, சு, டு, து, பு, று) உயிரெழுத்தைத் தொடர்ந்து (ழ்+அ=ழ, ர்+அ=ர, ப்+ஆ=பா, ன்+அ=ன, ர்+உ=ரு. ல்+ஆ=லா) ஈற்றில் குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு உயிரெழுத்தைத் தொடர்ந்து வருவது உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாகும்.

வன்றொடர்க் குற்றியலுகரம்

[தொகு]

வன்றொடர்க் குற்றியலுகரம் என்பது குற்றியலுகர வகைகளுள் ஒன்று. நாக்கு, கச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று போன்ற சொற்களில் வல்லினம் மெய்களை ஊர்ந்து வந்த உகரம்(கு, சு, டு, து, பு, று) வல்லின மெய்யெழுத்துகளைத் தொடர்ந்து (க், ச், ட், த், ப், ற்) ஈற்றில் குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு வல்லின மெய்யெழுத்துகளைத் தொடர்ந்து வருவது வன்றொடர்க் குற்றியலுகரமாகும்.

மென்றொடர்க் குற்றியலுகரம்

[தொகு]

மென்றொடர்க் குற்றியலுகரம் என்பது குற்றியலுகர வகைகளுள் ஒன்று. தெங்கு, மஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று போன்ற சொற்களில் வல்லின மெய்களை ஊர்ந்து வந்த உகரம்(கு,சு,டு,து,பு,று) மெல்லின மெய்யெழுத்துகளைத் தொடர்ந்து (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்) ஈற்றில் குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு மெல்லின மெய்யெழுத்துகளைத் தொடர்ந்து வருவதே மென்றொடர்க் குற்றியலுகரமாகும்.

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

[தொகு]

இடைத்தொடர்க் குற்றியலுகரம் என்பது குற்றியலுகர வகைகளுள் ஒன்று. செய்து, சார்பு, சால்பு, மூழ்கு போன்ற சொற்களில் வல்லின மெய்களை ஊர்ந்து வந்த உகரம் (கு, சு, டு, து, பு, று) இடையின மெய்யெழுத்துகளைத் தொடர்ந்து (ய், ர், ல், வ், ழ், ள்) ஈற்றில் அமைந்து குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு இடையின மெய்யெழுத்துகளைத் தொடர்ந்து வருவது இடைத்தொடர்க் குற்றியலுகரமாகும்.

மொழிமுதல் குற்றியலுகரம்

[தொகு]

பொதுவாகக் குற்றியலுகரம் என்று மொழியின் இறுதியில் வரும் குற்றியலுகரத்தையே காட்டுவர். இவை அனைத்தும் சொற்கள் புணரும்போது மெய்யெழுத்தைப் போல் மொழியின் இறுதியில் நின்று உயிர் ஏறி முடியும்.

  • பாகு + னிது என்னும்போது பாகு என்பது பாக் என நின்று வருமொழியின் உகரம் ஏறிப் பாகினிது என முடியும்.

மொழிமுதல் எழுத்துகள் என்று தொல்காப்பியம் குறிப்பிடும் 94 எழுத்துகளில் நுந்தை என்னும் குற்றியலுகரச் சொல்லும் ஒன்று. இச்சொல்லில் 'நு' என்னும் எழுத்து நுங்கு, நுவல், நுழை, நுணங்கு என்னும் சொற்களில் வரும் நு போல இதழ் குவிந்து ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல், இதழ் குவியாமல் அரை மாத்திரை அளவு ஒலிக்கும்.

நுந்தை என்பது உன் தந்தை எனப் பொருள்படுவதோர் முறைப்பெயர்.[2][3]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தொல்காப்பியம் இதனை "ஈரெழுத்தொருமொழி" என்று குறிப்பிடுகிறது
  2. குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்
    ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். தொல்காப்பியம் மொழிமரபு 34
  3. முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது
    அப்பெயர் மருங்கின் நிலையியலான. தொல்காப்பியம் மொழிமரபு 35
"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றியலுகரம்&oldid=3939786" இலிருந்து மீள்விக்கப்பட்டது