ஜோசப் லிஸ்டர்
ஜோசப் லிஸ்டர், முதலாம் பேரன் லிஸ்டர் | |
---|---|
புகைப்படம் (1902) | |
பிறப்பு | அப்ட்டான், எஸ்ஸெக்ஸ் | 5 ஏப்ரல் 1827
இறப்பு | 10 பெப்ரவரி 1912 வால்மர், நெட் | (அகவை 84)
தேசியம் | பிரித்தானியா |
துறை | மருந்தியல் |
பணியிடங்கள் | கிளாஸ்கோ பல்கலைக் கழகம் எடின்பர்க் பல்கலைக் கழகம் லண்டன் பல்கலைக் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | லண்டன் பல்கலைக் கழகம் |
அறியப்படுவது | அறுவை மருத்துவம் நோய் நுண்மத்தடை தொழில்நுட்பம் |
கையொப்பம் |
ஜோசப் லிஸ்டர் (Joseph Lister) 5 ஏப்ரல் 1827 முதல் 10 பிப்ரவரி 1912 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த [1] அறுவை சிகிச்சையில் நோய் நுண்மத்தடை (Antiseptic) முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டு பிடித்த பிரித்தானிய அறுவை சிகிச்சை வல்லுநர் ஆவார்.[2] விக்டோரியா அரசியாரின் சொந்த மருத்துவராகப் பணிபுரிந்தவர். அறுவை சிகிச்சைக்காகப் பயன் படுத்தும் மருத்துவக் கருவிகளைக் கொதிக்க வைப்பதன் மூலம் நோய் நுண்மம்ங்களை ஒழிக்க முடியும் எனக் கண்டறிந்தவர். தற்போது 'பினாயில்' என்றழைக்கப்படும் கார்போலிக் அமிலத்தினால் காயங்களில் உள்ள நோய்க் கிருமிகளைத் தடை செய்ய முடியும் எனவும் கருவிகளைச் சுத்திகரிக்க முடியும் எனவும் கண்டறிந்த அறிவியலாளர் ஆவார்.
இளமை
[தொகு]ஜோசப் லிஸ்டர் இங்கிலாந்தில் உள்ள அப்ட்டன் என்னும் ஊரில் 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் நாள் பிறந்தார். தந்தை ஜோசப் ஜாக்சன் லிஸ்டர். இவர் நவீன உருப்பெருக்கியை உருவாக்கியவர்.தாயார் இசபெல்லா.ஜோசப் லிஸ்டர் லண்டனிலுள்ள பல்கலைக் கழகக் கல்லூரியில் கல்வி பயின்றார். மிகச் சிறந்த மாணவராகத் திகழ்ந்த இவர் 1852 ஆம் ஆண்டில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். 'கிளாஸ்கோ தேசிய மருத்துவ மனையில்' 1861 ஆம் ஆண்டில் இவர் ஒரு அறுவை மருத்துவராகச் சேர்ந்தார். அங்கு எட்டு ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்தார். இந்தப் பணிக் காலத்தின் போது தான் நோய்நுண்மத் தடை அறுவை சிகிச்சை முறையை இவர் கண்டு பிடித்தார்.
நோய் நுண்மத் தடுப்புப்பணிகள்
[தொகு]கிளாஸ்கோ தேசிய மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை பிரிவுக்கு லிஸ்டர் பொறுப்பாளராக இருந்தார். அங்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏராளமான் நோயாளிகள் மாண்டு போவது கண்டு இவர் வருந்தினார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு இழைய அழுகல் போன்ற கொடிய நோய்கள் பெரும்பாலும் பீடிப்பதை இவர் கண்டார். லிஸ்டர் தமது பகுதியை மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள முயன்றார். எனினும் அதிக இறப்பு வீதத்தை இது தடுக்கவில்லை. மருத்துவமனையைச் சுற்றிலும் எழும் புழுக்க நச்சு ஆவிகள் தாம் (microbes) இந்தத் தொற்று நோய் களுக்குக் காரணம் என்று பல மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் இந்த விளக்கம் லிஸ்டருக்கு மன நிறைவு அளிக்கவில்லை.
1865 ஆம் ஆண்டில் லூயி பாஸ்டர் எழுதிய ஆய்வுக் கட்டுரையொன்றை லிஸ்டர் படித்தார். அக்கட்டுரையிலிருந்து நோய் நுண்மம் பற்றிய கோட்பாட்டை அறிந்துகொண்டார். அதிலிருந்து லிஸ்டருக்கு ஒரு முக்கியமான எண்ணம் உதித்தது. நோய் நுண்மங்களினால் தொற்று நோய்கள் உண்டாகின்றன எனில், திறந்த புண்களினால் நோய் நுண்மங்கள் நுழைவதற்கு முன்பாக அவற்றை அழித்துவிடுவதுதான் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கு சிறந்த வழி என லிஸ்டர் கருதினார்.
நோய் நுண்மக் கொல்லி மருந்தாகக் கார்பாலிக் அமிலத்தைப் பயன்படுத்தி நோய்நுண்மத் தடுப்பு முறைகளின் புதிய தொகுதியொன்றை லிஸ்டர் வகுத்தார். இதன்படி ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு முன்பும் அவர் தமது கைகளைத் தூய்மையாகக் கழுவிக்கொண்டார். அது மட்டுமின்றி, அறுவைச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கருவிகளும், கட்டுத்துணிகளும் கூட முற்றிலும் தூய்மையாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார். அறுவை சிகிச்சை அறையில் சிறிது நேரம் கார்பாலிக் அமிலத்தைத் தெளித்து வைக்கவும் செய்தார். இந்த முறைகளினால், அறுவை சிகிச்சைக்குப்பிறகு மரணங்கள் வெகுவாகக் குறைந்தன. ஆண்களுக்கான விபத்துப் பிரிவின் 1861-1865 -ல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 45% க்கு இருந்த இறப்போர் அளவு, 1869 -ல் 15% அளவுக்குக் குறைந்தது.
ஆய்வு
[தொகு]நோய் நுண்மத்தடை அறுவை சிகிச்சைபற்றிய லிஸ்டரின் முதலாவது முக்கிய ஆய்வுக்கட்டுரை 1867 ஆம் ஆண்டில் வெளியானது. இதுபற்றிய கருத்துகள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனினும் 1869 ஆம் ஆண்டின் எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் அறுவை சிகிச்சைப்பிரிவின் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. அந்தப் பதவியில் இவர் பணியாற்றிய 7 ஆண்டுகளில் இவருடைய புகழ் பரவியது. 1875 ஆம் ஆண்டில் இவர் ஜெர்மனியில் சுற்றுப் பயணம் செய்து தமது கொள்கைகள் குறித்தும், முறைகள் குறித்தும் சொற்பொழிவுகள் ஆற்றினார். அதற்கு அடுத்த ஆண்டில் அமெரிக்கவிலும் இவர் இதே போன்ற சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டார். எனினும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு இவருடைய முறையில் நம்பிக்கை ஏற்படவில்லை. 1877 ஆம் ஆண்டில் லண்டனிலுள்ள 'அரசர் கல்லூரியில்' அறுவைச் சிகிச்சைத் துறையின் தலைவராகப் பதவியில் நியமிக்கப்பட்டார். இப்பதவியை இவர் 15 ஆண்டுகள் வகித்தார். அப்போது இவர் லண்டனில் தமது நோய் நுண்மத்தடை அறுவை சிகிச்சை முறைக்குப் பலமுறை செயல் விளக்கம் செய்து காட்டினார். அதன் பின்னர் இவருடைய முறையில் மருத்துவர்கள் ஆர்வம் காட்டினர். இவருடைய கொள்கைகள் மேன்மேலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. லிஸ்டரின் வாழ்நாள்களிலேயே அவருடைய நுண்மத்தடை அறுவை சிகிச்சை முறையினை உலகெங்குமுள்ள மருத்துவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
சிறப்புகள்
[தொகு]லிஸ்டரின் கண்டுபிடிப்புகள் அறுவை சிகிச்சைத் துறையில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தின. லிஸ்டர் தமது தலை சிறந்த பணிக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றார். இவர் வேந்திய அறிவியல் கழகத்தின் (Royal society) தலைவராக 5 ஆண்டுகள் பணியாற்றினார். விக்டோரியா அரசியாரின் சொந்த மருத்துவராகவும் பணி புரிந்தார். இவர் திருமணம் புரிந்து கொண்டார்; ஆனால் குழந்தைகள் இல்லை. 85 வயது வரை வாழ்ந்த லிஸ்டர் இங்கிலாந்திலுள்ள வால்மர் நகரில் 1912 -ஆம் ஆண்டில் காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cartwright 2023.
- ↑ Simmons 2002, ப. 94–99.
வெளி இணைப்புகள்
[தொகு]- குட்டன்பேர்க் திட்டத்தில் Joseph Lister இன் படைப்புகள்
- குட்டன்பேர்க் திட்டத்தில் Lord Lister இன் படைப்புகள்
- ஆக்கங்கள் Joseph Lister இணைய ஆவணகத்தில்
- Works by ஜோசப் லிஸ்டர் at LibriVox (public domain audiobooks)
- The Lister Institute
- Collection of portraits of Lister at the National Portrait Gallery, London
- Statue of Sir Joseph Lister by Louis Linck at The International Museum of Surgical Science in Chicago