துலாபாரம்
துலாபாரம் (Tulabhara) என்பது கோயில் போன்ற வழிபாட்டு இடங்களில் உள்ள தராசை குறிக்கும். இதில் துலாபாரம் செலுத்துதல் என்ற இந்து சமய நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. இந்த சடங்கு முறை இந்து சமயத்தின் சிறுதெய்வ வழிபாட்டில் காணப்படுவதில்லை. இந்த சடங்கில் பக்தரின் எடைக்கு நிகரான எடையில் பொருட்கள் தரப்படுகின்றன. பண்டைக்காலத்தில் மன்னர்கள் கோவில்களுக்கு தங்கம், நவரத்தினங்கள் போன்றவற்றை இந்த துலாபார சடங்கிற்காக கொடுத்துள்ளனர். இவர்களில் சுந்தரபாண்டியன் பட்டத்துயானையின் மேல் அமர்ந்து அதற்கு நிகரான தங்கம், நவரத்தினங்கள் போன்ற பொக்கிசங்களை கொடுத்ததாக வரலாறு உள்ளது.
அண்மைக்காலங்களில் இந்துக் கோயில்களில் இவ்வாறான நடைமுறையில் பக்தர்கள் பொருள் கொண்டு வந்து எடுத்து செல்லும் சிரமத்தினை குறைக்க, தாங்களே எடைக்கேற்ற பொருளைத் தந்து, அதற்குறிய பணத்தினைப் பெற்றுக் கொள்கின்றார்கள். [1] குழந்தை பாக்கியத்திற்காக துலாபாரம் செலுத்துவதாக வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், குழந்தைப் பிறந்ததும் காணிக்கையாக துலாபாரம் செலுத்துகிறார்கள். [2]
சடங்கு முறை
[தொகு]ஒரு பெரிய தராசில் துலாபாரம் செலுத்த வேண்டிக் கொண்ட பக்தர் ஒரு புறமும் அமர்ந்து கொள்வார். மறுபுறம் அவர் செலுத்த வேண்டிய பொருள்கள் நிரப்படும். தராசின் எடை இருபுறமும் சரியாக வரும் வரை பொருட்கள் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும். சரியான அளவினை எட்டியவுடன் அந்தப் பொருட்கள் அனைத்தையும் கோவிலிடம் ஒப்படைத்துவிட்டு பக்தர் சென்றுவிடுவார். பக்தர்கள் தாங்கள் செலுத்த விரும்புவதாக அரிசி, பருப்பு போன்ற தானியங்களையும், வெல்லம், கற்கண்டு, சர்க்கரை போன்ற பொருள்களையும் வேண்டிக்கொள்வார்கள்.
துலாபாரத்திற்காக கொடுக்கப்படும் பொருட்கள்
[தொகு]- மஞ்சள்
- தங்கம்
- வெள்ளி
- நாணயங்கள்
- அரிசி
- வெல்லம்
- பருப்பு வகைகள்
- பழங்கள்
- கோதுமை
- தானிய வகைகள்
- கல்கண்டு
- கடுகு
- நெய்
- நெல்
- எண்ணெய் வகைகள்
- ஏலக்காய்
- நாட்டுச் சர்க்கரை
- மிளகு
- சீரகம்
வரலாற்றில் துலாபாரம்
[தொகு]மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற மன்னன் திருவரங்கத்தில் இருக்கும் அரங்கநாதனுக்கு கொடுத்த துலாபாரத்தினை பல்வேறு நூல்கள் உரைக்கின்றன. [3]
திருவரங்க ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் இருபத்து நான்கு துலாபுருச மண்டபங்கள் அமைத்து, அவற்றில் துலாபாரம் அமைத்து பொன்னையும், நவ மணிகளையும் கொடுத்தார். அத்துடன் பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி, தானும் போர்க்கோலம் பூண்டு அதில் ஏறி படகு எந்த அளவிற்கு நீரில் அமிழ்கிறதோ அந்த அளவிற்கு மற்றொரு படகில் தங்கம், நவரத்திரம், ஆபரணம் போன்ற பொற்குவியல்களை நிறப்பி சமமான அளவுற்ற பொக்கிசங்களை அரங்கனுக்கு கொடுத்தார். இவ்வாறு செய்தமையை ஆர்க்கிமிடீஸை கண்டறிந்த பௌதிக தத்துவத்தினை பல்நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் செய்துள்ளதாக பெருமை கொள்கின்றனர்.[4]
இந்த வரலாறு கல்வெட்டுப் பாடலொன்றில் பதிவாகியுள்ளது.
- ‘பாயல் கொள்ளும் பரமயோகத்து ஒரு பெருங்கடவுளும்
- இனிதுறையும் இருபெருங் காவிரி இடை நிலத்திலங்கும்
- திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்புப் பன்முறை அணி
- துலாபாரமேறிப் பொன்மலையென்னப் பொலிந்து தோன்றவும்’
புராணங்களில் துலாபாரம்
[தொகு]கிருஷ்ண துலாபாரம் - கிருஷ்ண அவதாரத்தில் ருக்மணி, சத்யபாமா ஆகிய இரு மனைவியரிடையே அன்பு குறித்து போட்டி எழுந்தது. அப்போது நாரதரின் யோசனைப்படி துலாபாரம் அமைத்து அன்பினை நிறுபிப்பது என்று முடிவானது. துலாபாரத்தில் கிருஷ்ணர் ஒரு புரம் அமர்ந்திருக்க சத்யபாமா தன்னிடமிருந்த அத்தனை வைர வைடூரியங்கள், தங்கங்கள், ரத்னங்கள் போன்றவற்றை வைத்தார். இருந்தும் கிருஷ்ணரின் துலாபாரத் தட்டு உயரவில்லை. அடுத்தாக ருக்மணி ஒரு பிடி துளசியை அன்பாக வேண்டி வைத்தார். கிருஷ்ணரின் துலாபாரத் தட்டு உயர்ந்து, துளசி இருந்த துலாபாரத் தட்டு கீழே சென்றது. இந்த புராண நிகழ்வு தம்பதிகளின் அன்பிற்காக கூறப்படுகிறது. ருக்மணி தேவி கிருஷ்ணரின் பெயரை துளசியில் எழுதி வைத்ததாகவும் கூறுகின்றனர். [5]
துலாபார சிற்பங்கள்
[தொகு]கும்பகோணம் மகாமக குளத்தின் மேற்குப் பகுதியில் துலாபார மண்டபம் அமைந்துள்ளது. இங்கு துலாபார சிற்பமும் இடம்பெற்றுள்ளது. [6]
கோவில்களில் நவீன முறை
[தொகு]திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2012 செப்டம்பர் 25 முதல் துலாபாரம் செலுத்த பக்தர்கள் பொருட்களை கொண்டு வராமல், துலாபார கவுன்ட்டர் என்ற இடத்தில் துலாபாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். பிறகு துலாபாரத்தில் வைத்து சரியான எடைக்குரிய பொருளுக்கு மட்டும் ரசீது பெற்று, அதனை உண்டியலில் செலுத்திவிடலாம். [7]
பகுத்தறிவு துலாபாரம்
[தொகு]தமிழகத்தில் இறை மறுப்பாளராக வாழந்த பெரியாருக்கு, அவர் புகழ்பெற்ற பிறகு எண்ணற்ற தொண்டர்கள், துலாபாரமாக பல பொருட்களைக் கொடுத்தனர். [8] மகிழுந்து டயர்கள், கண்ணாடிக் குவளைகள், பெட்ரோல், காப்பிக் கொட்டை, படுக்கை விரிப்புகள், மிளகாய் போன்ற பொருட்களை பெரியாரின் எடைக்கு எடைக்காக கொடுத்தனர். பல கோயில்களில் துலாபாரத்திற்காக மறுக்கப்படும் உப்பும் ஒரு முறை பெரியாருக்காக கொடுக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காணிக்கை செலுத்துதல் - திருவரங்கம் அரங்கநாதர் கோவில் தளம்". Archived from the original on 2021-09-25. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
- ↑ "கொடுங்கலூர் பகவதி அம்மன்-தினகரன்". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-06-16.
- ↑ "அரங்கனுக்கு அதிசயத் துலாபாரம் - தினகரன்". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
- ↑ "அரங்கனுக்கு அதிசயத் துலாபாரம் - தினகரன்". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
- ↑ துளசி தளம்! கிருஷ்ண நாமம்! தினமணி
- ↑ "மகாமகம் என்பது என்ன கணக்கு?-தினகரன்". Archived from the original on 2021-09-23. பார்க்கப்பட்ட நாள் 2016-06-16.
- ↑ துலாபாரம் செலுத்த எளியமுறை: திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு- தினமணி 04 சனவரி 2013
- ↑ பெரியாருக்கு எடைக்கு எடை வழங்கிய பொருட்கள் விடுதலை இதழ் - மின்சாரம் 26-10-2010