தி சாங் ஆஃப் ஸ்பாரோஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி சாங் ஆஃப் ஸ்பாரோஸ்
இயக்கம்மஜீத் மஜீதி
தயாரிப்புமஜீத் மஜீதி
கதைமஜீத் மஜீதி
மெஹ்ரான் கஷானி
இசைஹுசைன் அலி ஜாதா
நடிப்புரிலா நாஜி
வெளியீடுபிப்ரவரி, 2008
நாடுஈரான்
மொழிபாரசீகம், அசேரி

'தி சாங் ஆஃப் ஸ்பாரோஸ்' (அ) 'குருவிகளின் பாடல்' (ஆவாஸ்-ஏ கோஞ்சேஷ்க்-ஹா) (பாரசீக மொழி: آواز گنجشک‌ها‎) என்பது மஜீத் மஜீதி ஈரானிய மொழியான பாரசீக மொழியில் இயக்கி 2008ஆம் ஆண்டு வெளியான ஒரு ஈரானிய திரைப்படம். இத்திரைப்படம் நடுத்தரக் குடும்பத்தின் பொறுப்பாளராக இருக்கும் தந்தையின் நடவடிக்கைகள், உணர்வுகள், சூழல்கள் ஆகியவற்றை யதார்த்தமாக விவரிக்கிறது. ஒரு தீக்கோழி (நெருப்புக்கோழி) பண்ணையிலிருந்து வேலை நீக்கம் செய்யப்படும் கரீம் என்பவரின் கதையைச் சொல்கிறது இப்படம். திடீரென வேலையை இழந்த கரீம் தொடர்ந்து குடும்பத்தை சிரமமின்றி நடத்துவதற்காக தெஹ்ரான் நகருக்குச் சென்று தேடிய புது வேலையையும் அதன் பின் அவர் வாழ்வில் நிகழும் மாற்றங்களையும் காட்டுவதாகக் கதை அமைகிறது.[1][2][3] இத்திரைப்படம் பலதரப்பட்ட பாராட்டுகளைப் பெற்றது.

கதைச்சுருக்கம்[தொகு]

ஈரான் தலைநகரான தெஹ்ரான் நகருக்கு வெளியே உள்ள தீக்கோழிப் பண்ணை ஒன்றில் வேலை செய்துகொண்டிருப்பவர் கரீம். அவரது மனைவி நர்கிஸ். அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். இந்தக் குடும்பம் அவர்களுடைய ஒரு சிறிய வீட்டில் எளிமையான, நிறைவான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறது. பாசமும் பண்பும் மிக்கவர் கரீம். ஆனால் குடும்ப பாரம் மற்றும் பொறுப்பு காரணமாக அவ்வப்போது கோபக்காரராக இருக்கிறார்.

மூத்த மகள் ஹனீயே பிறப்பு முதலே காது கேளாதவள். அரசு இலவசமாகக் கொடுத்த காது கேட்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துபவள். ஆனாலும் உதட்டசைவை வைத்து பிறரின் பேச்சைப் புரிந்து கொள்ளப் பழகியவள். ஒரு நாள் அவளுடைய காதுக் கருவி அவர்களுடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு பெரிய மழைநீர்த் தொட்டியில் விழுந்துவிடுகிறது. இதைக் கேள்விப்பட்டு கரீம் கோழிப் பண்ணையில் இருந்து விரைவாக வீடு திரும்புகிறார். கரீமின் மகன் ஹுசைன் அக்கம் பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடன் சேர்ந்து அக்காவின் காதுக் கருவியை - தூர் வாரப்படாத, சகதியான அந்த நீர்த் தேக்கத் தொட்டியில் தேடிக் கொண்டிருக்கின்றான்.

தொட்டியில் இறங்கியதற்காகக் கரீம் அவர்களைத் திட்டுகிறார். பிறகு தானும் தொட்டியில் இறங்கித் தேடுகிறார். தேடலுக்கு இடையே ஹுசைனும் அவனது நண்பர்களும் 'அந்தத் தொட்டியைத் தூர்வாரி, சுத்தம் செய்து அதில் மீன் வளர்த்து பெரும் பணக்காரர்கள் ஆகலாம்' என்று கூறுகின்றார்கள். கரீம் அந்த யோசனையை நிராகரிக்கிறார். ஒரு வழியாக அவர்கள் காதுக் கருவியைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனாலும் அது சரியாக வேலை செய்யவில்லை. அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் இலவச மாற்று கருவி கிடைக்க நான்கு மாதங்கள் ஆகும் என்கின்றனர். அவசரமாக வேண்டுமென்றால் தலைநகர் தெஹ்ரான் நகருக்குச் சென்றால் கடைகளில் கிடைக்கும் என்று தெரிய வருகிறது.

உதட்டசைவால் பேச்சைப் புரிந்துகொள்ளும் மகள் ஹனீயே, தன் தந்தையிடம் அதிகம் பணமில்லை எனத் தெரிவதால் 'கருவி இல்லாமலேயே காது ஓரளவு கேட்கிறது' எனப் பொய் சொல்கிறாள். மகளின் நிலையை உணர்ந்து கலங்குகிறார் கரீம்.

அந்தக் கவலையோடே வேலைக்குப் போகிறார் கரீம். வேலை செய்யும் பண்ணைக்குப் புதிய தீக்கோழிகளை இறக்கிக் கொண்டிருக்கும்போது அதில் ஒரு கோழி தப்பி ஓடிவிடுகிறது. அதற்கு கரீமின் அலட்சியம் தான் காரணம் என்று காரணம் காட்டி அவரை வேலையை விட்டு நீக்குகின்றனர். அதன் பின் ஓரிரு தினங்களில் ஹனீயேவின் கருவியைச் சரி செய்ய விசாரிக்கலாம் என்று தெஹ்ரானுக்குச் செல்கிறார் கரீம். அங்கு கருவியை சரி செய்ய 350000 தோமான்கள் செலவாகும் என்று தெரிய வருகிறது. திரும்பி வரும்போது தெஹ்ரான் கடைத் தெருவில் அவரை 'வாடகைச் சவாரிக்கு மோட்டார் பைக் ஓட்டுபவர்' என்று ஒருவர் தவறாகப் புரிந்துகொண்டு பைக்கில் சவாரி ஏறி, அதற்காக பணம் கொடுக்கிறார். அதனால் அவர் மோட்டார் பைக்கில் வாடகைக்கு ஆட்களையும் பொருட்களையும் ஏற்றிச் செல்வதையே புதிய தொழிலாக்கிக் கொண்டு தினமும் நகரத்துக்கு வருகிறார்.

அப்போது அவர் சந்திக்கும் மனிதர்களும் நேரும் அனுபவங்களும் அவரது நேர்மையான, பெருந்தன்மையான குணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகின்றன.

நகரத்தில் பணக்காரர்கள் பார்த்தால் பணம் பொருள் எதுவும் கொடுப்பார்கள் என்பதற்காக அவர்களுக்குத் தெரிகிற மாதிரி சாலையில் நின்று தொழுகிறார். பணத்துக்காகப் பொய் கூறுதல், அதிக ஆசை, குறுக்கு வழியில் சிந்திப்பது என அவருடைய நற்குணங்களில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அவரது மனைவி மற்றும் மகளுக்கு வேதனையை அளிக்கின்றன. ஒரு நாள் கூரியர் கம்பெனி காரர்கள் கொடுத்தனுப்பிய ஒரு சிறிய ஃப்ரிட்ஜை திருட்டுத்தனமாக வீட்டுக்கு எடுத்து வந்துவிடுகிறார். நாளுக்கு நாள் பேராசை பெருக, நகரத்தில் தெருவிலும் குப்பைத் தொட்டியிலும் கிடக்கும் சில பொருட்களை பைக்கில் ஏற்றிக் கொண்டு வந்து வீட்டில் சேர்த்து சேர்த்து வைக்கிறார். பழைய கதவு, பழைய மின் சாதனப் பொருட்கள் போன்றவற்றை கிராமத்தில் குறைந்த விலைக்கு விற்கிறார். மகளின் காதுக் கருவியைப் பற்றி மறந்தும் போகிறார். இந்நிலையில் அவருடைய உறவினர்கள் அவருக்கு அறிவுரை கூறுகின்றனர்.

ஒரு நாள் வீட்டில் விற்பனைக்காகக் குவித்து வைத்திருக்கும் பழைய பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கும்போது அவை சரிந்து விழுந்து அவர் மேல் விழுந்துவிட கால் முறிந்து, வேறு சில காயங்களும் ஏற்படுகின்றன. இதனால் அவரால் வேலைக்குச் செல்ல முடியாமல் போகவே, அவரது பத்து வயது மகன் ஹுசைன் வேலைக்குப் போகத் துவங்குகிறான். வேலை பார்த்துக் கொண்டே ஹுசைன் தன் தன் நண்பர்களுடன் சேர்ந்து முன்னர் யோசித்து வைத்திருந்தது போல மீன் குஞ்சுககளை வாங்கி அந்தத் தொட்டியை சுத்தம் செய்து அதில் மீன் வளர்க்கின்றனர். பூச்செடிகளையும் வளர்க்கின்றனர். வளர்ந்த மீன்களையும் பூந்தொட்டிகளையும் நகரத்திற்கு எடுத்துச் சென்று விற்கின்றனர் சிறுவர்கள். கால் உடைந்த கரீமும் அவர்களுடன் செல்கிறார். ஒரு நாள் ஒரு பண்ணைக்குச் செடிகளை வழங்கச் செல்லும்போது அவர்கள் மீன் குஞ்சுகள் வாங்கி வைத்திருந்த பிளாஸ்டிக் பீப்பாய் ஒழுகத் தொடங்குகிறது. அதில் மீண்டும் நீர் நிறப்ப முயற்சி செய்கிறார்கள். ஆனாலும் அந்த பீப்பாய் உடைந்து மீன்கள் தரையில் சிந்துகின்றன. அவற்றை அப்படியே இறந்து போக விட்டுவிடாமல் ஹுசைன் அவற்றை அருகில் ஓடிக் கொண்டிருக்கும் நீரோட்டத்தில் தள்ளி விடுகின்றான். கரீம் இதனைக் கண்டு தன் மகன் மீது பெருமை கொள்கிறார். மீன்களை இழந்த ஹுசைனும் அவனுடைய நண்பர்களும் கவலையாக இருப்பதைக் கண்டு அவர்களின் மனதை மாற்ற பாடல் பாடுகிறார் கரீம். "உலகம் நிலையானதல்ல... உள்ளதை வைத்து மகிழ்ச்சியாக இரு" என்ற பொருளில் அமைகிறது அந்தப் பாடல்.

இறுதிக் காட்சியாக - கரீமின் உடல்நலம் சரியாகிக் கொண்டிருக்கும் போது அவருடன் முன்பு வேலை செய்த நண்பர் ஒருவர், பண்ணையில் தொலைந்து போன தீக்கோழி திரும்ப வந்துவிட்டது என்று கூறுகின்றார். அடுத்த காட்சியில் கரீம் பண்ணையில் அந்தத் தீக்கோழியை கண்ணீர் மல்கக் காண்கிறார் என்பதுடன் படம் நிறைவடைகிறது.

பல அடையாளங்களால் பல கருத்துக்களை உணர்த்துகிறார் இயக்குனர். கவனக் குறைவால் காணாமல் போன தீக்கோழி மனம் திரும்பும்போது திரும்பி வருகிறது என்பதன் மூலம் 'கவனச் சிதறலால் காணாமல் போகும் நல்ல குணங்கள் மனம் வருந்தும்போது திரும்ப வந்துவிடுகின்றன' என்பது அவ்வகை அடையாளக் கருத்துக்களில் ஒன்றாகும் எனக் கொள்ளலாம்.

விருதுகளும் பரிந்துரைகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]