மினார்
மினார் (மசூதியின் கோபுரம்) என்பது, இஸ்லாமியரின் வணக்கத்தலமான பள்ளிவாசல்களில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். மினார்கள் பொதுவாக மிகவும் உயரமான கோபுர வடிவில் அமைந்தவை. இவை பள்ளிவாசலின் ஏனைய பகுதிகளிலும் உயரமாக அமைந்திருக்கக் காணலாம். மினார்கள் பள்ளிவாசல் கட்டிடத்துடன் இணைந்தோ அல்லது தனியாகவோ அமைந்திருக்கும்.
பயன்பாடு
[தொகு]மினார்களின் முக்கிய செயற்பாடு, தொழுகை நேரங்களில் இசுலாமியர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்கு வசதியான உயரமான இடமாகத் தொழிற்படுவதாகும். எனினும் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், நேரடியாக மினார்மீது ஏறித் தொழுகைக்கு அழைப்பதில்லை. ஒலிபெருக்கிகள் மட்டுமே மினார்கள்மீது பொருத்தப்படுகின்றன. அழைப்பவர் பெரும்பாலும் தொழுகை மண்டபத்திலிருந்தபடியே அழைப்பு விடுப்பார். இதனால் இன்றைய மினார்கள் செயற்பாட்டுத் தேவைகளுக்காகவன்றி, ஒரு மரபுவழி அடையாளமாகவும், அழகியல் அம்சமாகவுமே பயன்படுகின்றன.
தோற்றமும் வளர்ச்சியும்
[தொகு]ஆரம்பகாலப் பள்ளிவாசல்கள் மினார்களைக் கொண்டிருக்கவில்லை. இசுலாத்தின் முதல் தொழுகைகள் முகம்மது நபி அவர்களின் வீட்டிலேயே நடைபெற்றது. அக்காலங்களில் வீட்டுக்கூரையில் ஏறி நின்றே தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டது. முதலாவது மினார் முகமது நபியின் காலத்துக்கு சுமார் 80 ஆண்டுகளுக்குப் பின்னரே துனீசியப் பகுதியில் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. துனீசியாவின் கைருவான் நகரில், உக்பா மசூதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மினாரே இன்றும் நிலைத்திருக்கும் மினார்களில் மிகவும் பழையது.[1]
அமைப்பு
[தொகு]மினார்களில், அடி, நடுப்பகுதி, மாடம் என மூன்று பகுதிகள் உண்டு.[2] பல வடிவங்களில் உள்ளன. சதுரம், வட்டம், எண்கோணம் ஆகிய வடிவங்களில் வெட்டுமுகங்களை உடைய மினார்களே அதிகம் காணப்படுவன. ஈராக்கின் சாமரா (Samarra) என்னும் நகரிலுள்ள, ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய பள்ளிவாசல் கூம்பு வடிவில் அதன் வெளிப்புறத்தில் மேலே ஏறுவதற்கான சுருள் வடிவப் படி அமைப்புடன் அமைந்துள்ளது.