தகட்டு உலோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகட்டு உலோகம் என்பது, தொழிற்றுறை வழிமுறைகள் மூலம் மெல்லிய, தட்டையான துண்டுகளாக்கப்பட்ட உலோகம் ஆகும். இது உலோகவேலையில் பயன்படுகின்ற ஒரு அடிப்படையான உலோக வடிவம் ஆகும். வெட்டியும், வளைத்தும் பலவிதமான வடிவங்களாக இதை உருவாக்க முடியும். தகட்டு உலோகங்களைப் பயன்படுத்தி ஏராளமான அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. உலோகத் தகடுகள் பல்வேறுபட்ட தடிப்புக்களைக் கொண்டவையாக இருக்கலாம். மிக மெல்லிய உலோகத் தகடுகளை உலோகத் தாள் அல்லது உலோகப் படலம் என்றும் 6 மில்லிமீட்டருக்கு (0.25 அங்குலம்) மேற்பட்ட தடிப்புக்களைக் கொண்ட தகடுகளைத் தட்டு என்றும் அழைப்பர். உலோகத் தகடுகள் குறிப்பிட்ட அளவுகளைக் கொண்ட தட்டையான துண்டுகளாகவோ அல்லது சுருள் வடிவமாகவோ கிடைக்கின்றன.

உலோகத் தகடுகளின் தடிப்பை ஒரு நீள அலகு அல்லாத "கேஜ்" என்னும் அளவால் குறிப்பிடுவது உண்டு. தடிப்புக் கூடும்போது "கேஜ்" எண் அளவு குறைகின்றது. எடுத்துக்காட்டாக 10 "கேஜ்" தகட்டின் தடிப்பு 20 "கேஜ்" தகட்டின் தடிப்பிலும் அதிகமாக இருக்கும். பொதுவான பயன்பட்டில் உள்ள எஃகுத் தகடுகள் 30 தொடக்கம் 8 வரையான கேஜ் அளவு கொண்டவை. இரும்பை அடிப்படையாகக் கொண்ட உலோகத் தகடுகளுக்கும், அலுமினியம், செப்பு போன்ற இரும்பை அடிப்படையாகக் கொள்ளாத உலோகத் தகடுகளுக்கும் இடையே கேஜ் அளவுகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகட்டு_உலோகம்&oldid=3889080" இலிருந்து மீள்விக்கப்பட்டது