உள்ளடக்கத்துக்குச் செல்

தகர-மினுக்கமூட்டிய மட்பாண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இத்தாலியில் உள்ள ஃப்யேன்சாவில் இருந்து எடுக்கபட்ட தகர-மினுக்கமூட்டிய தட்டு ஒன்று.

தகர-மினுக்கமூட்டிய மட்பாண்டம் (tin-glazed pottery) என்பது, தகர ஒட்சைட்டு அடங்கிய வெண்ணிறமான, மினுக்கம் கொண்ட ஒளிபுகாப் பூச்சினால் மூடப்பட்ட மட்பாண்டம் ஆகும். இம் மட்பாண்டங்களின் உள்ளுடல் பொதுவாகச் சிவப்பு அல்லது மண்ணிறமான களிமண்ணால் ஆனது. சீன வெண்களிப் பாண்டங்களைப் போல் தோன்றுவதற்காக இதன்மேல் வெண்ணிற மினுக்கப் பூச்சுப் பூசப்படுகின்றது. தகர-மினுக்கமூட்டிய மட்பாண்டங்கள் பெரும்பாலும் அழகூட்டப்படுகின்றன. சூளையில் இடாத, முனுக்கமூட்டிய மேற்பரப்பில், உலோக ஆக்சைட்டுக்களைப் பயன்படுத்தித் தூரிகையால் வரைந்து அழகூட்டப்படுகின்றது. கோபால்ட் ஆக்சைட்டு, செப்பு ஆக்சைட்டு, இரும்பு ஆக்சைட்டு, மாங்கனீசு ஈராக்சைட்டு, ஆன்டிமனி ஆக்சைட்டு என்பன இதற்குப் பயன்படுகின்றன. பிந்திய மறுமலர்ச்சிக் காலப் பகுதியில் இருந்து, இத்தாலிய தகர-மினுக்கமூட்டிய மட்பாண்டங்களைச் செய்வோர், பல உலோக ஆக்சைட்டுக்களைக் கலந்து இயல்பான பலவண்ண ஓவியங்களை இவற்றின்மீது வரைந்தனர்.

தகர-மினுக்கமூட்டிய மட்பாண்டம் முதலில் மெசொப்பொத்தேமியாவிலேயே தோன்றியதாகத் தெரிகிறது. கிபி ஒன்பதாம் நூற்றாண்டளவில் தோன்றியதாகக் கருதப்படும் இம் மட்பாண்டங்களின் மிகப் பழைய உடைந்த துண்டுகள் முதலாம் உலகப் போர்க் காலத்தில், ஈராக்கின் பாக்தாத்தில் இருந்து 50 மைல்கள் தொலைவில் உள்ள சமாரா மாளிகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. மெசொப்பொத்தேமியாவில் இருந்து இது எகிப்து, பாரசீகம், எசுப்பெயின் முதலிய நாடுகளுக்குப் பரவி அங்கிருந்து மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலிக்குப் பரவியது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளுக்கும், அதற்குச் சற்றுப் பின்னர் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் இது அறிமுகமானது.

18 ஆம் நூற்றாண்டில் சோசியா வெட்ச்வூட் (Josiah Wedgwood) வெண்ணிற மட்பாண்டப் பொருள் ஒன்றை உருவாக்கினார். இதிலிருந்து நிறை குறைந்ததும், நீடித்து உழைக்கக்கூடியதுமான பாண்டங்களைத் தயாரிக்க முடிந்தது. இது, தகர-மினுக்கமூட்டிய மட்பாண்டங்களைப் போன்ற அளவுக்கு வெண்ணிறமாகவும், வேறு பல அம்சங்களில் சிறந்ததாகவும் இருந்ததால் 19 ஆம் நூற்றாண்டில் தகர-மினுக்கமூட்டிய மட்பாண்டங்களுக்குப் பதில் இதன் பயன்பாடு அதிகரித்தது.

20 ஆம் நூற்றாண்டில் சில கலைக்கூட வனைஞர்களின் முயற்சியால் தகர-மினுக்கமூட்டிய மட்பாண்டம் ஓரளவு மறுமலர்ச்சி அடைந்தது. புகழ் பெற்ற ஓவியரான பிக்காசோ 40களிலும், 50களிலும் இதனைப் பயன்படுத்தி ஆக்கங்களைச் செய்தார்.