திப்பு சுல்தான் அருங்காட்சியகம், சிறீரங்கப்பட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திப்பு சுல்தான் அருங்காட்சியகம், சிறீரங்கப்பட்டினம், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சிறீரங்கப்பட்டினம் எனுமிடத்தில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் அருங்காட்சியகம் ஆகும். இது தாரியா தௌலத் பாக் என்னும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால அரண்மனை ஒன்றில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையின் நிலத்தளத்தில் பெரும்பலும் திப்பு சுல்தானுடன் தொடர்புள்ள பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள், எண்ணெய் ஓவியங்கள், பென்சில் வரைபடங்கள், நாணயங்கள், பதக்கங்கள், ஆடை அணிகள், தளவாடங்கள், ஆயுதங்கள் என்பன அடங்குகின்றன.

"சிறீரங்கப்பட்டினத்துள் நுழைவு" என்னும் தலைப்பிட்டு சர் ராபர்ட் கெர் போர்ட்டர் (Robert Ker Porter) என்பவர் 1800 ஆம் ஆண்டில் வரைந்த எண்ணெய் ஓவியம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓவியம் ஆகும். சிறீரங்கப்பட்டினம் பிரித்தானியரிடம் விழுவதற்குமுன் இருந்த நிலையைப் படம்பிடித்துக் காட்டும் இந்த ஓவியத்தில், அக்காலத்து ஆங்கிலத் தளபதிகள் பலரும் இடம்பெற்றுள்ளனர். இந்த ஓவியத்தின் பின்னணியில், திப்பு சுல்தானின் அரண்மனையின் ஒரு பகுதியும், மசூதி ஒன்றின் மினார்களும், சிறீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் கோபுரமும் காணப்படுகின்றன. இது தவிர 1792 ஆம் ஆண்டில் ஜி. எஃப். செரி (G.F. Cherry) என்பவர் தீட்டிய திப்பு சுல்தானின் உருவப்படம் ஒன்றும், 1780 ஆம் ஆண்டில் ஜான் சாஃபானி (John Zoffany) என்பவர் வரைந்த திப்பு சுல்தானின் இளவரசுக் கால உருவப்படமும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. 18 பென்சில் வரைபடங்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை, திப்பு சுல்தானின் பிள்ளைகள், அவரது அமைச்சர்கள், தளபதிகள் போன்றோருடைய உருவப்படங்கள் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]