திரிபலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரிபலா (Triphala) என்பது இந்திய பாரம்பரிய [சித்த மருத்துவ]][1] மருந்துகளில் தலையானதாகக் கருதப்படுகிறது. இது ஒரு முழுமையான வேதிப்பொருளாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூலிகைகளான கடுக்காய் (Terminalia chebula), தான்றிக்காய் (Terminalia belerica), நெல்லிக்காய் (Emblica officinalis) ஆகிய மூன்றின் கலவை, முறையே 1 : 2 : 3 என்ற விகிதத்தில் [2] சேர்ந்த கலவையே, திரிபலா என்றழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவர்களால், பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சித்தமருத்துவர்களால், மனித உடலின் பித்தம், கபம், வாதம் போன்றவை சமன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.

தனித்தனி இயல்புகள்[தொகு]

கடுக்காய்[தொகு]

இதனை ஹரீதகி என்றும், பிராணதா என்றும் மருத்துவர்கள் அழைப்பார்கள். மேலும், விஜயா, அமிர்தா, காயஸ்தா, ஹேமவதி, பத்யா, சிவா என்ற பெயர்களும் உண்டு. அறுசுவையில் உப்பைத் தவிர, பிற ஐந்து சுவைகளும் கொண்டதாக உள்ளது. கடுக்காயின் விதைகள், நஞ்சு என்பதால், அவற்றை நீக்கிய பின்புதான் பயன்படுத்த வேண்டும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

தான்றி[தொகு]

தான்றிக்காயை, கர்ஷம், அக்ஷம் என்பர். இதன் அடிமரம் பத்து அடிகள் அகலமும், உச்சிப்பகுதி 120 அடி வரைகூட வளரும் இயல்புடையதால், மஹாவிருக்ஷமாகக் (உயரியத் தாவரம்) கருதப்படுகிறது. நுரையீரல் நோய்களுக்கு, பல முறைகளில் நோயாளிக்கு ஏற்ற வகையில், சித்தமருத்தவர்களால் மருந்தாகத் தரப்படுகிறது.

நெல்லிக்காய்[தொகு]

இதனை வயஸ்தா என்று அழைக்கின்றனர். வயஸ்தா என்று சொன்னால் மூப்படையாமல் காக்கச் செய்வது என்று பொருளாகும். இதற்குச் சிவா என்றும், பலம் என்றும், தாத்ரீ பலம், அமிர்தா என்றும் அழைப்பர். உப்புச்சுவை இல்லாதது. அதிக அளவில் வைட்டமின் சி, இதர ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன.

திரிபலா சூரணம்[தொகு]

மேற்கூறிய மூன்று இயற்கையான உலர்ந்த பொருட்களை சம அளவு எடுத்து, இடிப்பதினால் வரும் கூட்டு மாவுப் பொருளே திரிபலா சூரணம் ஆகும். இதனை சித்தமருத்துவத்தில் கூறப்படும் வெறுக்கடி அளவு எடுத்து, தேன் கலந்து உண்டால், இதன் பலன் இரட்டிப்பாகும் என சித்த மருத்துவர் கூறுகின்றனர்.

கிடைப்பதாகக் கூறப்படும் பயன்கள்[தொகு]

திரிபலா சூரணத்தை, ஒவ்வொரு நாளும் உண்டால், நமது நோய் எதிர்ப்புத் திறன் மேம்படும்.[3][4] வளர்சிதை மாற்றம் சீராகும். செரிமானம் சீராகும்.[2][5]குருதியின் சிறப்பியல்புகள் மேலோங்கும்.. கல்லீரல், நுரையீரலில் புண்கள் நீங்கும் தன்மை அதிகமாகும். மஞ்சள் காமாலை, ஈழை நோய் இருப்பவர்களுக்கு, உரிய ஊட்டத்தைத் தருகிறது. தோலின் அரிப்பு, கருமை, சிவப்புப் புள்ளிகளுக்கும், பாதத்தின் பித்த வெடிப்புகளுக்கும் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது.

மேற்கூறிய மருத்துவப்பயன்களிலும், இதன் தயாரிப்பிலும் மாறுபட்ட கருத்துக்கள், ஆயுர்வேத மருத்துவர்களிடம் திகழ்கிறது.[6]

வேதிக்கூறுகள்[தொகு]

இதிலுள்ள வேதிக்கூறுகள் இன்னும், சோதனைச்சாலையில் ஆயப்படவில்லை. எனினும், சில அடிப்படைத் தேவையான, மனித உடலுக்கு நன்மை பயக்கும், நல்ல வேதிப்பொருட்கள்(gallic acid, chebulagic acid, & chebulinic acid)[7][8] இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. திரிபலாவில் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் இருப்பதாக, எலிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் தெரியவருகிறது. எனினும், மனிதனிடத்தில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை.[7][9][10][11]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Anne McIntyre (7 September 2005). Herbal treatment of children: Western and Ayurvedic perspectives. Elsevier Health Sciences. பக். 278–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780750651745. https://books.google.com/books?id=QLin14nRVBsC&pg=PA278. பார்த்த நாள்: 24 July 2010. 
 2. 2.0 2.1 Ayurvedic pharmacopoeia committee. The Ayurvedic Formulary of India, Part I, 2nd English ed. New Delhi: Controller of Publications; 2003
 3. Juss SS. Triphala - the wonder drug. Indian Med Gaz 1997;131:94-6.
 4. Phetkate, Pratya; Kummalue, Tanawan; U-pratya, Yaowalak; Kietinun, Somboon. "Significant Increase in Cytotoxic T Lymphocytes and Natural Killer Cells by Triphala: A Clinical Phase I Study". Evidence-Based Complementary and Alternative Medicine 2012: 1–6. doi:10.1155/2012/239856. 
 5. Nadkarni AK. Indian Materia Medica. 3rd ed. Mumbai: Popular Press; 1976. p. 1308-15.
 6. Harbans Singh Puri (2003). Rasayana: ayurvedic herbs for longevity and rejuvenation. CRC Press. பக். 30–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415284899. https://books.google.com/books?id=aQh25X9mzjAC&pg=PA30. பார்த்த நாள்: 24 July 2010. 
 7. 7.0 7.1 "Kinetics and Docking Studies of a COX-2 Inhibitor Isolated from Terminalia bellerica Fruits". Protein Pept Lett 17 (10): 1251–7. May 2010. பப்மெட்:20441561. 
 8. Pawar V, Lahorkar P, Anantha Narayana DB. Development of a RP-HPLC method for analysis of Triphala curna and its applicability to test variations in Triphala curna preparations. Indian J Pharm Sci [serial online] 2009 [cited 2010 Aug 1];71:382-6. Available from: http://www.ijpsonline.com/text.asp?2009/71/4/382/57286
 9. "Effect of Terminalia chebula aqueous extract on oxidative stress and antioxidant status in the liver and kidney of young and aged rats". Cell Biochem. Funct. 27 (6): 358–63. August 2009. doi:10.1002/cbf.1581. பப்மெட்:19548245. 
 10. "Protection against radiation oxidative damage in mice by Triphala". Mutat. Res. 609 (1): 17–25. October 2006. doi:10.1016/j.mrgentox.2006.05.006. பப்மெட்:16860592. 
 11. "Effect of Triphala on oxidative stress and on cell-mediated immune response against noise stress in rats". Mol. Cell. Biochem. 283 (1-2): 67–74. February 2006. doi:10.1007/s11010-006-2271-0. பப்மெட்:16444587. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபலா&oldid=3404406" இருந்து மீள்விக்கப்பட்டது