திலிசான் தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 40°39′23″N 45°01′17″E / 40.65639°N 45.02139°E / 40.65639; 45.02139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலிசான் தேசியப் பூங்கா
Location the park in Armenia
Location the park in Armenia
ஆர்மீனியாவின் வரைபடம்
அமைவிடம்தவுசு மாகாணம்,  ஆர்மீனியா
ஆள்கூறுகள்40°39′23″N 45°01′17″E / 40.65639°N 45.02139°E / 40.65639; 45.02139
பரப்பளவு240 km2 (93 sq mi)
நிறுவப்பட்டது1958 ஆம் ஆண்டில் இயற்கைப் பாதுகாப்பு மண்டலமாகவும், 2002 ஆம் ஆண்டில் தேசிய பூங்காவாகவும் நிறுவப்பட்டது
நிருவாக அமைப்புஆர்மீனியாவின் தேசிய இயற்கை பாதுகாப்பு அமைச்சகம்

திலிசான் தேசியப் பூங்கா (Dilijan National Park) என்பது ஆர்மீனியாவில் உள்ள நான்கு தேசியப் பூங்காக்களுள் ஒன்றாகும்.  இந்தப் பூங்காவானது, ஆர்மீனியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தவுசு மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவின் பரப்பானது 240 சதுர கிலோமீட்டர் ஆகும்.[1] இந்தப் பூங்காவானது, இயற்கைக் காட்சி அமைப்பிற்கு வசதி வாய்ந்த நிலவடுக்கு முறைக்கும், விரிந்த உயிரிய பல்வகைத் தன்மைக்கும், மருத்துவக் குணமுள்ள நீரூற்றுகள், இயற்கை மற்றும் கலாச்சார நினைவகங்கள், மற்றும் நீளமான நடைபாதைகளின் வலைப்பின்னலுக்காகவும் புகழ் பெற்றதாகும்.

வரலாறு[தொகு]

திலிசான் தேசியப் பூங்கா மாநில இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதாகும். இந்த மாநில இயற்கைப் பாதுகாப்பு அமைப்பானது, 1958 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திலிசான் மற்றும் குய்பிசேவ் வனக்காப்பகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தேசிய பூங்காவின் நில எல்லைகளானவை மாற்றம் செய்யப்படாமல் தக்கவைக்கப்பட்டன.

திலிசான் மாநில காப்பகமானது தேசிய காப்பகம் அல்லது பூங்காவாக மாற்றம் அடைவதற்கு புறத்தே தெரிகின்ற காரணங்களாவன, அந்தப் பகுதியில் நடைெபறும் தவிர்க்க இயலாத வணிக நடவடிக்கைகள், திலிசான் நகரின் கனிம நீர் வளம் கொண்ட தங்குமிடங்கள் குறித்தான உடன்படிக்கை, இந்த நிலப்பகுதி முழுவதும் கடந்து செல்கின்ற ஏரேவான்-இஜிவான் இருப்புப்பாதை தடங்கள் தொடர்பான உடன்படிக்கை போன்றவைகளாகும். தற்பொழுது, இந்த தேசியப் பூங்காவின் பொதுத்திட்டமானது வளர்ச்சிக்கான திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சித் திட்டத்தின்படி, இந்த பூங்காவின் எல்லைகள் மறு வரையறை செய்தல், பொருளாதார, பொழுதுபோக்கு மற்றும் பாதுகாப்பு வளையங்களின் புற எல்லைகள் வரைபடத்தின் மூலம் மறுசீரமைப்பு செய்பப்படுதல் ஆகியவை நிலுவையில் உள்ளன.

2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கிடையில், இந்தப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுற்றுலாவிற்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை சீரமைப்பு செய்வது போன்ற குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

நிலவியல்[தொகு]

திலிசான், காக்கேசியாவின் மத்திய பகுதி

இந்த தேசியப் பூங்காவானது, பாம்பாக், ஏரிகனி, மியாபார், ஐஜீவன் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1070–2300 மீ உயரத்திலுள்ள அலாப் மலைத்தொடர்கள் ஆகியவற்றின் சரிவுகளில் அமைந்துள்ளது. இந்த உயரத்திற்கு அதிகமான உயரத்திலுள்ள மலைத்தொடரில் காணப்படும் புல்வெளிகள் இந்த தேசியப் பூங்காவிற்கு உட்பட்டதல்ல. ஆக்ஸ்டேவ் ஆறு மற்றும் அதன் துணையாறுகளான ஓவாஜூர், ஸ்டோகானாஜூர், பிடான், அகார்ட்சின் மற்றும் கெடிக் ஆகியவைகள் இந்த தேசிய பூங்காவினூடாக பாய்கின்றன. பார்ச் ஏரி, கோசி ஏரி, மற்றும் இட்ச்ர்காலிச் ஏரி மற்றும் இன்னும் சில சிறிய ஏரிகள் இந்தப் பூங்காவினுள் அமைந்துள்ளன.

காணப்படும் தாவர வகைகள்[தொகு]

இந்த தேசியப் பூங்காவில் 902 வகையான கலன்றாவர வகைத் தாவரங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் லைகோபோடியம் (1), குதிரை வால் வகைத் தாவரம் (1), பன்னம் வகைத் தாவரங்கள் (12), வித்துமூடியிலி வகைத் தாவரங்கள்(7), பூக்கும் தாவரங்கள் (881) ஆகியவை அடங்கும்.[2] இவற்றில் 40 க்கும் மேற்பட்டவை, இந்தப் பகுதியில் மட்டுமே காணப்படும் 40 அரிய வகைத் தாவரங்கள் ஆகும். மேலும், ஆர்மீனியாவின் அழிந்து வரும் தாவர இனங்களின் செம்பட்டியலில் காணப்படும் 20 அரிய வகைத் தாவரங்களும், சோவியத் ஒன்றியத்தின் செம்பட்டியலில் காணப்படும் 4 அரிய வகைத் தாவரங்களும் இவற்றுள் உள்ளடக்கமாகும்.

இந்தப் பூங்காவில் காணப்படும் தாவரங்களானவை மித வெப்ப மண்டலத்தில் வாழக்கூடிய காக்கேசியன் வகையைச் சார்ந்தவையாகும். இலையுதிர் வகை மரங்களான கருவாலி மரம், பீச் மரம், ஆர்ன்பீம் மரம் போன்றவை காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dilijan in Armenia". Archived from the original on 2018-10-25. பார்க்கப்பட்ட நாள் 2018-11-10.
  2. Khanjyan, N.S. Specially Protected Nature Areas of Armenia. Ministry of Nature Protection, 2004, Rep. Armenia. (downloadable from here பரணிடப்பட்டது 2007-12-16 at the வந்தவழி இயந்திரம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலிசான்_தேசியப்_பூங்கா&oldid=3558593" இலிருந்து மீள்விக்கப்பட்டது