திரிஷ்யம் 2 (திரைப்படம்)
திரிஷ்யம் 2 | |
---|---|
இயக்கம் | ஜீது ஜோசப் |
தயாரிப்பு | ஆண்டனி பெரும்பாவூர் |
கதை | ஜீது ஜோசப் |
இசை | அனில் ஜான்சன் |
நடிப்பு | மோகன்லால் மீனா |
ஒளிப்பதிவு | சதீஸ் குருப் |
படத்தொகுப்பு | வி. எஸ். விநாயக் |
கலையகம் | ஆசிர்வாத் சினிமாஸ் |
விநியோகம் | பிரைம் வீடியோ |
வெளியீடு | பெப்ரவரி 19, 2021 |
ஓட்டம் | 153 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
த்ரிஷ்யம் 2: தி ரெஸ்யூஷன், அல்லது த்ரிஷ்யம் 2 என்பது ஜீது ஜோசப் எழுதி இயக்கிய மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் மூலம் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்த 2021 இந்திய மலையாள- மொழி நாடக திரில்லர் படம். இது ஜீது ஜோசப் இயக்கிய திரிஷ்யம் 2013 இல் வெளிவந்த திரிஷ்யம் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். [2] இப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா அசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்பட நிகழ்வுகள் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கதையாக உள்ளது. [3]
கதை
[தொகு]2014 ஆகஸ்ட் 3 காலை 2 மணிக்கு ஜோஸ் என்கிற கொலை குற்றவாளி காவல்துறையிடம் இருந்து ஓடிக்கொண்டிருக்கிறான். அப்போது கட்டுமானத்தில் இருக்கும் புது காவல் நிலையத்தின் பின்புறம் ஒளிந்து கொள்கிறான். அங்கு இருட்டில், ஜார்ஜ்குட்டி மண்வெட்டியுடன் அந்த கட்டிடத்தை விட்டு வெளியே செல்வதை அவன் பார்க்கிறான். பின்பு, ஜோஸ் அவன் வீட்டிற்கு செல்கிறான். அங்கு, அவன் மனைவி அவனிடம் பேச மறுத்துவிடுகிறாள். அவனை காவல்துறை கைது செய்துவிடுகிறது.
2020இல் ஜார்ஜ்குட்டி அதே ஊரில் திரையரங்கு உரிமையாளராகி, செல்வமாய் மனைவி மற்றும் மூத்த மகள் அஞ்சுவுடன் வாழுகிறான். மேலும் ஜார்ஜ்குட்டி திரைப்படம் எடுக்கவும் முயற்சிக்கிறான். அதனால் பல முறை எர்ணாகுளம் சென்று திரைத்துறை தொடர்பான நபர்களை சந்திக்கிறான், அதிகம் செலவழிகிறான் மற்றும் அவர்களுடன் மது அருந்துகிறான். இதனால், அவனுக்கும் அவன் மனைவி ராணிக்கும் சிறு சண்டைகள் எழுகின்றன. அவன் இளைய மகள் அனு தாங்கும் விடுதி கொண்ட ஒரு பள்ளியில் இறுதி ஆண்டில் கல்வி கற்கிறாள். அஞ்சு, முதுகலை கல்லூரி படிப்பு இறுதி ஆண்டில் இருக்கிறாள். 6 ஆண்டுகளுக்கு முன் நடந்த வருண் கொலை சம்பவங்களால் அவளுக்கு அடிக்கடி கால்-கை வலிப்புநோயால் அவதிப்படுகிறாள் . மேலும் மனதளவில் அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு கொண்ட நோயாளியாக இருக்கிறாள்.
தன் வீட்டிற்குள் அந்த சம்பவங்கள் குறித்து யாரும் பேசக்கூடாது என்று ஜார்ஜ்குட்டி தடை விதித்தமையால், யாரும் அதை பற்றி பேசாமல் வாழுகின்றனர். வருணின் சடலத்தை அவன் புதைத்த இடத்தை பற்றி ஜார்ஜ்குட்டி யாரிடமும் பேச மறுக்கிறான். இதனால், ராணியின் மனம் அழுத்தமடைகிறது. நியூ யார்க்கிலிருந்து இந்தியாவிற்கு வரும் வருணின் தந்தை பிரபாகர், ஜார்ஜ்குட்டியை சந்தித்து வருணின் உடல் உள்ள இடத்தை பற்றி ரகசியம் கேட்கிறார். அவர் வருணின் இறுதி சடங்குகளை செய்யவே கேட்பதாகவும் கூறுகிறார். வருணின் மரணத்திற்கு முழு பொறுப்பு தங்கள் வளர்ப்பே என்று ஒப்புக்கொள்கிறார் பிரபாகர். ஆனால், ஜார்ஜ்குட்டி அவரிடம் எதையும் கூற மறுத்துவிடுகிறான்.
ஓர் இரவு ஜார்ஜ்குட்டி எர்ணாகுளத்தில் இருக்கும் போது, ராணி சரிதையிடம் ஜார்ஜ்குட்டி வருணின் உடலை ஆகஸ்ட் 2ஆம் நாள் இரவே இடம் மாற்றிவிட்டான் என்று அறியாமல் கூறிவிடுகிறாள். அடுத்த நாள், அந்த ஊர் காவல் ஆய்வாளர், மண்டல காவல் பொது-ஆய்வாளர் தாமஸ் பாஸ்டியன் அலுவலகத்திற்கு அழைக்கப்படுகிறார். அங்கு, சாப்-சரிதை இணையர் காவலர்கள் என்றும், 2 ஆண்டுகளாக ஜார்ஜ்குட்டி வீட்டை உளவு பார்க்கவே அங்கு வசிக்கின்றனர் என்று விளக்குகிறார் பாஸ்டியன். பாஸ்டியன், முன்னாள் மண்டல காவல் பொது-ஆய்வாளர் கீதாவின் நண்பர் என்பதும் வெளிப்படுகிறது. மேலும், உடல் புதைக்கப்பட்ட தேதி கையில் கிடைத்து உள்ளதால், உடனே வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி கூறுகிறார்.
இந்நிலையில் ஜோஸ் சிறையிலிருந்து வெளியே வருகிறான். அவன் மனைவி அவனை ஏற்க மறுக்கிறாள். இந்நிலையில் அவனுக்கு காவல்துறையின் விசாரணை பற்றி தெரிய வருகிறது. 5 லட்சம் பரிசு பணம் கேட்டு பெறுகிறான் ஜோஸ். பின் ஜார்ஜ்குட்டி வருணின் பிணத்தை ஆகஸ்ட் 3ஆம் நாள் 2014 புது காவல் நிலையத்தில் புதைத்ததை பாஸ்டியனிடம் தெரிவிக்கிறான் ஜோஸ். கடும் ஆலோசனைக்கு பின் காவல் நிலைய தரை ரகசியமாய் தோண்டப்படுகிறது. ஒரே நாளில் வருணின் எலும்பு கூடு காவல்துறைக்கு கிடைக்கிறது. வருணின் உடல் கிடைத்ததால், ஜார்ஜ்குட்டியின் குடும்பத்தை அடுத்த நாள் விசாரணைக்கு அழைக்கின்றனர். அங்கு கீதாவின் மிரட்டலால், அஞ்சுவிற்கு வலிப்பு ஏற்படுகிறது. தன் குடும்பத்தை காக்க ஜார்ஜ்குட்டி தான் மட்டும் வருணை கொன்றதாகவும், அதற்கான சில ஆதாரங்களை இன்னும் மறைத்து வைத்துள்ளதாகவும் ஒப்புக்கொள்கிறான். வேறு வழி இல்லாமல், காவல்துறை முதலில் ஜார்ஜ்குட்டியை மட்டும் கைது செய்கின்றனர்.
நீதிமன்ற விசாரணை நடக்கும் முன், பாஸ்டியனை சந்திக்க வினையச்சந்திரன் எனும் திரைகதை-எழுத்தாளர் வருகிறார். அங்கு கீதா-பிரபாகர் இணையரும் உள்ளனர். ஜார்ஜ்குட்டி தன்னிடம் தற்போது நடக்கும் வருண் கொலை போன்று சமாச்சாரங்களை கொண்டு ஒரு கதையை கொண்டு வந்ததாக கூறுகிறார் வினையச்சந்திரன். காப்புரிமைக்காக அந்த கதையை வினையச்சந்திரன் பெயரில் புத்தகமாய் வெளியிட்டதையும் கூறுகிறார். ஆனால் அந்த புத்தகத்தில், தந்தை சரணடைவதாக கதை முடியும். ஜார்ஜ்குட்டி வேறு இறுதி முடிவை திரைப்படத்திற்கு யோசித்து தன்னிடம் கூறியதாக வினையச்சந்திரன் கூறுகிறார். அதே நேரத்தில், நீதிமன்றத்தில் ஜார்ஜ்குட்டி தனக்கு எதிரான புகார்களை மறுத்துவிடுகிறான். காவல்துறையின் மிரட்டலுக்கு பணிந்தே வாக்குமூலம் கொடுத்ததாக கூறிவிடுகிறான்.
உச்சக்கட்டத்தை எழுத, இடுக்கி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு எலும்புக்கூட்டில் போலீஸ் செய்யும் சட்ட நடைமுறைகளை வினையச்சந்திரனின் காவல் நண்பர் மூலம் ஜார்ஜ்க்குட்டி அறிந்துள்ளான் என வினையச்சந்திரன் கூறுகிறார். ஜார்ஜ்க்குட்டி கூறிய உச்சகட்டத்தை வினையச்சந்திரனின் கூறுகிறார்: உடலை 2014இல் மாற்றிய தந்தை, அந்த உடலில் உள்ள துணிகளையும் நகைகளையும் எடுத்து ரகசியமாய் வைக்கிறான். பின் அதே போல் தலையில் அடிபட்டு மரணம் அடைந்த அதே வயது இளைஞனுக்காக காத்திருக்கிறார். அப்படி ஒருவன் இறந்தவுடன், அவன் புதைக்கப்பட்ட இடத்திற்கு செல்லும் தந்தை அங்கு உள்ள வெட்டியானிடன் நட்பாய் பழகுகிறான். அவனுக்கு பல உதவி செய்து, அந்த இளைஞனின் எலும்பு கூட்டை பெறுகிறான். அதை தன்னிடம் பத்திரப்படுத்தி வைக்கிறான்.
இதே நேரத்தில், நீதிமன்றத்திற்கு உடற்கூறு ஆய்வின் அறிக்கை வருகிறது, அந்த அறிக்கையில், கிடைத்தது வருணின் உடல் இல்லை என்று இருக்கிறது. இதனால், மொத்த நீதிமன்றமும் காவல்துறையும் அதிர்ச்சி ஆகின்றனர்.
வினையச்சந்திரன் : பின்பு, இடுக்கி மாவட்ட அரசு மருத்துவமனை உடற்கூறாய்வு பிரிவு இரவு காவலாளியிடம் நட்பு வளர்கிறான் தந்தை. தந்தை 2014இல் புதைத்த உடல் காவல்துறைக்கு கிடைத்தவுடன், அதை உடற்கூறிற்காக அவர்கள் இடுக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்று வெய்துவிடுகின்றனர். சட்டப்படி உடற்கூறாய்வு அடுத்த நாள் திட்டமிட படுகிறது. அங்கு இரவில் செல்லும் தந்தை, காவலாளியுடன் சேர்ந்து மது குடிக்கிறான். இரவு காவலாளி போதையில் மயங்கியவுடன், கூறாய்வு அறையில் உள்ள எலும்புக்கூட்டைஎடுத்துவிட்டு, அதே பெட்டியில் தன்னிடம் உள்ள எலும்பு கூட்டை வெய்துவிடுகிறான். இதன் மூலம் அவன் வழக்கை விட்டு தப்பித்துக்கொள்கிறான்.
ஜார்ஜ்குட்டி தன் கதை உச்சகட்டத்தை வைத்து தப்பித்ததை பாஸ்டியன், கீதா மற்றும் பிரபாகர் புரிந்துகொள்கின்றனர். உடனே, வழக்கு நீதிபதி பாஸ்டியனை அவரின் நீதிமன்ற அறைக்கு அழைக்கிறார். நீதிமன்றம் ஜார்ஜ்குட்டியை சொந்த பிணையில் வெளியே விடுகிறது. ஜார்ஜ்குட்டி வெளியே செல்வதை பாஸ்டியன் கண்டு, தோல்வியால் நொந்துகொள்கிறார். பாஸ்டியன் நீதிபதியிடம் முழு கதையையும் கூறுகிறார். அவமானத்தை தவிர்க்க, இந்த வழக்கை கிடப்பில் போட்டுவிடும்படி நீதிபதி அறிவுறுத்துகிறார்.
வினையச்சந்திரன் கீதாவிடம், கதைக்கு மேலும் ஒரு பக்கம் உள்ளது என கூறுகிறார். தந்தை, அந்த எலும்புக்கூட்டை கரைத்து, சாம்பலை ரகசியமாய் அந்த நபரின் பெற்றோரிடம் ஒப்படைக்கிறார் என்பதே ஆகும். அதுபோலவே, 2 நாட்களில் ஜார்ஜ்குட்டி வருணின் சாம்பலை ரகசியமாய் இவர்களிடம் ஒப்படைகிறான்.
வருணின் இறுதி சடங்குகளை கீதா மற்றும் பிரபாகர் வன ஆற்றங்கரையில் செய்கின்றனர். அங்கு வரும் பாஸ்டியன், இந்த வன்மதை கைவிடும்படி கீதாவிடம் கோருகிறார். என்ன நடந்தாலும் தன் குடும்பத்தின் சுதந்திரத்தை காப்பதே குறிக்கோளாய் வாழும் ஜார்ஜ்குட்டியை வெல்வது இயலாத காரியம் என மூவரும் ஒப்புக்கொள்கின்றனர். ஜார்ஜ்குட்டி அடுத்த காவல்துறை தாக்குதலுக்காக என்றும் விழிப்பாய் இருக்க வேண்டும் என்பதாலேயே ஜார்ஜ்குட்டியின் சுதந்திரமான வாழ்வே அவனுக்கான கொடூரமான தண்டனை என்கிறார் பாஸ்டியன். மேலும், அடுத்த தாக்குதலை சமாளிக்க இப்போதே ஜார்ஜ்குட்டி திட்டம் போட்டுக்கொண்டிருப்பான் என்றும் கூறுகிறார் பாஸ்டியன். தொலைவில் மறைவாய் இருக்கும் இடத்தில் இதை கண்காணித்து கொண்டிருக்கும் ஜார்ஜ்குட்டி வீட்டிற்கு கிளம்புகிறான்.
நடிகர்கள்
[தொகு]- மோகன்லால் - ஜார்ஜ்குட்டி
- மீனா - ராணி, ஜார்ஜ் குட்டியின் மனைவி
- அன்சிபா அசன் - அஞ்சு, ஜார்ஜ்குட்டியின் மூத்த மகள்
- எஸ்தர் அனில் - அனுமொல், ஜார்ஜ்குட்டியின் இளைய மகள்
- ஆஷா சரத் - கீதா பிரபாகர், வருணின் அம்மா மற்றும் முன்னாள் காவலர்
- சித்திக்- பிரபாகர், வருணின் தந்தை மற்றும் கீதாவின் கணவர்
- முரளி கோபி - தாமஸ் பாஸ்டன் ஐபிஎஸ், புதிய காவல் அதிகாரி
- சாய்குமார் - வினையச்சந்திரன், திரைகதை எழுத்தாளர்
ஒலிப்பதிவு
[தொகு]திரைப்பட பின்னணி இசை மற்றும் பாடல்களை அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார். வினயக் சசிகுமாரின் பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் இசை ஆல்பத்தினை 10 பிப்ரவரி 2021 அன்று சைனா மியூசிக் வெளியிட்டது . [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Drishyam 2 (2021)". British Board of Film Classification. பார்க்கப்பட்ட நாள் 20 February 2021.
- ↑ Raghuvanshi, Aakanksha (21 May 2020). "Mohanlal, 60 Today, Confirms Drishyam 2 Is Happening. See His Tweet". NDTV. Archived from the original on 7 January 2021. பார்க்கப்பட்ட நாள் 9 June 2020.
- ↑ "Drishyam 2: Mohanlal Announces Sequel to Jeethu Joseph Film on Birthday". News18. 21 May 2020. Archived from the original on 7 January 2021. பார்க்கப்பட்ட நாள் 9 June 2020.
- ↑ Bhasin, Shriya (2021-02-17). "Drishyam 2 song Ore Pakal out: Mohanlal treats viewers with a melodious song from his upcoming thriller". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.