திருப்பரங்குன்றம் சமணக் குகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பரங்குன்றம் சமணக் குகைகள் அல்லது உமை ஆண்டார் கோயில், தமிழ்நாட்டின், மதுரை மாநகராட்சிப் பகுதியான திருப்பரங்குன்றம் மலையின் தென் பகுதியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சமண குடைவரையாகும். இக்குகைப் பகுதியில் மயில்களும், மந்திகளும் அதிக அளவில் காணப்படுகிறது.

வரலாறு[தொகு]

இக்குடைவரையானது கிமு முதல் நூற்றாண்டில் திகம்பர சமணத் துறவிகளுக்காக அமைக்கப்பட்டது. கிபி ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கம் வளர்ந்த நிலையில், சமணம் தளர்ச்சியடைந்து, சைவம் மற்றும் வைணவ சமயங்கள் வளர்ச்சியடைந்த போது, திருப்பரங்குன்றம் மலையின் தென் பகுதியில், கி.மு முதல் நூற்றாண்டில், முற்கால பாண்டியர்கள் காலத்தில் உருவான இச்சமணக் குடைவரையானது, கி.பி எட்டாம் நூற்றாண்டில், சமண – சைவ சமயப் பிணக்குகளின் போது, இச்சமணக் குடைவரை சிதைக்கப்பட்டு, உமை ஆண்டார் கோயிலாக மாற்றப்பட்டது. [1]

13ம் நூற்றாண்டின் பிற்கால பாண்டிய மன்னரான மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216-1238) ஆட்சிக் காலத்திய இக்குகையின் தமிழ் பிராமி கல்வெட்டுகள்[2], இச்சமணக் குகைகளை, சைவ சமயப் புரவலரான பிரசன்ன தேவன் என்பவர், சுந்தர பாண்டீஸ்வரர் கோயிலாக மாற்றி அமைத்தார் எனக் கூறுகிறது. [3]

உமை ஆண்டார் கோயில் அமைப்பு[தொகு]

கி.பி எட்டாம் நுற்றாண்டில் இக்குடைவரையின் உள் மைய மண்டபத்தின் நடுவில் நடராஜர் சிவகாமி சிற்பங்களும், அதன் மேல்புறத்தின் பக்கவாட்டுகளில் கணபதி மற்றும் முருகன் சிற்பங்களும், இடப்புறத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கும் சிற்பங்களும் உள்ளது. மேலும் குகையின் இடப்பக்கச் சுவரில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

குகையின் வலப்புற சிறிய இருட்டான குகையில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் தனியாக காணப்படுகிறது. குகையின் வெளிப்புற மலையில் இடப்புறத்தில் பைரவர் சிற்பமும், வலப்புறத்தில் சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் சிற்பங்களின் நடுவில் சைவ சமயப் புரவலரான பிரசன்ன தேவனின் சிற்பமும் உள்ளது. [4]

பழங்கால நினைவுச் சின்னம்[தொகு]

இந்தியத் தொல்லியல் ஆய்வகம், 1958ம் ஆண்டில் இச்சமணக் குகைகளை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நினைவுச் சின்னமாக அறிவித்து, பராமரித்து வருகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Untold History of Thenparankundram". Archived from the original on 2017-03-12. பார்க்கப்பட்ட நாள் 2017-10-09.
  2. திருப்பரங்குன்றம் தமிழிக் கல்வெட்டுக்கள்
  3. Serene messages in stone
  4. Umai Andar Cave Temple - Thiruparankundram, Tamil Nadu

வெளி இணைப்புகள்[தொகு]