திருவாவடுதுறைப் புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவாவடுதுறைப் புராணம் என்பது திருவாவடுதுறைத் தலத்தின் பெருமை கூறும் நூல். இந்நூலை இயற்றியவர் சாத்திரம் சாமிநாத முனிவர். இந்நூலுக்குத் துறைசைப் புராணம் என்ற வேறு பெயரும் உண்டு.

நூல் வரலாறு[தொகு]

திருக்கயிலாயத்தில் சதுரங்க விளையாட்டில் வெற்றி பெற்ற அம்பிகைக்குச் செருக்கு ஏற்பட்டது. அச்செருக்கை அடக்க பசு உருவம் தந்தார் சிவன். அப்பசு உரு நீங்கப்பெற்ற தலம் ஆவடுதுறை. ஆ+ அடு+ துறை, ஆ- பசு, அடு- நீங்கிய, துறை- இடம். இத்தல வரலாறு, திருமூலர், திருமாளிகைத் தேவர் வரலாறுகள் உட்பட பல செய்திகள் இப்புராண நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூல் ஓலைச் சுவடி திருவாவடுதுறை ஆதீனச் சரஸ்வதிமகால் நூலகத்தில் பாதுகாக்கப் பெற்றுள்ளது.

நூலமைப்பு[தொகு]

இந்நூல் அறுபத்தெட்டு அத்தியாயங்களைக் கொண்டது. இதனுள் 2560 செய்யுட்கள் உள்ளன. அநாதிமுத்திச் சேத்திர காண்டம், ஆவடுதுறைக் காண்டம், தியாகேசபுரக் காண்டம் எனும் மூன்று காண்டங்களை உடையது. முதற்காண்டத்தில் 26 அத்தியாயங்களும் இரண்டாவது காண்டத்தில் 10 அத்தியாயங்களும் மூன்றாவது காண்டத்தில் 32 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு காண்டத்தின் தொடக்கத்திலும் தோத்திரக்கவி அமைந்துள்ளது.

நூலாசிரியர் வரலாறு[தொகு]

இந்நூலாசிரியர் சாத்திரம் சாமிநாத முனிவர், திருவாவடுதுறை ஆதீனத்து தம்பிரான் சுவாமிகளுள் ஒருவர். ஆதீனத்து பத்தாவது குருமகா சன்னிதானமாகிய ஸ்ரீவேலப்ப தேசிகரிடத்து ஞானதீட்சையும், சைவ சந்நியாசமும் பெற்றவர். வடமொழி ஸ்காந்தத்தில் உள்ள உருத்திர சங்கிதையில் கோமுத்திச் சேத்திர மகாத்மியம் கூறப்பட்டுள்ளது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பே இப்புராணம். இவர் இந்நூல் மட்டுமின்றி 'திருப்பெருந்துறைப் புராணம்' என்ற நூலையும் இயற்றியுள்ளார். 1763 முதல் 1787 வரையில் தஞ்சையில் ஆட்சி செய்த துளசேந்திர மகாராஜாவின் விருப்பத்திற்கிணங்க திருப்பெருந்துறைப் புராணம் இயற்றியுள்ளார்.

உரைகள்[தொகு]

இந்நூல் சுவடியில் பாடல்கள் மட்டுமே உள்ளன. இப்புராண நூல் முதன்முதலாக வசன நூலாக ஆதீனத்து 21 ஆவது குருமகா சன்னிதானம் அவர்கள் அருளாட்சியில் வெளியிடப்பட்டது. 1961 ஆம் ஆண்டு ஆதீனத்தில் சுவாமி ஞானானந்தா துறைசைப் புராண வசனம் என்ற நூல் எழுதியுள்ளார். பாடல்களைப் பிரித்து எளிய நடையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையம் அடிக்குறிப்புகளுடன் 2005 இல் வெளியிட்டது. தற்போது ஆதீனப்புலவர் சு.குஞ்சிதபாதம் அவர்கள்' மெய்கண்டார்' எனும் ஆதீனத் திங்களிதழில் தொடர்ந்து துறைசைப் புராண நூல் பாடல்களுக்கு உரை எழுதி வருகின்றார்கள்.

உசாத்துணைகள்[தொகு]

  • முனைவர் வே. இரா. மாதவன், 'திருவாவடுதுறைப் புராணம்' உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
  • ஆன்மீகம் பலன் (தினகரன்) டிசம்பர் 1-15, 2016
  • எஸ். ஜெயசெல்வன், வேள்விக்குப் பொருள் ஈந்த வேதநாயகன் - பக். 90, 91