தென்னிந்திய பழுப்பு நிறக் காட்டு ஆந்தை
தென்னிந்திய பழுப்பு நிறக் காட்டு ஆந்தை (அறிவியல் பெயர்: Strix leptogrammica indranee) என்பது பழுப்பு நிறக் காட்டு ஆந்தையின் துணை இனமாகும்.[1] இது தென்னிந்தியாவில், கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள காடுகளில் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]தென்னிந்திய பழுப்பு நிறக் காட்டு ஆந்தை நடுத்தர அளவில் சற்று பெரிய ஆந்தை ஆகும். இது சுமார் 47 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு நீலம் தோய்ந்த கொம்பு நிறத்திலும், விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பு நிறத்திலும், கால்கள் நீலந்தோய்ந்த வெளிர் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இதன் உடலின் மேற்பகுதி சாக்லெட் பழுப்பு நிறத்தில் இருக்கும். தோள் பட்டை இறக்கைகள், வால்மேல் இறகுகள் ஆகியவற்றில் வெள்ளைப் பட்டைகளைக் காண இயலும். வால் பழுப்பு நிறமாக மஞ்சள் கலந்த சிவப்பு நிறப் பட்டைகளோடும், வெள்ளை விளிம்போடும் காட்சியளிக்கும். மோவாய் சாக்லெட் நிறமும் வெண்மை நிறமும் கலந்து காட்சிதரும். தொண்டையில் தூய வெண்மை நிறக் கறை காணப்படும். உடலின் மற்ற கீழ்ப்பகுதிகள் வெண்மை தோய்ந்த வெளிர் மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும், மார்பில் மட்டும் பழுப்பு சாயல் தென்படும். மார்பு முழுவதும் நல்ல பழுப்பு நிறப் பட்டைகள் நிறைந்து இருக்கும்.[2]
வாழிடம்
[தொகு]தென்னிந்திய பழுப்பு நிறக் காட்டு ஆந்தை தென்னிந்தியாவில், கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அடர்ந்த மாறா பசுமைக் காடுகளிலும், நீர்வளம் மிக்க இலையுதிர் காடுகளிலும் காணப்படுகிறது.[2]
நடத்தை
[தொகு]தென்னிந்திய பழுப்பு நிறக் காட்டு ஆந்தை ஒரு இரவாடி ஆகும். இது பகலில் மரங்களில் இணையாக மறைவிடங்களில் அமர்ந்திருக்கும். சிறு காலடி ஓசை கேட்டாலும் ஒலி எழுப்பாமல் விரைந்து மறையும். சிறு பறவைகள், பாம்பு, ஓணான், எலி முதலியவற்றை வேட்டையாடி உண்ணும். 'டொக் டூ டொக்' என மென்மையான குரலில் சில நொடிகளுக்கு ஒருமுறை கத்தும்.[2]
இந்த ஆந்தைகள் சனவரி முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்யும். மரக்கிளை பிரியும் கவைக் குழுவிலும், பாறை இடுக்குகளிலும், பாறை ஓரமாக தரையிலும் முட்டை இடும். பொதுவாக இரண்டு முட்டைகளை இடும் சிலசமயங்களில் ஒரு முட்டையை மட்டுமே இடுவதும் உண்டு. முட்டைகள் வெண்மை நிறத்தில் இருக்கும்.