தெய்வத் திருமணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்கல்யாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

தெய்வத் திருமணங்கள் என்பவை இறைவன் மற்றும் இறைவிக்கு நடக்கும் திருமணங்களாகும். இந்து சமயம், கிரேக்க சமயம் போன்றவற்றில் தெய்வங்களுக்குத் திருமணங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் இந்து சமயத்தில் தெய்வத் திருமணங்கள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றன. கிறித்துவம், இசுலாம் போன்றவற்றில் இவை போன்ற தெய்வத் திருமணங்கள் நடைபெறுவதில்லை.

இந்து சமயம்[தொகு]

இந்துத் தொன்மவியலின் அடிப்படையில் இந்து சமய கடவுள்கள் தம்பதிகளாக உள்ளனர். சிவபெருமான் - பார்வதி, திருமால் - திருமகள், முருகன் - வள்ளி, தெய்வானை, விநாயகர்- சித்தி புத்தி இவர்களது திருமணங்கள் தெய்வத் திருமணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்து சமயத்தில் திருக்கல்யாணம் என்ற பெயரில் தெய்வங்களுக்குத் திருமணங்கள் செய்விக்கும் திருவிழா நடைபெறுகிறது. திருமண வரம் வேண்டியும், இல்லறம் சிறக்கவும் இவ்வாறு இறைவனுக்கும் இறைவிக்கும் பக்தர்கள் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.

சைவ சமய திருக்கல்யாணங்கள்[தொகு]

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்[தொகு]

சைவ சமயக் கடவுளான சிவபெருமானுக்கும், மதுரை அரசியான மீனாட்சிக்கும் நடந்த திருக்கல்யாணம் சைவர்களின் திருக்கல்யாண விழாக்களில் பெரியதாகும். மீனாட்சி சுந்தரஸ்வரர் திருக்கல்யாணம் சுருக்கமாக மீனாட்சி திருக்கல்யாணம் என்று அழைக்கப்படுகிறது.

சிவபெருமான் சுந்தரேசுவரர் என்ற கோலத்தில் மதுரை அரசியான மீனாட்சியை திருமணம் செய்துகொண்டார். இந்நிகழ்வை நினைவு கூறும் விதமாகவும், பக்தர்களின் வேண்டிதலுக்காகவும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரைத் திருவிழாவின் போது நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் மொய் எழுதும் பழக்கமும் உள்ளது.

முருகனின் திருக்கல்யாணங்கள்[தொகு]

கௌமாரம் எனும் சமயத்தின் முழுமுதற் கடவுளான முருகப்பெருமானுக்கு வள்ளி மற்றும் தெய்வானை எனும் இரு மனைவிகள் உள்ளனர்.. எனவே வள்ளி - முருகன் திருக்கல்யாணம், தெய்வானை முருகன் திருக்கல்யாணம் என இரு திருக்கல்யாணங்களை முருக பக்தர்கள் நடத்துகின்றனர். முருகன் வள்ளி திருக்கல்யாணம் சுருக்கமாக வள்ளி திருக்கல்யாணம் என்றும், முருகன் தெய்வானை திருக்கல்யாணம் சுருக்கமாக தெய்வானை திருக்கல்யாணம் என்றும் அழைக்கப்படுகிறது. வள்ளி திருக்கல்யாணத்தினை வள்ளி குஹா பரிணயம் என வடமொழியில் அழைக்கின்றனர். [1]

தெய்வானை திருக்கல்யாணம் : முருகன் சூரன் எனும் அரக்கனை அழித்தார். இந்நிகழ்வு சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வெற்றிக்காக இந்திரன் தன்னுடைய மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். இத்திருக்கல்யாணம் திருப்பரங்குன்றத்தில் நடந்ததாக அத்திருத்தலத்தின் வரலாறு கூறுகிறது. திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

வள்ளி திருக்கல்யாணம் : முருகன் வள்ளி திருமணம் காதல் திருமணமாகும். குறவர்களின் மகளான வள்ளி, பருவம் எட்டியதும் தினைப் பயிரை காவல் காக்கச் சென்றார். அங்கு முருகன் வேடுவன் வேடமிட்டு வள்ளியுடன் காதல் புரிந்தார். இதனையறிந்த வள்ளியின் தந்தை நம்பிராஜன், படையெடுத்துவந்து முருகனுடன் போரிட்டு மடிந்தார். வள்ளியின் கோரிக்கையை ஏற்று மீண்டும் நம்பிராஜனுக்கு உயிர்தர, வள்ளி முருகன் திருக்கல்யாணம் நடந்தேறியது. [2]

வைணவ சமய திருக்கல்யாணங்கள்[தொகு]

சீனிவாச பத்மாவதி திருக்கல்யாணம்[தொகு]

சீனிவாச பத்மாவதி திருக்கல்யாணம் சுருக்கமாக சீனிவாச திருக்கல்யாணம் என்று அழைக்கப்படுகிறது.

சீதா ராமன் திருக்கல்யாணம்[தொகு]

சீதைக்கும் இராமனுக்கும் நடைபெறும் திருமணம் சீதா கல்யாணம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவில் பத்ராசல ராமதாசர், சீதா கல்யாணத்தை தான் நிறுவிய ஆலயத்தில் நிகழ்த்தினார். இன்றும், தினமும் அங்கு சீதா கல்யாணம் நடைபெறுகிறது.வைணவர்களின் இல்லங்களில் நடைபெறும் நற்செயல்களில் சீதா கல்யாண வைபோகமே என்னும் தியாகராசரின் கீர்த்தகை தவறாது இடம்பெறும். இதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று சடங்குப் பூர்வமாக திருமணம் நடத்தி வைப்பது. மற்றொன்று பஜனைப் பாடல்களாகத் திருமணச் சடங்குகளைச் செய்து வைப்பது. ராமநவமி உற்சவம் தொடங்கி அதன் நிறைவாகச் சீதா கல்யாணமும், பட்டாபிஷேகமும் செய்வது வழக்கம். [3]

பிற திருக்கல்யாணங்கள்[தொகு]

இவை மட்டுமன்றி காரைக்கால் அம்மையார் - பரமதத்தன், தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்- கலைவாணி திருக்கல்யாணங்கள் போன்றவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பங்குனி உத்திரம்[தொகு]

இந்த நாளில் எண்ணற்ற தெய்வத் திருமணங்கள் நடந்துள்ளன. இராமாயணக் காப்பியத்தின் அடிப்படையில் தசரத மகன்களான ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளை, பரதன்- மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி போன்றவர்களின் திருமணங்கள் இந்நாளில் நடந்தது. [4]

தெய்வத் திருமணக் கோயில்கள்[தொகு]

திருக்கடையூர்,திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமருகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளையார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங் குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங் காவு மற்றும் மணமுடிச்சநல்லூர், திருப்பாச் சேத்தி, திருவெண்காடு, திருவேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடைமருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழப்பாடி, திருப்பாலைத்துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளுர் சக்தி கோவில், திருமணமங்கலம் விசாலேஸ்வரன் கோவில், தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி இத்தலங்களில் தெய்வத் திருமணங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. [4]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. துவாரகாவில் ஸ்ரீ வள்ளி கல்யாணம் - புது தில்லி தினமணி - 27 பிப்ரவரி 2014
  2. வள்ளி திருமணம் நடந்தது எப்படி - தினமலர் கோயில்கள் தளம்
  3. 3. "திருமண வரமருளும் சீதா கல்யாண மகோத்சவம்... கல்பட்டில் கோலாகலம்!". https://www.vikatan.com/. 2020-04-29 அன்று பார்க்கப்பட்டது. External link in |website= (உதவி)
  4. 4.0 4.1 தெய்வத் திருமணங்கள் நடத்த பங்குத் திருநாள் - ஆர்.ராமதாஸ் - நக்கீரன் 19-3-2011[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வத்_திருமணங்கள்&oldid=3217132" இருந்து மீள்விக்கப்பட்டது