தென்னிந்திய வெண்வயிற்றுக் கரிச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தரக்கண்டத்தில் ஒரு தென்னிந்திய வெண்வயிற்றுக் கரிச்சான்

தென்னிந்திய வெண்வயிற்றுக் கரிச்சான் (அறிவியல் பெயர்: Dicrurus caerulescens caerulescens) என்பது வெண்வயிற்றுக் கரிச்சானின் துணையினம் ஆகும்.[1] தெற்கு நேபாளத்தில் இருந்து மேற்கு தென்னிந்தியாவரை காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

தென்னிந்திய வெண்வயிற்றுக் கரிச்சானானது கருங்கரிச்சான் அளவில் சுமார் 24 செ.மீ. நீளம் கொண்டதாக இருக்கும். இதன் விழிப்படலம் செம்பழுப்பான சிவப்பு நிறத்திலும், கால்கள் கறுப்பான பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் வால் நீண்ட பிளவுற்றதாக இருக்கும். உடலின் மேற்பகுதி பளபளப்பான கறுப்பு நிறத்தில் இருக்கும். தொண்டையும், நெஞ்சும் பழுப்புத் தோய்ந்த கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். வயிறும், வாலடியும் வெண்மையாக இருக்கும்.[2]

பரவலும் வாழிடமும்[தொகு]

இப்பறவை தெற்கு நேபாளத்தில் இருந்து தென்னிந்தியாவரை காணப்படுகின்றது. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த இலையுதிர் காடுகளிலும் சமவெளிகளிலும் காணப்படுகிறது. மலைகளில் 1000 மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது. இவை பொதுவாக நடுக்காடுகளில் இல்லாமல் காட்டுப் பாதைகள் சார்ந்த பகுதிகளில் திரியக் காணலாம்.[2]

நடத்தை[தொகு]

தென்னிந்திய வெண்வயிற்றுக் கரிச்சான் தனித்து மரங்களில் உயரே வீற்றிருக்கும். இரை தேடக்கூடிய பிற பறவைக் கூட்டங்களோடு சேர்ந்து பூச்சிகளை வேட்டையாடித் திரியும். மரங்களில் பூக்கள் பூக்கும் காலங்களில் பூக்களில் தேன் உண்பது உண்டு. இப்பறவை சற்று இனியக் குரலில் ஒலி எழுப்பும். பிற பறவைகளைப் போலப் போலியாக குரல் எழுப்புவதும் உண்டு.

தென்னிந்திய வெண்வயிற்றுக் கரிச்சான் மார்ச் முதல் சூன் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றது. இப்பறவை இலையுதிர் காடுகளிலோ மூங்கில் காடுகளிலோ கூடு அமைக்கும். கூட்டில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். இதன் முட்டைகள் கருங்கரிச்சானின் முட்டைகளைப் போன்றே இருக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Orioles, drongos, fantails". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 7 October 2021.
  2. 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 356-357.