திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் (Thirukodikaval Krishna Iyer, 1857-1913) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞராவார்.

இளமைக்காலம்[தொகு]

இவரது தகப்பனார் குப்புசுவாமி ஐயர் (பாகவதர்) இசைப் பேருரைகள் ஆற்றும் கலைஞர். கிருஷ்ண ஐயர் தொடக்கத்தில் தனது தந்தையாரிடம் இசை பயின்றார். பின்னர் கொடவாசல்[கு 1] வெங்கடராம ஐயரிடம் இசை கற்றுக்கொண்டார். வெங்கடராம ஐயர் தான வர்ணங்கள் இயற்றுவதில் வல்லவர்.[1]
கிருஷ்ண ஐயருக்குக் குரல் வளம் நன்றாக இருக்கவில்லை. ஆகவே, ஆசிரியர் அவரை வயலின் கற்றுக்கொள்ளுமாறு கூறினார்.
எனவே அவர் பிடில்[கு 2] சுப்பா ராயரிடம் வயலின் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். பின்னர் முத்துசுவாமி தீட்சிதர் சிஷ்ய பரம்பரையில் வந்த சாத்தூர் பஞ்சு ஐயரிடம் இசை கற்றார். இவருடன் கூட வீணை தனம்மாள், நாதசுவரம் வித்துவான் திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை ஆகியோரும் பஞ்சு ஐயரிடம் இசை பயின்றனர்.[2]

இசை அநுபவங்கள்[தொகு]

தொடக்கக் காலத்தில் மட்டுமன்றி பிற்காலத்திலும் கூட வயலின் வாத்தியத்தை கருநாடக இசைக்கு ஏற்றவாறு எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது பற்றி எந்நேரமும் அர்ப்பணிப்பு சிந்தையுடன் செயற்பட்டார்.
ஒவ்வொரு நாளும் சரளி வரிசை, தானம் என்பவற்றை சாதகம் செய்தார். மிகக் குறைந்த கதியில் தொடங்கி நான்கு ஸ்தாயிகளில் பயிற்சி செய்தார். அத்துடன் வில்லின் ஒரு அசைவிலே 4, 8, 16, 32 இசைக்குறிப்புகளை எழுப்ப பயிற்சி பெற்றார். ஒவ்வொரு நாளும் நான்கு வர்ணங்கள் வாசிப்பார்.
ஆயினும், வயலின் ஒரு பக்கவாத்திய இசைக் கருவி என்பதும் பிரதான பாடகரின் இசையை பிரகாசிக்கச் செய்வதே வயலின் வித்துவானின் கடமை என்ற நினைவும் அவருக்கு இருந்தது.
அவர் வயலின் வாசிக்கும்போது வெறுமனே இசைக்கோலங்கள் போடுவதில்லை. பாடகர் பாடும் ஒவ்வொரு சொல்லையும் திருப்பிச் சொல்வது போல் இருக்கும்.[2]

அரங்கிசை நிகழ்ச்சிகள்[தொகு]

அக்காலத்தின் பிரபல வித்துவான்களான மகா வைத்தியநாத ஐயர், பட்னம் சுப்பிரமணிய ஐயர் போன்றவர்களின் இசைக்கச்சேரிகளுக்கு வயலின் வாசித்துள்ளார்.[1]
ஒரு சமயம் திருமண வைபவம் ஒன்றின்போது கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரின் இசைக்கச்சேரிக்கு கிருஷ்ண ஐயர் வயலின் வாசித்தார். கும்பகோணம் அழகநம்பி பிள்ளை மிருதங்கம், புதுக்கோட்டை தட்சணாமூர்த்திப் பிள்ளை கஞ்சிரா, உமையாள்புரம் சுந்தரம் ஐயர் கடம் வாசித்தனர். கச்சேரி நான்கு மணி நேரம் நடைபெற்றது.
அச்சமயம் சிறுவனாக இருந்த அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் தனது தகப்பனாரான திருவேங்கடதையங்காருடன் வந்திருந்தார். பிரதான கச்சேரி முடிந்ததும் சிறுவனைப் பாட வைத்தனர். மிகப் பெரிய பக்க வாத்திய வித்துவான்களுக்கு மத்தியில் உட்காரப் பயந்து சிறுவன் இராமானுஜன் ஒரு ஓரமாக உட்கார்ந்தான். அச்சமயம் திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் சிறுவனை நோக்கி "முன்னுக்கு வா" என்று கூறினார். அவர் மேடையில் முன்னுக்கு வா என்ற கருத்தில் சொன்னாலும் அதுவே ஆசீர்வாதமாக அமைந்து பின்னாளில் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் மிகப் பெரும் இசைக் கலைஞரானார்.[2]

மாணாக்கர்கள்[தொகு]

செம்மங்குடி நாராயணசுவாமி ஐயர், திருக்கோடிக்காவல் இராமசுவாமி ஐயர் ஆகியோர் இவரது மாணாக்கர்கள் ஆவர். செம்மங்குடி சீனிவாச ஐயர் இவரின் மருகராவர்.[1]

அரச பணி[தொகு]

இவர் அக்கால அரச பதவியான கிராம முன்சீப் ஆக இருந்தார்.[1] ஆனால் அப்போதிருந்த வெள்ளைக்கார நிருவாக அதிகாரி இவர் இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதாகக் கூறி பதவியை பறித்துவிட்டார். ஆயினும் இவர் வாதாடி அந்த வேலையை தனது மகனுக்கு வாங்கிக் கொடுத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. குடவாசல் என்றும் சொல்லப்படுவதுண்டு. இது திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு பஞ்சாயத்து ஆகும்.
  2. வயலினை அக்காலத்தில் பிடில் (Fiddle) என்றே குறிப்பிட்டார்கள்.