ஜோசப் பாறேக்காட்டில்
| மேதகு (மார்) ஜோசப் பாறேக்காட்டில் Joseph Parecattil | |
|---|---|
| எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் மறைமாநிலத் தலைமைப் பேராயர்; அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் கர்தினால்-குரு | |
| சபை | கத்தோலிக்க திருச்சபை- சீரோ-மலபார் வழிபாட்டுமுறை |
| உயர் மறைமாவட்டம் | எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் மறைமாநிலம் |
| முன்னிருந்தவர் | மார் அகஸ்தீன் கண்டத்தில் |
| பின்வந்தவர் | மார் அந்தோனி படியற |
| பிற பதவிகள் | - எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத் துணை ஆயர் (1953-1956) |
| திருப்பட்டங்கள் | |
| குருத்துவத் திருநிலைப்பாடு | ஆகத்து 24, 1939 ஆயர் தோமாஸ் சாக்கியாத்-ஆல் |
| ஆயர்நிலை திருப்பொழிவு | நவம்பர் 30, 1953 கர்தினால் யூஜின் திஸ்ஸரான்-ஆல் |
| கர்தினாலாக உயர்த்தப்பட்டது | ஏப்பிரல் 28, 1969 |
| கர்தினால் குழாம் அணி | எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் மறைமாவட்டப் பேராயர்; அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் கர்தினால்-குரு |
| பிற தகவல்கள் | |
| இயற்பெயர் | ஜோசப் |
| பிறப்பு | 1 ஏப்ரல் 1912 கிடங்கூர், எர்ணாகுளம், கேரளம் |
| இறப்பு | பெப்ரவரி 20, 1987 (அகவை 74) கொச்சி, கேரளம், இந்தியா |
| கல்லறை | புனித மரியா பேராலயம், எர்ணாகுளம் உயர்மறைமாவட்டம் |
| குடியுரிமை | இந்தியன் |
| சமயம் | கத்தோலிக்க திருச்சபை- சீரோ-மலபார் வழிபாட்டுமுறை |
| குறிக்கோளுரை | Da Quod Jubes "நீர் கட்டளையிடுவதை எனக்குக் கொடும்" |
கர்தினால் ஜோசப் பாறேக்காட்டில் (Joseph Cardinal Parecattil) (பிறப்பு: ஏப்பிரல் 1, 1912 - இறப்பு: பெப்ருவரி 20, 1987) என்பவர் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த ஒரு இந்திய கர்தினால் ஆவார்.[1] இவர் இந்திய கத்தோலிக்க திருச்சபையில் நிலவுகின்ற சீரோ-மலபார் வழிபாட்டுமுறை சபையின் உயர் பேராயராகப் பணிபுரிந்து அதன் தலைமைப் பதவியை வகித்தார்.[2] அச்சபையினர் இவரை மார் ஜோசப் பாறேக்காட்டில் என அழைப்பர்.
இவர் கேரளத்தில் எர்ணாகுளம் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக 1956இலிருந்து 1987 வரை பணிபுரிந்தார். திருத்தந்தை ஆறாம் பவுல் இவருக்கு 1969இல் கர்தினால் பட்டம் வழங்கினார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]ஜோசப் பாறேக்காட்டில் கேரளத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தைச் சார்ந்த கிடங்கூர் என்னும் ஊரில் 1912, ஏப்பிரல் முதல் நாள் பிறந்தார். எர்ணாகுளம் இளங்குருமடத்திலும் பின்னர் இலங்கை கண்டி திருத்தந்தை பெரிய குருமடத்திலும் மெய்யியல் மற்றும் இறையியல் பயின்றார். கண்டியில் இறையியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஆய்வு ஏடு "இறையருள் பற்றி அகுஸ்தீன் பெலாஜியுசுக்கு எதிராக வழங்கிய போதனை" என்னும் பொருள் குறித்து அமைந்தது.
அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளியல் பயின்று தேர்ச்சிபெற்றார்.
குருப்பட்டம்
[தொகு]பாறேக்காட்டில் 1939, ஆகத்து 24ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் எர்ணாகுளம் உயர்மறைமாவட்டத்தின் பல பங்குகளில் குருத்துவப் பணி ஆற்றினார். "சத்தியதீபம்" இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.
ஆயர் பட்டம்
[தொகு]திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் 1953 அக்டோபர் 28ஆம் நாளில் பாறேக்காட்டை எர்ணாகுளம் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமனம் செய்தார். அவருக்கு அதே ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் ஆயர் திருப்பொழிவு வழங்கியவர் கர்தினால் யூஜின் திஸ்ஸரான் ஆவார். திருப்பொழிவுச் சடங்கின் போது பேராயர் ஜோசப் அற்றிப்பெற்றி, மற்றும் ஆயர் ஜோர்ஜ் ஆலப்பாட் ஆகியோர் துணைநின்றனர்.
1956, சனவரி 10ஆம் நாள் எர்ணாகுளம் பேராயர் அகஸ்தீன் கண்டத்தில் இறந்ததைத் தொடர்ந்து, பாறேக்காட்டில் அம்மறைமாவட்டத்தின் பரிபாலகராக இருந்தார். பின்னர், எர்ணாகுளம் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக அதே ஆண்டு சூலை 20ஆம் நாள் உயர்த்தப்பட்டார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பங்கேற்பு
[தொகு]பாறேக்காட்டில் 1962-1965இல் நிகழ்ந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் நான்கு அமர்வுகளிலும் கலந்துகொண்டார்.
பிற பதவிகள்
[தொகு]பாறேக்க்காட்டில் இந்திய ஆயர் பேரவையின் துணைத்தலைவராக 1966, அக்டோபர் 20ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். உரோமையில் அமைந்துள்ள கீழைத் திருச்சபைகள் பேராயத்தின் தலைவர் கர்தினால் மாக்சிமிலியான் ஃப்யூர்ஸ்டன்பெர்க் 1968, பெப்ருவரி 27இல் இந்தியாவுக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, பாறேக்காட்டில் அப்பேராயத்தில் ஓர் உறுப்பினராக நியமனம் பெற்றார்.
1972-1987 கால கட்டத்தில் கர்தினால் பாறேக்காட்டில் கீழைத் திருச்சபைகளுக்கான சட்டத்தொகுப்பை உருவாக்கிய குழுவுக்குத் தலைவராகச் செயல்பட்டார்.
அவர் அனைத்திந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக இரு காலகட்டங்களில் செயல்பட்டார் (1972-1974; 1974-1976).
கர்தினால் பதவி
[தொகு]1969, ஏப்பிரல் 28ஆம் நாள் திருத்தந்தை ஆறாம் பவுல் பேராயர் பாறேக்காட்டிலைக் கர்தினால் நிலைக்கு உயர்த்தினார்.
திருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்பு
[தொகு]கர்தினால் பாறேக்காட்டில் இருமுறை திருத்தந்தைத் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்று வாக்களித்தார். முதல்முறை 1978 ஆகத்து 25-26இல் [[முதலாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|முதலாம் யோவான் பவுல்) திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் குறுகிய காலத்தில் இறந்துவிட்டதால் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க மறுபடியும் கர்தினால் குழு கூட்டப்பட்டது.
அவ்வாறு நடந்த இரண்டாம் கூட்டத்தின்போது, 1978 அக்டோபர் 14-16இல், இரண்டாம் யோவான் பவுல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குறிக்கோளுரை
[தொகு]பாறேக்காட்டில் ஆயராகத் திருப்பொழிவுபெற்ற வேளையில் தேர்ந்துகொண்ட குறிக்கோளுரை "Da Quod Jubes" என்னும் இலத்தீன் சொற்றொடர் ஆகும். அதன் பொருள் "நீர் கட்டளையிடுவதை எனக்குக் கொடும்" என்பது. இச்சொற்றொடர் புனித அகுஸ்தீன் என்னும் மறைவல்லுநரின் எழுத்துகளிலிருந்து பெறப்பட்டது. மனிதர் சுதந்திர உணர்வோடு அறவாழ்வு வாழ்வதற்கு (கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கு) கடவுளின் அருள் தேவை என்னும் கருத்தை இவ்வாறு அகுஸ்தீன் வெளிப்படுத்தினார். அக்கருத்தையே பாறேக்காட்டில் தம் குறிக்கோளுரையாகக் கொண்டார்.
பணித் துறப்பும் இறப்பும்
[தொகு]கர்தினால் பாறேக்காட்டில் 1984, ஏப்பிரல் பணியிலிருந்து விலகினார். அவர் 1987ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 20ஆம் நாள் காலமானார். அவர் எர்ணாகுளம் உயர்மறைமாவட்ட முதன்மைக் கோவிலில் பெப்ருவரி 22ஆம் நாள் அடக்கம் செய்யப்பட்டார்.
வழிபாட்டு முறை பற்றிய சர்ச்சை
[தொகு]பாறேக்காட்டில் எர்ணாகுளம் பேராயராகப் பணிபுரிந்த காலத்திலும் அதற்கு முன்னரும் சீரோ-மலபார் சபை[2][3] தன் வழிபாட்டு முறையைப் புதிப்பது பற்றி தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தது. வத்திக்கான் நிர்வாகத் துறையாகிய கீழைத் திருச்சபைகள் பேராயம் சீரோ-மலபார் சபை வரலாற்றில் கல்தேய சபையோடு தொடர்புகொண்டிருந்ததைக் காட்டி, அதன் சீர்திருத்தம் பண்டைய கல்தேய முறைக்கு ஏற்ப அமையவேண்டும் என்னும் கருத்தைத் தெரிவித்தது.
ஆனால், பாறேக்காட்டில் சீரோ-மலபார் சபை இந்தியாவுக்கே உரிய பாணியில், கீழைத் திருச்சபை மரபுகளை மதித்து, கல்தேய மயமாக்கலுக்கு[4] இடம்கொடாமல் தன்னைப் புதுப்பிக்க வேண்டும் என்னும் கருத்துக் கொண்டிருந்தார். இதனால் பழைமைவாதிகளுக்கும் புதுமைவாதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு வலுத்தது. அந்தச் சர்ச்சையில் பாறேக்காட்டில் புதுமைவாதிகளுக்கு ஆதரவு அளித்தார் என்று பரவலாகக் கருதப்பட்டது.