உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேம்ஸ் பாண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜேம்ஸ் பாண்ட் (ஆங்கில மொழி: James Bond) என்பது இயான் பிளெமிங் என்பவரால் 1952 இல் உருவாக்கப்பட்ட ஒரு கனவுருப்பனை உளவாளி கதைப்பாத்திரம் ஆகும். இவர் பிரித்தானிய இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். இவரது இரகசிய குறிப்பெண் 007 ஆகும். இக்கதாப்பாத்திரத்தை வைத்துப் பல புத்தகங்கள், திரைப்படங்கள், வானொலி நிகழ்ச்சிகள், காமிக்ஸ் கதைகள், காணொலி விளையாட்டுக்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

கதாபாத்திரம் உருவான விதம்

[தொகு]

இயான் தனது அனைத்துப் படைப்புகளுக்கும் ஒரு மையக் கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பாண்ட் ஒரு கப்பற்படை ஆணையர். மேலும் இவர் எம்.ஐ6 எனப்படும் பிரித்தானிய இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது தான் சந்தித்த பல கப்பற்படைத் தளபதிகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதாபாத்திரத்தை இவான் உருவாக்கினார். இவான் ஜேம்ஸ்பாண்டின் கதாபாத்திரத்தைப் பற்றி குறிப்பிடும் போது 'நான் இரண்டாம் உலகப்போரில் சந்தித்த அனைத்துத் தளபதிகள் மற்றும் ஆணையர்களின் கலவையே ஜேம்ஸ்பாண்டின் கதாபாத்திரம்' எனக் குறிப்பிடுகின்றார். நார்வேயிலும் கிரீஸிலும் இரண்டாம் உலகப் போரின் போது இரகசிய உளவாளியாக வேலைப் பார்த்த தனது அண்ணன் பீட்டரை வைத்தும், அண்ணன் நண்பர்களின் நடவடிக்கைகளை வைத்தும் ஜேம்ஸ் பாண்டின் செயல்பாடுகளையும், உடை அலங்காரங்களையும் இவான் உருவாக்கியுள்ளார். கதாபாத்திரத்திற்கு உண்டான பெயரை அமெரிக்க பறவைகள் வல்லுநரான ஜேம்ஸ்பாண்டின் பெயரை வைத்தார். இவான் தனது கதாபாத்திரத்திற்காக எளிமையான மற்றும் மந்தமான உணர்வை தரக்கூடிய ஒரு பெயரைத் தேடி ஜேம்ஸ்பாண்ட் என்று வைத்ததாகக் கூறுகிறார். ஜேம்ஸ் பாண்டின் இதர பழக்கவழக்கங்கள் மற்றும் குணாதிசயங்களை இவான் தனது சொந்த கருத்துக்களின் பிம்பத்தை வைத்தே உருவாக்கியுள்ளார். உதாரணத்திற்கு முட்டை உணவுகள், கால்ஃப் விளையாடுவது, மற்றும் சூதாட்டம் விளையாடுவது ஆகியவை இவானின் விருப்பங்களாகும். அதையே ஜேம்ஸ்பாண்டின் விருப்பங்களாக இவான் சித்திரித்துள்ளார்.

புத்தகங்கள்

[தொகு]

எழுத்தாளர் இயான் பிளெமிங் ஜேம்ஸ் பாண்டு கதாப்பாத்திரத்தை வைத்து பன்னிரண்டு நாவல்களையும், இரண்டு சிறுகதைகளையும் உருவாக்கியுள்ளார். 1964ஆம் வருடம் அவர் இறந்தார். 1953 முதல் 1966 வரை உள்ள காலகட்டத்தில் இவானின் புத்தகங்கள் வெளிவந்தன. அவரின் மறைவுக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக கிங்ஸ்லி எமிஸ், கிரிஸ்டோபர் வுட், ஜான் கார்ட்னர், ரேமண்ட் பென்சன், செபஸ்டின் ஃபல்க்ஸ், ஜெஃப்ரி டெவர், வில்லியம் பாய்ட் மற்றும் அந்தோணி கோரோவிட்ஸ் ஆகிய எட்டு எழுத்தாளர்களும் ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்துப் புத்தகங்கள் எழுதத் தொடங்கினர். இவர்களில்லாமல் சாஃப்ர்லி ஹிக்சான் எனும் எழுத்தாளர் இளம் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்து தொடர்கதைகளை எழுதி வருகிறார், கேத் வெஸ்ட்புரூக் என்பவர் மூன்று நாவல்களை எழுதியுள்ளார். கடைசியாக வந்த இரு ஜேம்ஸ்பாண்ட் புத்தகங்கள் எழுத்தாளர் அந்தோணி கோரோவிட்ஸ் எழுதிய 'ட்ரிக்கர் மோர்டிஸ்' (செப்டம்பர் 2015) மற்றும் 'ஃபாரெவர் அன்ட் த டே' (மே 2018) ஆகும்.

திரைப்படங்கள்

[தொகு]

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இத்திரைப்பட தொடர்கள் பல காலமாக வெளிவரும் வெற்றித்தொடர்வரிசையாக அறியப்படுகிறது. இத்தொடர்களின் மொத்த வசூல் மட்டும் 7.040 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையைத் தாண்டியுள்ளது. இதனால் இதுவரை அதிக வசூலை ஈட்டிய நான்காவது திரைப்படத் தொடராக ஜேம்ஸ்பாண்ட் உள்ளது. இத்திரைப்படத் தொடர் 1962ஆம் ஆண்டு நடிகர் சியான் கானரி நடித்த டாக்டர் நோ என்பதில் தொடங்கி 2015ஆம் ஆண்டு நடிகர் டேனியல் கிரெய்க் நடித்த ஸ்பெக்டர் திரைப்படம் வரை மொத்தம் இருபத்திநான்கு திரைப்படங்களாகும். இத்திரைப்படத் தொடரை இயான் தயாரிப்பாளர்கள் தயாரிக்கின்றனர். 2018ஆம் ஆண்டு வரை இருபத்திநான்கு ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்களை இவர்கள் உருவாக்கியுள்ளனர். இரண்டு ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் வேறு தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பிலும் வெளிவந்துள்ளது. ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் வெவ்வேறு அம்சங்களால் இரசிகர்களை ஈர்த்தாலும், இசையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஜேம்ஸ் பாண்டின் இசை இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. மேலும் பல முறை ஆஸ்கருக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து இருபத்தி ஏழு திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சான் கானரி, டேவிட் நிவேன், ஜார்ஜ் லாசன்பி, ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் புரோஸ்னன் மற்றும் டேனியல் கிரெய்க் போன்றோர் 'ஜேம்ஸ் பாண்ட்' என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடித்துள்ளார்கள்.[1][2]

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் பட்டியல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Poliakoff, Keith (2000). "License to Copyright – The Ongoing Dispute Over the Ownership of James Bond". Cardozo Arts & Entertainment Law Journal 18: 387–436. 
  2. Shprintz, Janet (29 March 1999). "Big Bond-holder". Variety. https://www.variety.com/article/VR1117492814?refCatId=13. "Judge Rafeedie ... found that McClory's rights in the "Thunderball" material had reverted to the estate of Fleming" 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_பாண்ட்&oldid=3925126" இலிருந்து மீள்விக்கப்பட்டது