தேவிகாபுரம் பொன்மலைநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவிகாபுரம்பொன்மலைநாதர் கோயில்' திருவண்ணாமலைமாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் இருக்கும் தேவிகாபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

தேவிகாபுரத்தில் அமைந்துள்ள தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் பின்புறம் தென்மேற்கில் சிறிது தொலைவில் 500 அடி உயரம் 5 கி.மி. சுற்றளவும் 302 படிகளையும் கொண்ட கனகாசலம் அல்லது கனக்கரி என்னும் பெயருடைய மலை அமைந்துள்ளது. இதன் உச்சியில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சுவாமியின் திருப்பெயர் கனககிரி ஈஸ்வரர் (அல்லது) பொன்மலைநாதர் என்பதாகும். கல்வெட்டுகள் இவரைத் திருமலை உடையார் அல்லது திருமலை உடைய நாயனார் என அழைக்கின்றன.

தேவிகாபுரம் முன் தோற்றம்

இக்கோயில் தோன்றிய வரலாற்றினைப் பற்றிய செவிவழிச்செய்திகள் இருவிதமாகக் கூறப்படுகின்றன. அவற்றுள் ஒன்று (சிவமஞ்சரி 10 வது மலரில் வெளிவந்த கட்டுரை):

பொன்மலை[தொகு]

ஒரு சமயம் உலகம் ஒடுங்கிய ஊழி இரவில் உலகம் வெள்ளத்தால் அமிழ இம்மலைமட்டும் பொன்போல் பிரகாசித்து மிதந்தது. எனவே இம்மலை பொன்மலைநாதர் என்றும் வழங்குவதாயிற்று. இதுவே வடமொழியில் கனகாசலம் , கனககிரி என்றும் இறைவனின் திருப்பெயர் கனக கிரிஸ்வரர் என்று வழங்குவதாயிற்று.

இம்மலையின் மீது பார்வதி தேவியார் சிவலிங்கம் அமைத்து நான்கு கால பூசை செய்தாள். அவள் பூசை செய்யும் சிறப்பையும் நேர்த்தியையும் காணச் சிவபெருமான் அருகில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். அவளுடைய அன்பையும் பத்தியையும் கண்டு அவளுக்குத் தரிசனம் தந்து அவளைத் தன் இடப்பாகத்தில் சேர்த்துக்கொண்டார். அந்த நாளே மகாசிவராத்திரி ஆகும் என்றும் கூறுகின்றனர்.

தேவிகாபுரம் கனககிரி மலைக்கோயில்

நம்பிக்கை[தொகு]

இத்தலத்தில் இன்றும் சிவராத்திரி காலங்களில் அம்பிகை பூசை செய்வதாக ஐதீகம். எனவே சிவராத்திரி இரவில் நான்கு காலங்களிலும் இங்கு வழிபடுவது நாமும் அம்பிகையோடு சேர்ந்து வழிபடுவதாகவே கருதப்படும். இங்குள்ள பிரதிக்ஷ்டாலிங்கம் தேவியால் அமைக்கப்பட்டதென்றும் அருகில் உள்ள சுயம்பு லிங்கம் இறைவன் தானாகத் தோன்றியதாக (சுயம்புவாக) எழுந்தருளிய நிலை என்றும் கூறுவர்.

கோயிலின் அமைப்பு[தொகு]

இந்த மலைக்கோயில் கிழக்கு மேற்காக 185 அடி நீளமும் வடக்கு தெற்காக 75 அடி அகலமும் கொண்ட மதில்களுடன் விளங்குகிறது. இதன் முகப்பில் 36 கால்களை உடைய மண்டபத்துடன் கூடிய மூன்று நிலைகளைக் கொண்ட இராசகோபுரம் காட்சியளிக்கிறது. இம்மண்டபத்தின் முன் திருநந்திதேவர் கொடிமரம், பலிபீடம் முதலியன உள்ளன. இவற்றை வணங்கி உள்ளே சென்றால் பிரகாரத்தில் தென்முகக்கடவுள் விநாயகர், ஆறுமுகர், விசாலாட்சி அம்மாள், சண்டீஸ்வரர் முதலிய தெய்வத்திருவுருவங்களை (மூர்த்திகளை) வணங்கலாம்.

இரண்டு சிவலிங்க மூர்த்திகள்[தொகு]

ஒரு சமயம் இம்மலைப்பகுதி அடர்நத காடாக இருந்த போது வேடன் ஒருவன். கிழங்கு அகழந்து எடுப்பதற்காக மலையுச்சியில் இரும்புக் கருவியைக் கொண்டு தோண்டிய போது குபீர் என குருதி கொப்பளித்துக்கொட்டியது. அதைக் கண்ட வேடன் உடனே ஊர் மக்களிடம் வந்து செய்தியைக் கூறினான். மக்கள் சிலர் மலையின் மீது சென்று மேலும் அகழ்ந்த போது ஓர் அழகிய சிவலிங்கத் திருமேனி காணப்பட்டது. அன்று முதல் மக்கள் அச்சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்து வந்தனர். இவ்வாறு பூசை நடக்கும் நாளில் அவ்வழியாக வந்த அரசன் ஒருவன் இச்செய்தியைக் கேள்விப்பட்டு தான் கோவில் கட்டுவதாகக் கூறினான். பின்னர் அவ்வாறே கட்டி முடித்தான். அரசன் கட்டிமுடிக்கும் காலத்தில் சுவாமி மறைந்தருளினார். சுவாமி மறையவே அவ்வரசன் மிகவும் மனம் வருந்தி காசி விசுவநாதரை அமைத்துக் கும்பாபிசேகம் செய்த நாளன்று சுயம்பு மூர்த்தியும் தோன்றியருளினார். எனவே இங்கு இரண்டு சிவலிங்க மூர்த்திகள் அமைந்திருக்கின்றன.

நவகன்னியர் சிற்பம்

இக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் அருமையான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. இவற்றைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் இரண்டு சிவலிங்க மூர்த்திகளைக் காணலாம். அம்மூர்த்திகளில் ஒருவர் அரசனால் பிரதிட்டை செய்யப்பட்டவர். அம்மூர்த்தியின் திருப்பெயர் காசி விசுவநாதர் என்பதாகும். மற்றொரு மூர்த்தி சுயம்புவாகத் தோன்றியவர். இவரின் திருப்பெயர் கனக கிரிஸ்வரர் (அல்லது) பொன்மலை நாதர் என்பதாகும். இவ்விருமூர்த்திகளும் தன்னை மெய்யன்புடன் துதிக்கும் பக்தர்களுக்கு அனைத்து நலன்களையும் அளிக்கின்றனர் என்பது திண்ணம்.

பார்வதி தேவி தவம்[தொகு]

இம்மலையிலிருந்து இறங்கும் போது இடப்புறம் பார்வதி தேவி தவம் செய்ததாகக் கருதப்படும் இடம் ஒன்று உள்ளது. அங்குத் தேவியின் திருப்பாதங்கள் காட்சியளிக்கின்றன. வலப்புறத்தில் வீரபத்திர ஆலயம் விளங்குகிறது.

அருணகிரிநாதர்[தொகு]

இவ்வாலயத்திற்கு அருணகிரிநாதர் எழுந்தருளி ஆறுமுகப்பெருமான்மீது அரிசையர்கள் எனத்தொடங்கும் பாடலை அருளிச்செய்துள்ளார்.