துத்வா தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துத்வா தேசியப் பூங்கா (Dhudwa National Park) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், கேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்திய-நேபாள எல்லையை அண்டி அமைந்துள்ள இது சுமார் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.[1] புலிகள், யானைகள், ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகம் என்பன இங்கே அதிகமாகக் காணப்படுகின்றன.[2]

மலைப்பாம்புகள் இங்கே பொதுவாகக் காணப்படும் ஊர்வனவாகும். இப் பூங்கா பறவைகள் அவதானிப்பவர்களைக் கவரும் ஒரு இடமாகும்.

துத்வா தேசிய பூங்கா
துத்வா புலிகள் காப்பகம்
Dudhwa (30783128830).jpg
துத்வா பூங்காவில் அமைந்துள்ள காடு
அமைவிடம்லக்கிம்பூர், உத்திர பிரதேசம், இந்தியா
பரப்பளவு490.3
நிறுவப்பட்டது1977
அதிகாரபூர்வ வலைத்தளம்

வரலாறு[தொகு]

துத்வா 1879 ஆம் ஆண்டில் புலிகளின் காப்பகமாக காணப்பட்டது. 1958 ஆம் ஆண்டில் இப்பகுதியில் சதுப்பு நில மான்களுக்கான வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் பில்லி அர்ஜன் சிங் என்பவரின் முயற்சிகளினால் இப்பகுதி ஒரு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் இந்த பூங்கா புலிகளின் இருப்பிடம் என்று அறிவிக்கப்பட்டு வேங்கைத் திட்டம் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டது. கிசான்பூர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் கட்டர்னியாகாட் வனவிலங்கு சரணாலயம் என்பவற்றுடன் இணைந்து துத்வா புலிகளின் காப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது.[1]

காலநிலை[தொகு]

வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளைப் போல துத்வாவும் வறண்ட குளிர்கால வகை காலநிலையுடன் தீவிர ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது. கோடையில் 40 °C (104 °F) வரையில் வெப்பநிலை அதிகரிக்கும்.  குளிர்காலமான அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து மார்ச் நடுப்பகுதி வரை வெப்பநிலை 20 முதல் 30 °C (68 மற்றும் 86 °F) வரையில் காணப்படும். பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரையிலான காலப்பகுதி பூங்காவை பார்வையிடுவதற்கு ஏற்றவை. இங்கு சூடான காற்று ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து மே இறுதி வரை வலுவாக வீசுகிறது. ஜூன் நடுப்பகுதியில் தொடங்கி செப்டம்பர் வரை  நீடிக்கும் பருவமழையில் 90% வீதமான மழைவீழ்ச்சி பதிவாகும். குளிர்காலத்தில் வெப்பநிலை குறைந்தபட்சம் 9 °C (48 °F) ஆகவும், கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 45 °C (113 °F) ஆகவும் காணப்படும்.[3]

தாவரங்கள்[தொகு]

இப்பூங்கா இந்தியாவின் சிறப்பான சூழற்தொகுதியை கொண்டுள்ளது. இங்குள்ள காடுகளை வடக்கு வெப்பமண்டல அரை பசுமையான காடு, வட இந்திய ஈரமான இலையுதிர் காடு, வெப்பமண்டல பருவகால சதுப்பு நில காடு மற்றும் வடக்கு வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகள் என வகைப்படுத்தலாம். பூங்காவின் 19% வீதம் புல்வெளிகளால் ஆனது. இங்கு ஈரநிலங்கள் மூன்றாவது பெரிய வாழ்விட வகையாகும். இதில் ஆறுகள், நீரோடைகள், ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்கள் ஆகியவை அடங்கும். பல முக்கிய ஈரநிலங்கள் ஆண்டு முழுவதும் ஓரளவு மேற்பரப்பு ஈரப்பதத்துடன் வற்றாதவை என்றாலும், சில கோடையில் வறண்டு போகின்றன. இந்த பூங்கா இந்தியாவின் மிகச்சிறந்த காடுகளில் ஒன்றாகும். இங்குள்ள மரங்களில் சில 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை மற்றும் 70 அடி (21 மீ) உயரமுள்ளவை.

விலங்குகள்[தொகு]

துத்வா தேசிய பூங்காவில் 1995 ஆம் ஆண்டில் 98 புலிகளும், 1,600 இற்கும் அதிகமான சதுப்பு மான்களும் வாழ்ந்தன. பில்லி அர்ஜன் சிங் மிருகக்காட்சிசாலையில் பிறந்த புலிகள் மற்றும் சிறுத்தைகளை துத்வாவின் காடுகளுக்குள் அறிமுகப்படுத்தினார். இப்பூங்காவில் சில அரிய இன விலங்குகள் வசிக்கின்றன. முன்னர் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட ஹிஸ்பிட் முயல் 1984 ஆம் ஆண்டில் மீண்டும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் அசாம் மற்றும் நேபாளத்தில் உள்ள போபிடோரா சரணாலயத்திலிருந்து இந்திய காண்டாமிருகம் மீண்டும் துத்வாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.[4]

சதுப்பு மான், சாம்பார் மான், புள்ளியிடப்பட்ட மான், பன்றி மான், சோம்பல் கரடி, வளைத் தோண்டி வாழும் தென்னாப்பிரிக்க கரடி வகை, குள்ளநரி, புகுனு, வனப்பூனை, சிறுத்தை பூனை ஆகியவை இங்கு காணப்படும் பிற விலங்குகளாகும்.

பறவைகள்[தொகு]

துத்வா பூங்காவில் 350 இற்கும் மேற்பட்ட பறவையினங்கள் காணப்படுகின்றன. வாத்துகள், கொண்டைக்குருவிகள், மரங்கொத்திகள், நாரைகள், ஆந்தைகள், மரத்தலையன், குக்குறுவான், பஞ்சுருட்டான் உட்பட ஏராளமான பறவைகள் காணப்படுகின்றன. துத்வா பூங்கா பறவைகள் அவதானிப்பவர்களை கவரும் இடமாகும். [சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Mapping of National Parks and Wildlife Sanctuaries, Dudhwa Tiger Reserve".
  2. ந.வினோத்குமார் (2016 அக்டோபர் 22). "புலிகளைக் காக்கும் பெண்". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 23 அக்டோபர் 2016.
  3. "Retrieval of forest parameters from Envisat ASAR data for biomass inventory in Dudhwa National Park, U.P., India".
  4. Oberai, C.P. (2002). Kaziranga, The Rhino Land. B. R. Pub. Corp. ISBN 978-8176462594.