தேன்கூடு பசு மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேன்கூடு பசு மீன்
Acanthostracion polygonius Honeycomb cowfish
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
டெட்ராடோன்டிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
அகாந்தோசுட்ரேசியன்
இனம்:
அ. பாலிகோனியசு
இருசொற் பெயரீடு
அகாந்தோசுட்ரேசியன் பாலிகோனியசு
பொய்யி, 1876
அகாந்தோசுட்ரேசியன் பாலிகோனியசு பசு மீன்

தேன்கூடு பசு மீன் (Honeycomb cowfish)(அகாந்தோசுட்ரேசியன் பாலிகோனியசு) என்பது ஆசுட்ராசிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன் சிற்றினம் ஆகும். இது தண்டுமீன் அல்லது பசு மீன் என்றும் அழைக்கப்படுகிறது.[1]

விளக்கம்[தொகு]

தேன்கூடு பசு மீன் இதன் உடலின் பெரும்பகுதியை உள்ளடக்கிய கவசம் போன்ற, அறுகோண செதில்களைக் கொண்டுள்ளது. இதன் தனித்துவமான தேன்கூடு போன்ற அமைப்பு மற்றும் "கொம்புகள்" ஆகியவற்றிற்காக இப்பெயரினை இம்மீன்கள் பெற்றன. இந்த தகவமைப்பு காரணமாக இம்மீன்கள் பவளப்பாறைகளுடன் மறைந்து வாழ்கிறது. பெரும்பாலான தேன்கூடு பசு மீன்கள் நீல நிறத்தில் இருக்கும். சில மஞ்சள், சாம்பல் அல்லது பச்சை நிறமாகவும் இருக்கலாம்.[2][3] இளம் மீன்கள் பொதுவாகப் பெரிய மீன்களை விட வண்ணமயமானவை. இவை இடுப்பு துடுப்புகள் இல்லாமல் காணப்படும். மேலும் வால் துடுப்பு வட்டமானது.[3]

தேன்கூடு பசு மீன்கள் பல மாற்றியமைக்கப்பட்ட எலும்பு செதில்கள் மற்றும் "கொம்புகளுடன்" காணப்படும். இவை பாதுகாப்பு அமைப்பாக விளங்குகின்றன. தேன்கூடு பசு மீனை ஒரே மாதிரியான மீன்களிலிருந்து இவற்றின் கண்களுக்கு மேலே உள்ள இரண்டு முதுகெலும்புகள் மற்றும் அறுகோண வடிவத்தால் வேறுபடுத்தி அறியலாம். மற்ற பெட்டி மீன்களுடன் ஒப்பிடும்போது, தேன்கூடு பசு மீன் சிறிய, நீண்டுகொண்டிருக்கும் வாய் மற்றும் சதைப்பற்றுள்ள உதடுகளைக் கொண்டுள்ளது.[2][3]

தேன்கூட்டுப் பசு மீன்கள் அதிகபட்ச 50 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. இவற்றின் சராசரி நீளம் 25 சென்டிமீட்டர் ஆகும்.[2]

பரவல்[தொகு]

இந்த சிற்றினம் மேற்கு அட்லாண்டிக், கரீபியன் கடல் மற்றும் பிரேசிலுக்கு அருகிலுள்ள நீர்ப் பகுதி முழுவதும் காணப்படுகிறது. மெக்சிகோ வளைகுடாவின் பெரும்பகுதி முழுவதும் இவை காணப்படுவதில்லை, ஆனால் புளோரிடாவைச் சுற்றி இவைக் காணப்படும்.[2][4]

வாழிடம்[தொகு]

தேன்கூடு பசு மீன், பவளப்பாறைகள், கடல் புல் படுக்கைகள் மற்றும் முகத்துவாரங்களில் வெதுவெதுப்பான, தெளிவான நீரில் வாழ்கிறது.[1][3] இது ஒரு அசாதாரண மற்றும் எச்சரிக்கையான இனமாகும்.[2]

நடத்தை[தொகு]

தேன்கூடு பசு மீன்கள் பொதுவாகத் தனித்து இருக்கும், ஆனால் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்களைக் கொண்ட மூன்று மீன்களுடைய குழுக்களாகக் காணலாம். இவற்றின் இனப்பெருக்கம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால் இவை நீரின் மேற்பகுதியில் இனப்பெருக்கம் செய்ய இணை சேருகின்றன. இவை இணையாக மேற்பரப்பில் விரைவாக நீந்தி இனசெல்களை வெளியிடும்.[3]

தேன்கூடு மாட்டு மீன்கள் வேட்டையாடுவதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக நிறத்தை மாற்றும் திறன் கொண்டது. ஒருமுறை உருமறைப்பு செய்தால், மீன் நீண்ட நேரம் நிலையாக இருக்கும்.[3]

முதிர்ச்சியடைந்த மீன்களை விட இளம் மீன்கள் வேகமாக நீந்தும்.[3]

உணவு[தொகு]

இவை பகல் நேரத்தில் உணவினைத் தேடும். இவற்றின் உணவில் இறால், கடற்பாசிகள், பாசிகள், ட்யூனிகேட்ஸ் மற்றும் புழுக்கள் உள்ளிட்ட சிறிய கடல் முதுகெலும்பிலி உயிரிகள் உள்ளன.[2][3][5]

பயன்பாடு[தொகு]

தேன்கூடு பசு மீன் ஒரு மதிப்புமிக்க உணவு மீனாகக் கருதப்படுகிறது. இது புதியதாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கரீபியன் தீவுகளில் இது அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீனை உட்கொண்டதால் சிகுவேரா விடம் கலந்ததாகப் பல தகவல்கள் வந்துள்ளன. இது வணிக ரீதியாக மீன்களாகவும் விற்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Leis, J.L.; Matsuura, K.; Shao, K.-T.; Hardy, G.; Zapfe, G.; Liu, M.; Jing, L.; Robertson, R. et al. (2015). "Acanthostracion polygonius". IUCN Red List of Threatened Species 2015: e.T193646A2253091. doi:10.2305/IUCN.UK.2015-4.RLTS.T193646A2253091.en. https://www.iucnredlist.org/species/193646/2253091. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Acanthostracion polygonius :: Florida Museum of Natural History". www.floridamuseum.ufl.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-05-03.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Bissoon, Ashtie Ashley (2015). "Acanthostracion polygonius (Honeycomb Cowfish)" (PDF). The Online Guide to the Animals of Trinidad and Tobago.
  4. "Acanthostracion polygonius summary page". FishBase (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-05-03.
  5. https://sta.uwi.edu/fst/lifesciences/sites/default/files/lifesciences/images/Acanthostracion%20polygonius-%20Honeycomb%20Cowfish.pdf [bare URL PDF]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Photos of Honeycomb cowfish on Sealife Collection
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்கூடு_பசு_மீன்&oldid=3858523" இலிருந்து மீள்விக்கப்பட்டது