தீத்தடுப்பு
தீத்தடுப்பு (Fire Protection) அல்லது தீக்காப்பு என்பது பொதுவாகக் கட்டடங்களில் தீயினால் ஏற்படக்கூடிய அழிவுகளைத் தடுப்பதற்கான செயல்முறைகளைக் குறிக்கும். கட்டிடங்களில் தீத்தடுப்பு அம்சங்களை ஏற்படுத்துவதன் நோக்கம் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பதாகும். கட்டடங்களில் அமையக்கூடிய தீத்தடுப்பு உத்திகள் கட்டிடவகை, அதனைப் பயன்படுத்துபவர்களின் வகை, அவர்களின் எண்ணிக்கை, போன்ற காரணிகளில் தங்கியுள்ளது.
தீத்தடுப்பின் முக்கிய நோக்கங்கள்
[தொகு]தீத்தடுப்பு உத்திகள் பின்வருவனவற்றை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை.
- உயிர்களைப் பாதுகாத்தல்,
- சொத்துக்களை அழிவிலிருந்து பாதுகாத்தல்,
- செயற்பாடுகளில் தடங்கல் ஏற்படாது பாதுகாத்தல்.
மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கவேண்டியது இல்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில், கட்டடங்கள் பரப்பளவிலும், உயரத்திலும் அதிகரித்து வருவதுடன், அதிக சிக்கல்தன்மை கொண்டவையாகவும் உருவாகி வருகின்றன. பல்வேறு தேவைகளுக்காக அவ்வாறான கட்டிடங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றது. இதனால் தீ ஏற்படும்போது மக்களைப் பாதுகாப்பது முன்னரிலும் கடினமாகியுள்ளது.
இன்றைய கட்டிடங்கள், அவற்றின் அளவு, பல்வேறுபட்ட நவீன வசதிகளுக்கான தேவைகள், அவற்றின் வடிவமைப்பு, கட்டுமானம் என்பவற்றில் உள்ளிடப்படுகின்ற அதிகரித்த நிபுணத்துவக் கூறுகள் என்பவற்றின் காரணமாகக் கட்டிடங்களுக்கான செலவு மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் தீயினால் பெரும் பொருளாதார நட்டங்கள் உண்டாகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதைவிடக் கட்டடங்கள் பல இன்றியமையாத செயற்பாடுகளுக்கும், பெறுமதியானதும், விலைமதிப்பு அற்றவையுமான பொருட்களுக்கும், சாதனங்களுக்கும் உரிய இடமாகவும் அமைவதால், மீள்விக்கமுடியாத இழப்புகளும் ஏற்படக்கூடும். அத்துடன், மனித உயிர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், கட்டிட உறுப்புக்களின் பாதுகாப்பு முக்கியமாகின்றது.
தீயினால் பொருளாதாரச் செயற்பாடுகளை இடைநிறுத்தவேண்டி ஏற்படுவதும் பெரும் பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துவதுடன், பல சந்தர்ப்பங்களில் மக்களுடைய இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கும் நிலை உள்ளது.
தீத்தடுப்பின் கூறுகள்
[தொகு]கட்டிடங்களில் தீத்தடுப்பு மூன்று வழிகளில் எய்தப்படுகின்றது.
- மறைமுகத் தீத்தடுப்பு - இது கட்டிடங்களில் தீ ஏற்படாமல் தடுப்பதையும், தீ ஏற்படும்போது, அது உருவாகிய இடத்திலிருந்து வேறு இடங்களுக்குப் பரவாமல் தடுப்பதையும், தீயினால் கட்டட உறுப்புக்கள் அழிந்துவிடுமுன் குறிப்பிட்ட நேரம் நின்றுபிடிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது.
- நேரடித் தீத்தடுப்பு - இது தீ ஏற்படும்போது அதனைக் கண்டுபிடித்து அணைக்கும் செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகளைக் குறித்து நிற்கிறது.
- தீக்காப்பு அறிவூட்டல் - இது கட்டடத்தைப் பயன்படுத்துபவர்களும், கட்டட உரிமையாளர்களும், கட்டிடத்தின் தீத்தடுப்பு ஏற்பாடுகள் பற்றியும், அதனைப் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் தெளிவாக அறிந்திருப்பதை உறுதி செய்வது ஆகும். அத்துடன் கட்டிட உரிமையாளர்கள், அதன் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் போன்றோர் தேவையான தீத்தடுப்பு விதிமுறைகள் பற்றி அறிந்திருப்பதையும், கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள தீத்தடுப்புச் சாதனங்கள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பான பராமரிப்பு முதலியவை பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்வதையும் இது குறிக்கும்.
மேலே குறிப்பிட்ட அனைத்துமே ஒரு கட்டிடத்தின் தீத்தடுப்புக்கு முக்கியமானவை ஆகும். ஒன்றில்லாமல் மற்றவை சரியாகத் தொழிற்பட முடியாது. ஆனாலும் கட்டடங்களில் இவற்றைச் சமநிலையில் ஏற்படுத்துவது தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இருந்தே வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- தீத்தடுப்பு கோடு
- தீக்காப்பு விதித்தொகுப்பு
- தீ அணைப்புச் சேவை
- முக்கியமான தீ அழிவுகள்
- தீக்காப்புப் பொறியியல்
வெளியிணைப்புகள்
[தொகு]- தீத்தடுப்பு விதிமுறைகளை உருவாக்கும் நிறுவனங்கள்
- தேசிய தீத்தடுப்புச் சங்கம் (NFPA)
- ULC
- DIBt