தென்னிந்திய பனங்காடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்னிந்திய பனங்காடை (அறிவியல் பெயர்: Coracias benghalensis indicus என்பது பனங்காடையின் துணையினம் ஆகும்.[1] இது நடு மற்றும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

தென்னிந்திய பனங்காடையானது புறா அளவுள்ளதாக சுமார் 30 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கறுப்பு நிறத்திலும், கால்கள் ஆழ்ந்த ஆரஞ்சு மஞ்சள் நிறத்திலும், விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் தலையும் பிடரியும் பசுமை கலந்த நீல நிறத்தில் இருக்கும். பின் கழுத்தில் ஊதா நிறப்பட்டைகள் காணப்படும். மேல் முதுகு பளபளக்கும் பசுமை தோய்ந்த பழுப்பு நிறத்திலும், கீழ் முதுகு நீல நிறத்திலும், பிட்டமும் வால்மேல் இறகுகளும் பசுநீல நிறத்தில் இருக்கும். மோவாய், தொண்டை, மார்பு ஆகியன வைன் நிறத்தில் இருக்கும். கழுத்தில் சிறு கோடுகள் காணப்படும். பக்கங்களும் வாலடி இறகுகளும் வெளிர் நீலமாக இருக்கும். நீலமும் பசுமையும் கலந்ததாக வயிற்றின் நிறம் இருக்கும்.[2]

பரவலும் விழிடமும்[தொகு]

தென்னிந்திய பனங்காடையானது நடு மற்றும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகிறது.[3] மலைகளில் 1000 மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது.

நடத்தை[தொகு]

இவை பொதுவாக தனித்தோ அல்லது இணையாகவோ தந்திக் கம்பங்கள் மீதும், இலை தழைகள் மிகுதியாக இல்லாத மரக் கிளைகளில் அமர்ந்து சுற்றிலும் நோட்டம் விட்டபடி இருக்கும். அவ்வாறு அமர்ந்து இருக்கம்போது அவ்ப்போது வாலை மட்டும் அசைத்தபடி இருக்கும். தரையில் இரையைக் கண்டால் மெல்லப் பறந்து வந்து இரையைப் பிடித்து அங்கேயோ அல்லது முன்பு அமர்ந்து இருந்த இடத்திற்கோ எடுத்துச் சென்று உண்ணும். இவை பூச்சிகள், வண்டுகள், ஓணான், சிறு பறவைக் குஞ்சுகள் போன்றவற்றை உணவாகக் கொள்ளும்.[2]

சில சமயங்களில் தொடர்ந்து காக், காக், காக், என பெருத்த ஆரவாரக் குரலில் கத்தியபடி இருக்கும்.

இனப்பெருக்கம்[தொகு]

இவை பெப்ரவரி முதல் ஆகத்து வரை இனப்பெருக்கம் செய்கின்றன. காதலூட்டத்தின் ஒரு பகுதியாக ஆண் பறவை உயரமாகப் பறந்து பின் இறக்கையை மடித்துக் கொண்டு தலை கீழாக விழுவதும், சுற்றிப் பறந்தும் ஆரவாரம் செய்தும் பெண் பறவையைக் கவரும். இனப்பெருக்கம் செய்யாத காலத்திலம் கூட தனித்து இப்பறவை பொழுது போக்காக இவ்வாறு செய்வதும் உண்டு. இவை பனை மரத்தில் உள்ள பொந்துகளிலும், கட்டடங்களில் உள்ள பொந்துகளிலும் புல், வைக்கோல் குப்பை போன்றவற்றைக் கொண்டு மெத்தென்று ஆக்கி, அதில் மூன்று அல்லது நான்கு வெள்ளை முட்டைகளை இடும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2021). "Rollers, ground rollers, kingfishers". IOC World Bird List Version 11.1. International Ornithologists' Union. Archived from the original on 4 October 2018. பார்க்கப்பட்ட நாள் 5 April 2021.
  2. 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 305-306. 
  3. Pamela C. Rasmussen; Anderton, J. C. (2012). Birds of South Asia. The Ripley Guide. 2: Attributes and Status (Second ). Washington D.C. and Barcelona: Smithsonian National Museum of Natural History and Lynx Edicions. பக். 270. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-84-96553-87-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னிந்திய_பனங்காடை&oldid=3787705" இலிருந்து மீள்விக்கப்பட்டது