தென்னிந்திய கருஞ்சிவப்பு வால் வானம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்னிந்திய கருஞ்சிவப்பு வால் வானம்பாடி (அறிவியல் பெயர்: Ammomanes phoenicura testacea) என்பது கருஞ்சிவப்பு வால் வானம்பாடியின் துணையினம் ஆகும்.[1] இது தென்னிந்தியாவில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

தென்னிந்திய கருஞ்சிவப்பு வால் வானம்பாடியானது சிட்டுக்குருவியைவிட சற்றுப் பெரியதாக சுமார் 16 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கொம்பு நிறமாக அடிப்பகுதி ஊன் நிறமாக இருக்கும். இதன் விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் வெளிர் பழுப்பாகவும் இருக்கும். உடலின் மேற்பகுதி பழுப்பாகச் சற்றுச் சிவப்புத் தோய்ந்து காணப்படும். இறக்கையின் பிற இறகுகளும் வால் முனையும் ஆழ்ந்த பழுப்பாக இருக்கும். மோவாயும், தொண்டையும் வெளிர் கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். மார்பும் வயிறும் கருஞ்சிவப்பாக இருக்கும். மார்பில் பழுப்புக் கோடுகள் காணப்படும். பிட்டம், வாலடி, இறக்கைகளின் உள் இறகுகளும் கருஞ்சிவப்பாக இருக்கும்.[2]

பரவலும் வாழிடமும்[தொகு]

தென்னிந்திய கருஞ்சிவப்பு வால் வானம்பாடியானது தென்னிந்தியா முழுவதும் கேரளம் நீங்கலாக காணப்படுகிறது. இது பொதுவாக வறண்ட மணற்பாங்கான பகுதிகளில் காணப்படுகிறது. புதர் காடுகள், விளைநிலங்கள் சார்ந்தும் ஆங்காங்கே சிரிவதைக் காணலாம்.[2]

நடத்தை[தொகு]

இணையாகவும் சிறு கூட்டமாகவும் காணப்படும் இப்பறவை தரையில் குறுக்கும் மறுக்குமாக ஓடியாடி இரைதேடும். நெல் முதலான தானியங்களையும் புல் விதைகளையும் உணவாகக் கொள்ளும். இப்பறவை வானில் பாய்ந்து பாய்ந்து உயரப் பாடியபடியே எழுந்து பறந்து திரியும்.

இவை மார்ச் முதல் சூன் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. பிற வானம்பாடிகளைப் போல தரையில் பல்லால் கோப்பை வடிவிலான கூடு அமைக்கும். அதில் மூன்று அல்லது நான்கு மஞ்சள் கலந்த வெண்மையான முட்டைகளை இடும். முட்டையில் செம்பழுப்புப் புள்ளிகளும் கறைகளும் காணப்படும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "IOC World Bird List 6.4". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.6.4. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref. 
  2. 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 342.