தர்கியா புள்ளிக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்கியா புள்ளிக்குருவி (அறிவியல் பெயர்: Jynx torquilla torquilla) என்பது ஐரோவாசிய புள்ளிக்குருவியின் துணையினம் ஆகும்.[1]

விளக்கம்[தொகு]

தர்கியா புள்ளிக்குருவியானது கொண்டைக்குருவியை விடச் சற்றுச் சிறியதாக சுமார் 18 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு, விழிப்படலம், கால்கள் ஆகியவை எல்லாம் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் உடலின் மேற்பகுதியானது கருஞ்சாம்பல் நிறமாக இருக்கும், அதில் பழுப்பு நிறப்பட்டைகளோடும் மென் கோடுகளோடும் காட்டியளிக்கும். இதன் பிடரியில் இருந்து கரும் பட்டைக் கோடுகள் இருபுறமும் முதுகு நோக்கிச் செல்லும். கண்ணின் வழியாக ஒரு பழுப்புக்கோடு பின்னோக்கிச் செல்லக் காண இயலும். அதற்கு மேல் ஒரு சிறு வெள்ளைக்கோடும் காணப்படும். இறக்கைப் போர்வை இறகுகுகளின் மேல் வெண் புள்ளிகளும் பழுப்புக் கறைகளும் காணலாம். மோவாய், தொண்டை ஆகியன ஆழ்ந்த வெளிர் மஞ்சளாக நெருக்கமான சிறு கறுப்புப் பட்டைகளோடு காணப்படும். மார்பும், வயிறும் சிவப்புத் தோய்ந்த மஞ்சள் நிறமான வெண்மையாக இருக்கும். மார்பில் பழுப்புப் பட்டைகளோடு காட்சியளிக்கும். ஆணுக்கும் பெண்ணுக்கும் உருவ வேறுபாடு குறிப்பிடத்தகதாக இல்லை.[2]

பரவலும் வாழிடமும்[தொகு]

தர்கியா புள்ளிக்குருவியானது ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்கிறது. அங்கிருந்து குளிர்காலத்தில் இந்தியா போன்ற நாடுகளுக்கு வலசை வருகிறது. இவை தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் சார்ந்த கேரளப் பகுதிகளில் காணப்பட்ட குறிப்புகள் உண்டு.[2]

நடத்தை[தொகு]

வலசை வரும் இப்பறவைகள் தனித்தோ இணையாகவோ திரியக்கூடியன. மரங்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்தவை என்றாலும் இவை தரையிலும் இரைதேடக்கூடியன. மரங்களில் இரை தேடும்போது மரங்கொத்திகளைப் போல கிளைகளில் நெடுக்குவாக்கில் தொங்குவதோடு, குருவிகளைப் போலக் குறுக்குவாக்கில் சிறிசிமிர்களில் அமர்ந்திருக்க காண இயலும். மரப்பட்டைகளிடையே உள்ள புழுபூச்சிகள், எறும்புகள் ஆகியவற்றை பிடித்தாலும் மரங்கொத்தியைப் போல அலகால் மரத்தை தட்டும் பழக்கம் இல்லாதது. தரையில் இரை தேடும்போது கரிக்குருவியைப் போல வாலை நிமிர்த்திக் கொள்ளும். எறும்புகளும், எறும்பு முட்டைகளுமே இதன் முதன்மை உணவாகும்.[2]

இவை ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்பவை. அங்கு மரப் பொந்துகளில் இவை கூடு கட்டுகின்றன. மே மற்றும் சூன் மாதங்களில் ஏழு முதல் பத்து வரையில் வெள்ளை முட்டைகளை இடுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lepage, Denis. "Eurasian Wryneck (Jynx torquilla) Linnaeus, 1758". Avibase. பார்க்கப்பட்ட நாள் 2013-08-06.
  2. 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 318-319. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்கியா_புள்ளிக்குருவி&oldid=3789578" இலிருந்து மீள்விக்கப்பட்டது